Published:Updated:

ஜாலியன் வாலாபாக் அறக்கட்டளை தொடர்பான பா.ஜ.க-வின் சர்ச்சை மசோதா! - கொதிக்கும் காங்கிரஸ்

ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவுச் சின்னத்தை நிர்வகிக்கும் அறக்கட்டளையிலிருந்து காங்கிரஸ் கட்சித் தலைவரை நீக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஜாலியன் வாலாபாக்
ஜாலியன் வாலாபாக்

பஞ்சாப் மாநிலத்தில் ஜாலியன் வாலாபாக் நினைவுச்சின்னம் அமைந்துள்ளது. 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி, ஜாலியன்வாலா பாக்கில் நான்கு புறமும் சுவர்கள் சூழ்ந்த ஒரு திடலில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.

ஜாலியன்வாலா பாக்
ஜாலியன்வாலா பாக்

அவர்கள் மீது, ஆங்கிலேய ராணுவ அதிகாரி ஜெனரல் டயரின் உத்தரவின் பேரில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. அதில், நூற்றுக்கணக்கானோர் பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தியாவையே உலுக்கிய சோக சம்பவம் அது.

அந்தச் சம்பவத்தின் நினைவாக, 1951-ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் நினைவகம் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. அதை நிர்வகிக்க அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அந்த அறக்கட்டளையின் நிரந்தர உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் தலைவர் இருந்துவருகிறார். இந்த நிலையில், அந்த அறக்கட்டளையிலிருந்து காங்கிரஸ் கட்சித் தலைவரை நீக்குவதற்காக முந்தைய பி.ஜே.பி ஆட்சியில் ஒரு மசோதா கொண்டுவரப்பட்டது. ஆனால், அது நிறைவேற்றப்படாமல் காலாவதியானது.

ஜாலியன் வாலாபாக்
ஜாலியன் வாலாபாக்

இந்த நிலையில், தற்போது மீண்டும் அதுபோன்ற மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. மத்திய கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், மசோதாவை அறிமுகம் செய்தார். அதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர் எதிர்ப்பு தெரிவித்தார். அவர், ``இந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது. இது ஒரு தேசிய நினைவுச் சின்னம். நம்முடைய வரலாற்றுக்கும் பாரம்பர்யத்துக்கும் துரோகம் இழைக்கக் கூடாது” என்றார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பதிலளித்த கலாசாரத்துறை அமைச்சர், ``கடந்த 40-50 ஆண்டுகளில் இந்த நினைவுச் சின்னத்துக்கு காங்கிரஸ் கட்சி எதையும் செய்யவில்லை. இந்த மசோதா விவாதத்துக்கு வரும்போது, இது தொடர்பாக நீண்ட பதிலைத் தருகிறேன்” என்றார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அறக்கட்டளை உறுப்பினராக நியமிக்கப்பட்டவரை, அவரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே எந்தவொரு காரணமும் இல்லாமல் நீக்குவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுகிறது.

அந்த அறக்கட்டளையின் தலைவராக பிரதமர் இருக்கிறார். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர், கலாசாரத் துறை அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், பஞ்சாப் கவர்னர், பஞ்சாப் முதல்வர் ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.

மோடி
மோடி

வீரேந்திர கட்டாரியா, அம்பிகா சோனி, ஹர்வேந்திர சிங் ஹன்ஸ்பால் ஆகியோர் நினைவுச் சின்ன அறக்கட்டளையின் உறுப்பினர்களாக 2013-ம் ஆண்டு நியமிக்கப்பட்டதாக அறக்கட்டளையின் இணையத்தில் கூறப்பட்டுள்ளது.