Published:Updated:

`லவ் ஜிகாத் மட்டுமல்ல; போதை ஜிகாத்தும் உண்டு!’ - கேரள அரசியலில் விவாதத்தைக் கிளப்பிய பிஷப் கருத்து

பாலா பிஷப் மார் ஜோசப் கல்லறங்காட்
பாலா பிஷப் மார் ஜோசப் கல்லறங்காட்

``கத்தோலிக்க பெண்களையும் இளைஞர்களையும் லவ் ஜிகாத், போதை ஜிகாத் மூலம் வீழ்த்துகிறார்கள். ஆயுதங்களைப் பயன்படுத்திச் சண்டையிட முடியாத பகுதிகளில் இது போன்ற சூழ்சிகளைச் செயல்படுத்துகின்றனர்" எனப் பேசியிருந்தார் பாலா பிஷப் மார் ஜோசப் கல்லறங்காட்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது பாலா மறை மாவட்டம். இந்த மறை மாவட்ட பிஷப் மார் ஜோசப் கல்லறங்காட், சமீபத்தில் குருவிலங்காடு சபையின் யூடியூப் சேனலில் பேசிய வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் பேசிய பிஷப் மார் ஜோசப் கல்லறங்காட், ``கத்தோலிக்க பெண்களையும், இளைஞர்களையும் லவ் ஜிகாத், போதை ஜிகாத் மூலம் வீழ்த்துகிறார்கள். இதற்கு உதவி செய்வதற்காக ஒரு பிரிவினர் கேரளத்தில் வேலை செய்கிறார்கள். ஆயுதங்களைப் பயன்படுத்திச் சண்டையிட முடியாத பகுதிகளில் இது போன்ற சூழ்ச்சிகளைச் செயல்படுத்துகின்றனர். இந்த விஷயத்தில் கத்தோலிக்கக் குடும்பங்கள் கவனமாக இருக்க வேண்டும். கத்தோலிக்க மற்றும் இந்து இளைஞர்களை போதைக்கு அடிமை ஆக்குவதற்காகப் பல இடங்களில் சிறப்புக் குழுக்கள் செயல்படுகின்றன. இதற்கு முன்பு நாம் கண்டிராத அளவுக்கு பிரச்னைகளும் நெருக்கடிகளும் உள்ளன. அதில் லவ் ஜிகாத்தும், நார்க்கோட்டிக் ஜிகாத்தும் (போதை ஜிகாத்தும்) முக்கியமான இரண்டு விஷயங்கள்.

காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன்
காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன்

கேரளம் பயங்கரவாதிகளுக்கு ஆள் சேர்க்கும் மையமாகவும், ஸ்லீப்பர் செல்களின் கேந்திரமாகவும் இருப்பதாக முன்னாள் டி.ஜி.பி லோக்நாத் பெஹரா கூறியிருந்தார். உலகத்தில் நீதியையும், சமாதானத்தையும், இஸ்லாத்தையும் நிலைநாட்ட யுத்தமும் போராட்டங்களும் செய்ய வேண்டும் என சில குழுக்கள் பயங்கரவாதத்தை உயர்த்திப்பிடிக்கின்றன. உலகம் எங்கிலும் வெறுப்பு, மதவெறி, இனவெறி ஆகியவற்றை வளர்க்கும் ஜிகாதி பயங்கரவாதிகள் உள்ளனர். லவ் ஜிகாத் இல்லை என சாதிக்க நினைப்பவர்களுக்கு சில சிறப்பு நன்மைகள் இருக்கலாம்" என பிஷப் பேசியிருந்தார்.

ஏற்கெனவே இந்து அமைப்புகள் பேசிவந்த லவ் ஜிகாத் குறித்து கத்தோலிக்க பிஷப் கூறியிருப்பது அரசியல்ரீதியாகவும் அதிர்வலையைக் கிளப்பியிருக்கிறது. ``எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பிஷப் லவ் ஜிகாத், போதை ஜிகாத் குறித்துப் பேசியிருக்கிறார். கேரளத்தின் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் தகர்க்கும்விதமாக ஒரு மதத் தலைவரே இப்படிப் பேசியிருப்பது ஆபத்தானது. எல்லை கடந்த அறிக்கையை பாலா பிஷப் திரும்பப் பெற வேண்டும்" என அறிக்கைவிட்டிருக்கிறது சி.பி.எம் கட்சியின் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐ. மேலும் போதை ஜிகாத் என்பதை கேள்விப்பட்டதுகூட இல்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன்
கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன்

காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில், ``போதை ஜிகாத் என்பது சங் பரிவாரின் அஜெண்டா. முஸ்லிம், கிறிஸ்தவர்களை அகற்றுவதே அவர்களின் லட்சியம். குழப்பம் ஏற்படுத்துவதற்கு என்றே வந்திருக்கும் சிலருக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கக் கூடாது. சமூகத்தைப் பிளவுபடுத்தும் வகையில் பிரச்னையை வளர்க்கக் கூடாது. மதத் தலைவர்கள் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.

மக்கள் தொகையில் சரி பாதி பேருக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி; அசத்தும் கேரளா!

இது குறித்து பாஜக கேரள மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் கூறுகையில், ``பாலா பிஷப் பயங்கரவாதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கூறியிருக்கிறார். ஆனால் அவரை சி.பி.எம்-மும் காங்கிரஸும் சுற்றிவளைத்து தாக்குகின்ற்ன. வாக்குவங்கிக்காக மதவாத சக்திகளை இரு கட்சிகளும் ஊக்குவிப்பதை இது தெளிவுபடுத்துகிறது. இது சி.பி.எம்., காங்கிரஸ் கட்சிகளின் சகிப்பின்மையைக் காட்டுகிறது" என்றார். பாலா பிஷப்பின் பேச்சு கேரளாவில் அரசியல் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு