Election bannerElection banner
Published:Updated:

ராமதாஸ் வாழ்க்கை வரலாறு: மக்கள் மருத்துவர் முதல் பா.ம.க நிறுவனர் வரை..! - முழுமையான தொகுப்பு!

பா.ம.க நிறுவனர் ராமதாஸ்
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ( Photo: Vikatan )

புதிதாகக் கட்சி ஆரம்பித்தவுடன் ராமதாஸ், ``நான் வாழ்நாளில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். நானோ, எனது குடும்ப உறுப்பினர்களோ கட்சியில் எந்தப் பதவிக்கும் வர மாட்டார்கள். சட்டமன்றத்துக்கோ, நாடாளுமன்றத்துக்கோ என் கால் செருப்புக்கூட செல்லாது!’’ என்றார்.

பிறப்பும் பின்னணியும்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள கீழ்விசிறி கிராமத்தில் ஜூலை 25, 1939-ம் ஆண்டு சஞ்சீவிராயக் கவுண்டர் - நவநீத அம்மாள் தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். இவரின் மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு அன்புமணி என்ற மகனும் ஶ்ரீகாந்தி, கவிதா ஆகிய இரு மகள்களும் இருக்கிறார்கள். அன்புமணி தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

படிப்பும் பணியும்:

பள்ளிப்படிப்பைச் சொந்த ஊரிலுள்ள காந்திஜி ஆதாரப் பள்ளியில் பயின்ற இவர், தனது மருத்துவப் படிப்பை சென்னை மருத்துவக் கல்லூரியில் நிறைவு செய்தார். படிப்பு முடிந்ததும், திண்டிவனத்திலுள்ள அரசு மருத்துவமனையில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர், ஏழை மக்களுக்குச் சேவை செய்யும்விதத்தில், சொந்தமாக க்ளினிக் ஒன்றைத் தொடங்கி, 2 ரூபாய், 3 ரூபாய் என மிகக்குறைந்த கட்டணத்தில் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் பார்த்துவந்தார்.

ராமதாஸ்
ராமதாஸ்

புதிய சங்கம்: மக்கள் மருத்துவர் டு வன்னியர் சங்க நிறுவனர்:

மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டிருந்த ராமதாஸ், தான் சார்ந்த வன்னியர் சமுதாயத்தின் பின்தங்கிய நிலையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார். அவர்களின் ஏழ்மை நிலையை அகற்றி கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த சமுதாயமாக மாற்ற வேண்டும் என்று கூறி, வன்னியர் சமுதாய அமைப்புகளின் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் விளைவாக 28 வன்னியர் அமைப்புகளை ஒன்றிணைத்து, ஓய்வுபெற்ற தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஈ.பி.ராயப்பா, முன்னாள் எம்.பி கிடங்கல் ஏ.ஆர்.சம்பந்தம், பேராசிரியர் தீரன், ஏ.கே.நடராசன் உள்ளிட்ட வன்னியர் சமுதாயத் தலைவர்களுடன் சேர்ந்து `வன்னியர் சங்கம்’ என்ற புதிய அமைப்பை 1980-ம் ஆண்டு, ஜூலை 20-ம் தேதி தொடங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, வன்னியர் சமுதாயத்துக்கு கல்வி - வேலைவாய்ப்பில் `தனி இட ஒதுக்கீடு’ வேண்டும் என்று கேட்டு, 1980-ம் ஆண்டு ஈரோடு கருங்கல்பாளையத்தில் இட ஒதுக்கீடு கோரி முதல் மாநாட்டை நடத்தினார். 1984-ம் ஆண்டு சென்னை மெரினாவில் பட்டினிப் போராட்டம், 1985-ல் சென்னையில் லட்சக்கணக்கானோருடன் பேரணி மற்றும் மாநாடு என தொடர்ந்து, 1986-ல் மட்டும் பல்வேறு காலகட்டங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், பட்டை நாமப் போராட்டம், எம்.ஜி.ஆருக்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டம், ஒரு நாள் சாலை மறியல் போராட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் எனத் தொடர்ச்சியான பல போராட்டங்களை நடத்தினார்.

தமிழகத்தில் வன்னியர் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குச் சென்று, மக்கள் சந்திப்பை நடத்தினார். `கனல்’ என்ற இதழைத் தொடங்கி எழுதியும் வந்தார். இதன் விளைவாக அரசியல், பொருளாதாரம், வர்க்கம் என திசைக்கொரு புறமாகப் பிரிந்து கிடந்த வன்னியர் சமுதாய மக்களில் பெரும்பாலானவர்களை ஒன்று திரட்டினார்.

தொடர் சாலைமறியல் போராட்டம்:

(காவல்துறை துப்பாக்கிச்சூடும்... 21 பேர் பலியும்)

``அனைத்துச் சாதியினருக்கும் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு, வன்னியர் சாதியினருக்கு மாநிலத்தில் 20% மத்தியில் 2% தனி ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை 18% இருந்து 22% ஆக உயர்த்த வேண்டும்’’ போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, 17.9.1987 முதல் 23.9.1987 வரை ஒரு வாரம் தொடர் சாலைமறியல் போராட்டத்தை வன்னியர் சங்கம் சார்பில் அறிவித்தார் ராமதாஸ்.

இந்தப் போராட்டத்தால் தமிழகத்தின் வட மாவட்டங்கள் போக்குவரத்தின்றி முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டன. ஒரு வாரம் நடந்த இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, தமிழக காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தேசிங்கு, வேலு, கோவிந்தன் முதலான 21 பேர் மரணமடைந்தனர். ராமதாஸ் உட்பட 18,000-க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

ராமதாஸ்
ராமதாஸ்

இந்தச் சம்பவத்தின்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., தமிழகம் திரும்பியதும் ராமதாஸ் மட்டுமல்லாமல் அனைத்துச் சமுதாயத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். போராட்டத்தின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்த எம்.ஜி.ஆர்., ஒரு மாதத்துக்குள்ளாகவே காலமானார். பின்னர், 1989-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று முதல்வரான கருணாநிதி, வன்னியர் சமுதாயத்துடன் சேர்த்து 108 சமுதாயங்களை `மிகவும் பிற்படுத்தப்பட்டோர்’ (MBC) என்ற புதிய பட்டியலில் இணைத்து 20% இட ஒதுக்கீட்டை வழங்கினார்.

புதிய அரசியல் கட்சி: வன்னியர் சங்கம் டு பாட்டாளி மக்கள் கட்சி

தேர்தலைப் புறக்கணித்து அரசியல் சார்பற்ற இயக்கமாக இருந்த வன்னியர் சங்கம், ஜூலை 16, 1989-ம் ஆண்டு `பாட்டாளி மக்கள் கட்சி’யாகப் பரிணமித்தது. புதிதாகக் கட்சி ஆரம்பித்தவுடன் ராமதாஸ், ``நான் வாழ்நாளில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். நானோ எனது குடும்ப உறுப்பினர்களோ கட்சியில் எந்தப் பதவிக்கும் வர மாட்டார்கள். சட்டமன்றத்துக்கோ, நாடாளுமன்றத்துக்கோ என் கால் செருப்புக்கூட செல்லாது! இவை என் இறுதிமூச்சு வரையிலும், எனக்குப் பின்னாலும்கூட அமலில் இருக்கும்!” போன்ற உறுதிமொழிகளை தொண்டர்கள் மத்தியில் அறிவித்தார்.

ராமதாஸ்
ராமதாஸ்

தமிழ்த்தேசியம்: டாக்டர் ராமதாஸ் டு மருத்துவர் ச ராமதாசு!

தமிழ்மொழி வளர்ச்சிக்காக `பொங்கு தமிழ்’ அறக்கட்டளையை ஆரம்பித்தார். `அலை ஓசை’ செய்தித்தாள், `மக்கள் தொலைக்காட்சி’ போன்ற செய்தி ஊடகங்களைத் தொடங்கி பிறமொழிக் கலப்பில்லாத தனித்தமிழை வளர்த்தெடுத்தார்.

தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழிலேயே பெயர் சூட்டப்பட வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்காக, தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். சாதிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த தமிழகத்தில் 100 இடங்களில் அம்பேத்கர் சிலைகள் நிறுவும் திட்டத்தை ஆரம்பித்தார். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழக முதல்வராக வர வேண்டும் எனக் குரலெழுப்பினார்.

1988-ம் ஆண்டு, கும்பகோணம் அருகிலுள்ள குடிதாங்கி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரின் சடலத்தை வன்னியர் சமுதாயம் வசிக்கும் பகுதி வழியாகக் கொண்டு செல்ல எதிர்ப்பு கிளம்பவும், தானே நேரடியாகச் சென்று வன்னிய மக்களின் எதிர்ப்பையும் மீறி சடலத்தைச் சுமந்து சென்று அடக்கம் செய்தார். இதன் காரணமாக, ராமதாஸை `தமிழ்க் குடிதாங்கி’ என்று அழைத்தார் தொல்.திருமாவளவன்.

1992-ம் ஆண்டு சென்னை பெரியார் திடலில் `தமிழர் வாழ்வுரிமை மாநாடு’ நடத்தி, அதில் தமிழீழத்துக்கு ஆதரவான தீர்மானத்தை நிறைவேற்றினார். அந்த மாநாட்டையொட்டி நடந்த பேரணியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவப்படத்தைப் பிடித்து தனித்தமிழீழத்துக்கு ஆதரவான முழக்கங்களும் அரங்கேற, ``பிரிவினைவாத சக்திகளுக்கு தமிழகத்தில் சிறிதும் இடமில்லை” என்று கூறி, ராமதாஸ் உள்ளிட்டோரை தேசத்துரோக வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைத்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. இப்படியாக, ஆரம்பகாலத்தில் தமிழ்த் தேசிய வழியில் பயணித்த ராமதாஸ், காலப்போக்கில் தனது நிலைப்பாட்டைத் தளர்த்தி மீண்டும் சாதிய அரசியலுக்குள்ளாகவே தன்னைச் சுருக்கிக்கொண்டார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

பா.ம.க-வின் அரசியல் பயணம்:

நாடாளுமன்றத் தேர்தலில்...

1989-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், போட்டியிட்ட 33 இடங்களிலும் தோல்வி அடைந்தது பா.ம.க. ஆனால் கட்சி தொடங்கி சில மாதங்களே ஆன சூழலிலும் தனித்து போட்டியிட்டு 15 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 6% வாக்குவங்கியை உறுதி செய்தது.1991-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிட்ட 31 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது பா.ம.க. ராஜீவ் காந்தியின் மரணத்தால் ஏற்பட்ட அனுதாப அலையே தி.மு.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகளின் தோல்விக்குக் காரணமாக அப்போது சொல்லப்பட்டது. 1996-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து 15 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது.1998-ம் ஆண்டு, மத்தியில் இருந்த தேவகவுடா ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்தது பா.ம.க. போட்டியிட்ட ஐந்து இடங்களில் நான்கு இடங்களில் வென்ற பா.ம.க., தலித் எழில்மலையை சுகாதாரத்துறை இணை அமைச்சராக்கியது.

தொல்.திருமாவளவன் வாழ்க்கை வரலாறு: அரசு ஊழியர் முழு நேர அரசியல்வாதியாக மாறிய கதை - முழுமையான தொகுப்பு

1999-ம் ஆண்டு, மத்தியில் இருந்த பா.ஜ.க ஆட்சி ஜெயலலிதாவால் கவிழ்க்கப்பட்டு, நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க இடம்பெற்றது. எட்டு இடங்களில் போட்டியிட்டு ஐந்து இடங்களில் வென்றது. என்.டி.சண்முகம் சுகாதாரத்துறை இணை அமைச்சராகவும், இ.பொன்னுசாமி பெட்ரோலியத்துறை அமைச்சராகவும், ஏ.கே.மூர்த்தி ரயில்வே துறை இணை அமைச்சராகவும் பா.ம.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க போட்டியிட்ட ஆறு இடங்களிலும் வென்றது. பா.ம.க சார்பில் ஆர்.வேலு ரயில்வே துறை இணை அமைச்சராகவும், ராமதாஸின் மகன் அன்புமணி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டனர். 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க போட்டியிட்ட ஆறு இடங்களிலும் தோல்வியடைந்தது. 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து எட்டு இடங்களில் போட்டியிட்ட பா.ம.க., தருமபுரி தொகுதியில் மட்டும் வென்றது. அன்புமணி ராமதாஸ் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் இணைந்த பா.ம.க போட்டியிட்ட ஏழு இடங்களிலும் தோல்வியடைந்தது. கூட்டணி ஒப்பந்தப்படி அ.தி.மு.க சார்பில் ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட, அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினரானார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

சட்டமன்றத் தேர்தலில்...

1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பா.ம.க., பண்ருட்டி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. கட்சியின் முதல் சட்டமன்ற உறுப்பினராக பண்ருட்டி ராமச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996-ம் ஆண்டு தேர்தலில், திவாரி காங்கிரஸ் உடன் சேர்ந்து தேர்தலை சந்தித்த பா.ம.க 116 இடங்களில் போட்டியிட்டு, நான்கு இடங்களில் வென்றது. 2001-ம் ஆண்டு தேர்தலில், அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 27 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க., 20 இடங்களில் வென்றது. 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில், தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 34 இடங்களில் போட்டியிட்ட போட்டியிட்ட பா.ம.க., 18 இடங்களில் வென்றது. 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 30 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க மூன்று இடங்களில் மட்டுமே வென்றது. 2016-ம் ஆண்டு தேர்தலில், பா.ம.க-வின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டு 234 தொகுதிகளிலும் பா.ம.க தனித்துப் போட்டியிட்டது. அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்த பா.ம.க 5.3% வாக்குவங்கியைப் பெற்றது. நடைபெறவிருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 23 தொகுதிகளில் போட்டியிடவிருக்கிறது பா.ம.க.

மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு: வெற்றிகள், தோல்விகள், சாதனைகள், சறுக்கல்கள்! - முழுமையான தொகுப்பு

சாதனைகளும் விமர்சனங்களும்:

வன்னியர் உள்ளிட்ட 108 சமுதாயங்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு மற்றும் அதில் வன்னியர் சமுதாயத்துக்கு 10.5% தனி உள் ஒதுக்கீடு போன்றவை வழங்கப்பட காரணமாக அமைந்தது; பசுமைத்தாயகம் அமைப்பை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புகையிலை ஒழிப்பு போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது; பூரண மது ஒழிப்புக்காகச் சட்டப் போராட்டம் நடத்தி மதுக்கடை திறந்திருக்கும் நேரத்தை குறைக்கவும், தேசிய மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள மதுக்கடைகளை மூடவும் வழிவகை செய்தது; ஒவ்வோர் ஆண்டும் நிழல் நிதிநிலை அறிக்கை மற்றும் மாதிரி வேளாண் அறிக்கை வெளியிட்டு வருவது; தமிழ் வளர்ச்சி சார்ந்த முன்னெடுப்புகள்; தமிழர் உரிமை சார்ந்த போராட்டங்களுக்கு குரல் கொடுப்பது... போன்ற எண்ணெற்ற செயல்பாடுகளை ராமதாஸின் சாதனைகளாகப் பட்டியலிடலாம்.

ராமதாஸ்
ராமதாஸ்

ராமதாஸின் ஆரம்பகாலச் செயல்பாடுகள் அனைவராலும் பாராட்டப்படுபவையாக இருந்தன. ஆனால், காலப்போக்கில் அவரது செயல்பாடுகளில் பெரும் மாற்றம் ஏற்படத் தொடங்கின. சாதி அரசியல், தருமபுரி, மரக்காணம், பொன்பரப்பி போன்ற சாதிக் கலவரங்கள், ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி மாறுவது, கட்சி ஆரம்பித்த புதிதில் செய்த சத்தியத்தை மீறி வாரிசு அரசியல் செய்து, தனது மகன் அன்புமணியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் பா.ம.க இளைஞரணித் தலைவராகவும் ஆக்கியது. வன்னியர் கல்வி அறக்கட்டளையைத் தனது பெயருக்கு மாற்றியது போன்ற பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் இவர்மீது முன்வைக்கப்படுகின்றன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு