Published:Updated:

வைகோ வாழ்க்கை வரலாறு: தொண்டரணி முதல் தனிக்கட்சி வரை..! - முழுமையான தொகுப்பு

1978-ம் ஆண்டு தி.மு.க தொண்டரணியை ஏற்படுத்தியவர், 1981 வரை அதன் தலைவராக இருந்து நான்கு முறை தொண்டர்படை பயிற்சி முகாம்களை நடத்தினார். அதற்காக வைகோ கைதுசெய்யப்பட்டதும் உண்டு.

பிறப்பும் குடும்பப் பின்னணியும்:

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகிலுள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் 1944-ம் ஆண்டு, மே 22-ம் நாள் வையாபுரி-மாரியம்மாள் தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார் வை.கோபால்சாமி என்கிற வைகோ. இவருக்கு ரேணுகாதேவி என்ற மனைவியும், துரை வையாபுரி என்ற மகனும் ராஜலெட்சுமி, கண்ணகி என இரு மகள்களும் இருக்கிறார்கள்.

கல்விப் பயணம்:

வைகோ தனது பள்ளிப்படிப்பை 1960-ம் ஆண்டு கலிங்கப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். 1961-ம் ஆண்டு பி.யூ.சி படிப்பையும், 1964-ம் ஆண்டு பி.ஏ பட்டப்படிப்பையும் பாளையங்கோட்டையிலுள்ள புனித சேவியர் கல்லூரியில் படித்தார். அதன் பிறகு, 1966-ம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் தனது எம்.ஏ பட்டப்படிப்பையும், 1969-ம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் பயின்றார்.

வைகோ
வைகோ

அரசியல் பயணத்தின் தொடக்கப்புள்ளி - தி.மு.க:

1964-ம் ஆண்டு தனது மாணவப் பருவத்தில் சென்னையிலுள்ள கோகலே மன்றத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு கருத்தரங்கில், பேரறிஞர் அண்ணா முன்னிலையில் பேசி தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார் வைகோ.1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர், தி.மு.க-வின் மாணவர் அணியில் இணைந்து மிகத் தீவிரமாகச் செயல்பட்டார். மாநிலக் கல்லூரியில் பயின்றபோது தமிழ்மன்றத் தலைவராக, சட்டக் கல்லூரியில் சிறந்த பேச்சாளராக, திமுக மாணவரணி இணைச் செயலாளராக, அதன் பிறகு இளைஞரணி அமைப்புச் செயலாளராக, தேர்தல் பணிக்குழுச் செயலாளராக எனக் கட்சியில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்தார்.

1970-ம் ஆண்டில் கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவராகவும், குருவிகுளம் ஒன்றியப் பெருந்தலைவராகவும், திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் மிக இளம் வயதிலேயே பணியாற்றினார். 1978-ம் ஆண்டு தி.மு.க தொண்டரணியை ஏற்படுத்தியவர், 1981 வரை அதன் தலைவராக இருந்து நான்கு முறை தொண்டர்படை பயிற்சி முகாம்களை நடத்தினார். அதற்காக அவர் கைதுசெய்யப்பட்டதும் உண்டு.

ஈழப் பயணமும் கட்சியிலிருந்து நீக்கமும்:

1989-ம் ஆண்டு, பிப்ரவரி 6-ம் நாள் அவர் எம்.பி-யாக இருந்தபோது, தி.மு.க-வின் தலைவரான இருந்த கருணாநிதி உள்ளிட்ட யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் ஈழத்துக்கு ரகசியப் பயணம் சென்றார். அங்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துவிட்டு, அங்கிருந்தபடியே கருணாநிதிக்கு மன்னிப்பு கடிதத்தையும் எழுதினார். சுமார் 23 நாள்கள் கழித்து தமிழகம் வந்த வைகோ-வின் மீது திமுக தலைமை கடும் அதிருப்தியில் இருந்தது.

வைகோ
வைகோ

அதன் பிறகு 1991-ல் நடந்த திமுக ஆட்சிக் கவிழ்ப்பு, ராஜீவ் காந்தி படுகொலை போன்றவை புலிகள் ஆதரவாளரான வைகோவின் மீது கருணாநிதிக்கு கடும் வெறுப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து திமுக சார்பில் நடைபெற்ற கூட்டங்களுக்கு அழைப்பு கொடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுவந்தார். 1991-ம் ஆண்டு வைகோவை கட்சியைவிட்டு நீக்கும் முயற்சிகளை கருணாநிதி மேற்கொள்ளவே, கட்சியிலும் தொண்டர்களுக்கு மத்தியில் வைகோவுக்கு இருந்த செல்வாக்காலும் அது முறியடிக்கப்பட்டது. இருப்பினும், 1993-ம் ஆண்டு, அக்டோபர் 3-ம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அனுப்பிய கடிதத்தில் ``வை.கோபால்சாமியின் அரசியல் ஆதாயத்துக்காக விடுதலைப்புலிகள் உங்களைக் கொலை செய்ய திட்டம் வைத்துள்ளனர்” என்று எழுதியிருந்தார். இதைக் காரணமாகக் காட்டிய கருணாநிதி, வைகோ மீது கொலைப்பழி சுமத்தி தி.மு.க-வைவிட்டு வெளியேற்றினார். ஆனால், இந்த நீக்க நடவடிக்கைக்கு உண்மையான காரணம், ``கட்சியில் வைகோவுக்கு வளர்ந்து வரும் செல்வாக்கும், அதனால் தனது அரசியல் வாரிசு ஸ்டாலின் வளர்ச்சி தடைப்படும்’ எதிர்காலம் கேள்விக்குறியாகும்" என்ற உள்நோக்கம்கொண்ட கருணாநிதியின் சுயநலமும் குடும்ப அரசியலும்தான் என வைகோவும், அவரின் ஆதரவாளர்களும் கருத்துகளை முன்வைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனிப் பயணமும் ம.தி.மு.க உதயமும்:

தி.மு.க-விலிருந்து வைகோ நீக்கப்பட்டதும், தமிழகம் முழுவதும் அவரின் ஆதரவு தி.மு.க தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கருணாநிதியின் செயலைக் கண்டித்தும், அவரை நீக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் இடிமழை உதயன், நொச்சிப்பட்டி தண்டபாணி, கோவை மேலப்பளையம் ஜஹாங்கீர், காமராசபுரம் பாலன், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகியோர் தீக்குளித்து இறந்தனர். வைகோவுக்கு ஆதரவாக 9 மாவட்டச் செயலாளர்களும், 400-கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் இணைய அவர்களையும் தி.மு.க-விலிருந்து நீக்கினார் கருணாநிதி.

1994-ம் ஆண்டு, மே 6-ம் நாள் சென்னை தியாகராயநகரிலுள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் பொதுக்குழுவைக் கூட்டிய வைகோ, தனது ஆதரவாளர்களோடு `மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார்.

சிறைப் பயணம்:

வைகோ தனது அரசியல் வாழ்வில் இதுவரை 30 முறைக்கும் மேல் சிறை சென்றுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் கழித்துள்ளார். முதன்முறையாக, 1976-ம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ், திமுக-வின் முதல் ஆளாகக் கைதுசெய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறைவாசம் அனுபவித்தார். 1977-ம் ஆண்டு, பிரதமர் இந்திரா காந்தியின் மதுரை வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி போராட்டம் நடத்தியதால் கைதுசெய்யப்பட்டு 40 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.1978 முதல் 1981 வரையிலான காலகட்டங்களில், திமுக-வில் தொண்டரணிப் படையை ஏற்படுத்தி பயிற்சி முகாம்கள் நடத்தினார். ``ஆட்சிக்கு எதிராக ராணுவத்தை உருவாக்குகிறார் வைகோ" என்று சொல்லி முதல்வர் எம்.ஜி.ஆரால் கைதுசெய்யப்பட்டார். 2002-ம் ஆண்டு, மதுரை திருமங்கலம் பொதுக்கூட்டத்தில், ``விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன். இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன்” என்று கூறினார். ``தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுகிறார்" எனக் குற்றம் சுமத்தப்பட்டு முதல்வர் ஜெயலலிதாவால் ஒன்றரை (19 மாதங்கள்) ஆண்டுகள், `பொடா’ வழக்கில் சிறையிலடைக்கப்பட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் வாழ்க்கை வரலாறு: எம்.ஜி.ஆர் ரசிகன் டு அதிமுக ஒருங்கிணைப்பாளர்! - முழுமையான தொகுப்பு

2008-ம் ஆண்டு `ஈழத்தில் நடப்பது என்ன?’ என்ற தலைப்பில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற கருத்தரங்கில், `விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும்’ பேசியதாக தேசத்துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டார்.

2009-ம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் `நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற தனது புத்தகத்தை வெளியிட்டு, ``இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் நிறுத்தப்படவில்லை என்றால், இந்தியா ஒரே நாடாக இருக்காது!’’ என்று பேசினார். இதற்காக முதல்வர் கருணாநிதியால், தேசத்துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டார்.

வைகோ
வைகோ

நாடாளுமன்ற உறுப்பினராக...

1978-ம் ஆண்டு தி.மு.க சார்பில், முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் வைகோ. 1984 மற்றும் 1990 ஆண்டுகளில், அடுத்தடுத்து மூன்று முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ச்சியாக 18 ஆண்டுகள் தி.மு.க சார்பில் பணியாற்றினார். புதிதாகக் கட்சி தொடங்கிய பிறகு, 1996-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் புதிய கூட்டணி அமைத்தார் வைகோ. சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார்.

1998-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், அ.தி.மு.க-பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்தார். சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வைகோ, முதன்முறையாக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதாவால் மத்தியில் இருந்த பா.ஜ.க ஆட்சி கலைக்கப்படவே, 1999-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகித்தார். மீண்டும் சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட வைகோ, வெற்றிபெற்று இரண்டாவது முறையாக மக்களவை உறுப்பினரானார். 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து, விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட வைகோ தோல்வியடைந்தார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து, விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட வைகோ மீண்டும் தோல்வியடைந்தார். 2019-ம் ஆண்டு தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த வைகோ, சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு நான்காவது முறையாக மாநிலங்களவை உறுப்பினரானார்.

வைகோ
வைகோ

சட்டமன்ற உறுப்பினராக...

1996-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்டார். முதன்முறையாக சட்ட மன்ற உறுப்பினராகப் போட்டியிட்ட வைகோ, குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2001-ம் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ம.தி.மு.க அனைத்து தொகுதிகளிலும் தோற்றது. 2006-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து, 35 தொகுதிகளில் போட்டியிட்டு, ஆறு தொகுதிகளில் வென்று முதன்முறையாக தமிழக சட்டமன்றத்துக்குள் நுழைந்தது. 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், ம.தி.மு.க போட்டியிடாமல் தேர்தலைப் புறக்கணித்தது. 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், ம.தி.மு.க தலைமையில் தே.மு.தி.க., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து, தி.மு.க-அ.தி.மு.க-வுக்கு மாற்றாக `மக்கள் நலக்கூட்டணியை’ அமைத்தன. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, தேர்தலைச் சந்தித்த கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவின. 2021-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து ஆறு இடங்களில் வைகோவின் ம.தி.மு.க போட்டியிடுகிறது. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் முதன்முறையாக இணைகிறது.

மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு: வெற்றிகள், தோல்விகள், சாதனைகள், சறுக்கல்கள்! - முழுமையான தொகுப்பு

சாதனைகளும் விமர்சனங்களும்:

மே 1 தொழிலாளர் தினத்தை நாடு முழுவதும் `அரசு பொது விடுமுறை’யாக அறிவிக்கக் காரணமானவர் வைகோ. 30 முறை கைதுசெய்யப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் கழித்து திராவிட இயக்க தலைவர்களிலேயே மிக அதிக நாள்கள் சிறையில் இருந்தவர். தான் சிறையில் இருக்கும்போது தனது தொண்டர்களுக்கு எழுதிய 18,000-க்கும் மேற்பட்ட கடிதங்கள், தன்னை வந்து சந்தித்த அரசியல் தலைவர்கள், 62,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்காக `கின்னஸ் சாதனை’ புத்தகத்தில் இடம்பெற்றார். நாடாளுமன்றத்தில் திறம்படச் செயல்பட்டதால் `நாடாளுமன்றப் புலி’ என்றழைக்கப்பட்டவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். கேட்பவர்களை மெய்மறக்கச் செய்யும் பேச்சாற்றலுக்குச் சொந்தக்காரரான வைகோ, தனது அரசியல் பொது வாழ்வில் `பொன்விழா’ கண்டவர். மதுவிலக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, முல்லைப் பெரியாறு, காவிரி, ஸ்டெர்லைட், மீத்தேன், நியூட்ரினோ, கச்சத்தீவு, தமிழீழம் என அனைத்து தமிழர் உரிமை பிரச்னைகளிலும் முதல் ஆளாகக் குரல்கொடுத்து, போராட்டங்களை முன்னெடுப்பவர் என வைகோவின் சாதனைப் பட்டியல் ஏராளம். வைகோ தனது பொதுவாழ்வுக்காக இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான கிலோமீட்டர் பயணம் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

வைகோ
வைகோ

அரசியல் வியூகம் இல்லாத தலைவர், தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுகிறார், உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவுகளை எடுக்கிறார், கட்சியின் வளர்ச்சி, தொண்டர்களின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்காமல் செயல்படுகிறார் போன்ற விமர்சனங்கள் வைகோவிடமிருந்து பிரிந்து சென்ற நிர்வாகிகளால் முன்வைக்கப்படுகின்றன. எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் எதிர்க்கிறார், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிக்கிறார், இந்திய ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும்படி பிரிவினைவாதம் பேசுகிறார் என மாற்றுக்கட்சியினராலும், இந்திய தேசியவாதிகளாலும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார் வைகோ.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு