Published:Updated:

முகம் மாறும் பா.ஜ.க... உஷாராகும் மோடி!

அமைச்சரவை
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சரவை

இந்தப் பதவியிலிருப்பவர்கள் பா.ஜ.க எங்கேயெல்லாம் தடம் மாறுகிறதோ, அப்போதெல்லாம் கட்சித் தலைமைக்குச் சுட்டிக்காட்டுவார்கள்

முகம் மாறும் பா.ஜ.க... உஷாராகும் மோடி!

இந்தப் பதவியிலிருப்பவர்கள் பா.ஜ.க எங்கேயெல்லாம் தடம் மாறுகிறதோ, அப்போதெல்லாம் கட்சித் தலைமைக்குச் சுட்டிக்காட்டுவார்கள்

Published:Updated:
அமைச்சரவை
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சரவை

2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, முதன்முறையாகத் தனது அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார் மோடி. அதுவும் பிரமாண்ட மாற்றம். இந்த மாற்றத்தில் சீனியர்கள் பலருக்கு கல்தா கொடுக்கப்பட்டு, ஜூனியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘‘கொரோனா தடுப்புப் பணிகளில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் கிடைத்திருக்கும் அவப்பெயர், கழுத்தை நெரிக்கும் பொருளாதார நெருக்கடிகள், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா தேர்தல் தோல்விகள் என மோடியின் இமேஜ் சமீபகாலமாகப் பெருத்த அடி வாங்கியிருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தாமல், வேறொருவரை முன்னிறுத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலுள்ளவர்கள் தயாராகிறார்கள். உஷாரான மோடி, தன்னுடைய பிம்பத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் களமிறங்கியிருக்கிறார். அதற்கான முதல்படிதான் இந்த அமைச்சரவை மாற்றம்’’ என்கிறது டெல்லி வட்டாரம்.

முகம் மாறும் பா.ஜ.க... உஷாராகும் மோடி!

மோடி Vs ஆர்.எஸ்.எஸ்

2014-ல் முதன்முறையாக பிரதமர் ஆனவுடன், பிரிட்டிஷ் எழுத்தாளர் லான்ஸ் பிரைஸ் என்பவர், தன்னுடைய The Modi Effect: Inside Narendra Modi’s Campaign to Transform India என்கிற புத்தகத்துக்காக மோடியைப் பேட்டி எடுத்தார். அந்தப் பேட்டியில், “தங்கள் இன்னல்களிலிருந்து விடுவிக்கும் கடைசி நம்பிக்கையாக மக்கள் என்னைப் பார்த்தனர். கட்சியைவிட என்னைத்தான் மக்கள் நம்பினார்கள்” என்று குறிப்பிட்டார் மோடி. அதாவது, தன்னைத் தூக்கி வளர்த்த ஆர்.எஸ்.எஸ் என்கிற அமைப்பு தனது வெற்றிக்குக் காரணமல்ல என்பதே மோடி கருத்தின் சாரம்சம். இதை ஆர்.எஸ்.எஸ் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மறைந்த பா.ஜ.க தலைவர் வாஜ்பாய் காலம் வரை, கட்சியின் எந்த அசைவாக இருந்தாலும், அதைத் தீர்மானிக்கும் இடமாக ஆர்.எஸ்.எஸ் இருந்தது. ஆனால், மோடியின் காலத்தில் இது மாறிவிட்டது. நம்மிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் ஒருவர், “2014-க்குப் பிறகு, மோடியை பா.ஜ.க முகமாக முன்னிறுத்தி, பல மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. மோடியின் பிம்பம் ஆர்.எஸ்.எஸ் என்கிற வளையத்தையும் தாண்டி பெரிதாகத் தொடங்கியதும், சங்கத்துக்கும் மோடிக்கும் இடையேயான விரிசல் பெரிதாகிவிட்டது. ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த அதிகார மையமாக மோடி மாறினார். அதிகாரிகளைவைத்து அமைச்சர்களை இயக்கினார். அதிகாரிகள் நேரடியாக பிரதமருக்கு ரிப்போர்ட் செய்யும் நடைமுறை வந்தது.

பா.ஜ.க-வின் அமைப்பு பொதுச்செயலாளர் பதவியில் ஆர்.எஸ்.எஸ்-ஸிலிருந்து ஒருவர் நியமிக்கப்படுவது வழக்கம். இந்தப் பதவியிலிருப்பவர்கள் பா.ஜ.க எங்கேயெல்லாம் தடம் மாறுகிறதோ, அப்போதெல்லாம் கட்சித் தலைமைக்குச் சுட்டிக்காட்டுவார்கள். கட்சியின் முக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குவார்கள். ஆட்சியிலிருப்பவர்களுக்கும் சங்கத்துக்கும் பாலமாக இருக்க வேண்டிய முக்கியப் பதவி இது. அந்தப் பொறுப்பிலிருந்த ராம் லால், பா.ஜ.க தலைவர்களான மோடி, அமித் ஷாவுடன் நெருக்கமான தொடர்பை வளர்த்துக்கொண்டு, சங்கத்தின் கருத்தைக் காற்றில் பறக்கவிட்டார். எனவே, அவரைக் கழற்றிவிட ஆர்.எஸ்.எஸ் முடிவெடுத்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, பி.எல்.சந்தோஷ் அமைப்பு பொதுச்செயலாளர் பதவிக்குக் கொண்டுவரப்பட்டார். அதன் பிறகும் எந்த மாற்றமும் இல்லை. ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கும் மோடிக்கும் இடையே விரிசல் பெரிதானது. அது இந்த அமைச்சரவை மாற்றத்திலும் பிரதிபலித்துள்ளது.

முகம் மாறும் பா.ஜ.க... உஷாராகும் மோடி!
முகம் மாறும் பா.ஜ.க... உஷாராகும் மோடி!

கழற்றிவிடப்பட்ட ஹர்ஷ் வர்தன் - தப்பிய நிர்மலா சீதாராமன்!

கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றை நாடு சந்தித்த பிறகு, அமைச்சர்களின் செயல்பாடுகள் மோடிக்கு நெருக்கடியை ஏற்படுத்தின. தன் பார்வையைவிட்டு பல அமைச்சர்களும் தனி ஆவர்த்தனத்தில் இறங்குவதாக மோடி உணர ஆரம்பித்தார். கொரோனா தடுப்புப் பணிகளில் ஏற்பட்ட பிரச்னைகளைக் கோடிட்டுக் காட்டி, எதிர்க்கட்சிகளும் தொடர்ச்சியாக மோடிக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தன. உத்தரகாண்ட்டில் கடந்த நான்கு மாதங்களில் இரண்டு முறை பா.ஜ.க முதல்வர் மாற்றப்பட்டிருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகக் கலகம் வெடிக்கிறது. கர்நாடகாவில் அது தீராத தலைவலியாக மாறியுள்ளது. தருணம் எதிர்பார்த்திருந்த ஆர்.எஸ்.எஸ்., மோடிக்கு எதிராகக் கட்சிக்குள்ளேயே காய்நகர்த்த ஆரம்பித்தது. இவற்றால், தனது அதிகார மையத்தில் கீறல் விழுந்துவிடுமோ என்கிற அச்சம் மோடியிடம் ஏற்பட்டது. இதற்குப் பிறகே அமைச்சரவை மாற்றம் என்கிற கணக்கு மோடி மனதில் உருவானது.

தற்போதைய மாற்றத்தில், சுகாதாரத்துறையின் அமைச்சராக இருந்த ஹர்ஷ் வர்தனை நீக்கியதோடு, அந்தத் துறையின் இணை அமைச்சரின் பதவியையும் பறித்துள்ளார். கொரோனா தடுப்புப் பணிகளில் சரியாகச் செயல்படாததால், மோடிக்கு சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாக ஹர்ஷ் வர்தன் மீது மோடிக்கு வருத்தம் ஏற்பட்டதாம். அதனால்தான் அவர் நீக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் செல்லப்பிள்ளையாக அறியப்பட்ட ரமேஷ் பொக்ரியால் கல்வித்துறையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மோடிக்குக் கட்டுப்படுவதைவிட ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குத் தலைவணங்குவதையே பிரதானமாக நினைத்ததன் விளைவு அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நிதிநிலை மிக கவலைக்குரியதாக இருக்கும் நிலையில், அந்தத் துறையின் அமைச்சரான நிர்மலா சீதாராமன் மட்டும் மாற்றத்திலிருந்து தப்பிவிட்டார். ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நெருக்கமான கட்சியின் சீனியர்களாக அறியப்படும் ரவி ஷங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட 12 பேர் கழற்றிவிடப்பட்டுள்ளனர். சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு அந்த இடத்தில் ஜூனியர்களைக் கொண்டுவந்ததுள்ளார் மோடி. வாஜ்பாய் காலத்து அமைச்சரவையில் இருந்தவர்களில் ராஜ்நாத் சிங், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் மட்டுமே மிஞ்சியுள்ளனர்” என்றார் அந்த ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்.

முகம் மாறும் பா.ஜ.க... உஷாராகும் மோடி!
முகம் மாறும் பா.ஜ.க... உஷாராகும் மோடி!

தேர்தல் கணக்கு... விசுவாசிகளுக்குப் பதவி!

சில மாநிலங்களில் வரவிருக்கும் தேர்தலைக் கணக்கிட்டும் இந்த அமைச்சரவை மாற்றத்தில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நம்மிடம் பேசிய சீனியர் பா.ஜ.க தலைவர் ஒருவர், “பிப்ரவரி 2022-ல் நடைபெறவிருக்கும் உத்தரப்பிரதேசத் தேர்தலைக் கணக்கிட்டு, அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஏழு பேருக்கு அமைச்சரவையில் புதிதாக இடமளித்திருக்கிறார் மோடி. எல்லாச் சமூகங்களைச் சேர்ந்தவர்களும் அமைச்சரவையில் இடம்பிடித்திருக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சதானந்த கவுடாவை அமைச்சரவையிலிருந்து கழற்றிவிட்டிருப்பதன் பின்னணியே, கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கு எதிராக எழும் கலகங்களை அடக்கத்தான்.

அதேபோல, சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவுள்ள மணிப்பூர் மாநிலத்திலிருந்து ஆர்.கே.ராமன் சிங், இமாசலப் பிரதேசத்திலிருந்து மத்திய அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றுள்ள அனுராக் தாக்கூர், குஜராத்திலிருந்து தர்ஷனா ஜர்தோஷ், புருஷோத்தம் ரூபலா, மன்சுக் மாண்டவியா எனத் தேர்தலை மையப்படுத்தி பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அஸ்ஸாம் மாநிலத்தின் முதல்வர் கனவில் மிதந்த சர்பானந்த சோனோவாலுக்கு அந்தப் பொறுப்பு அளிக்கப்படவில்லை. இதனால், அவர் தரப்பினர் வருத்தத்தில் இருந்தனர். இந்த வருத்தம் கலகமாக மாறினால் ஆபத்து என்று உணர்ந்த டெல்லி, சர்பானந்த சோனோவாலைச் சரிக்கட்ட இப்போது அமைச்சரவையில் இடம் அளித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசை வீழ்த்த திடமான ஒருவர் தேவை என்பதால், முன்னாள் முதல்வர் நாராயண் ரானேவுக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு அளித்திருக்கிறார் மோடி. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்குக் குடைச்சல் கொடுக்க, அந்த மாநிலத்திலிருந்து நான்கு பேர் மத்திய அமைச்சராக்கப்பட்டுள்ளனர். இது அந்த மாநில பா.ஜ.க-வினரை உற்சாகப்படுத்தும். இந்த அமைச்சரவை மாற்றத்தில், விசுவாசத்துடன் கட்சி வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்களுக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

உஷார் மோடி!

மோடி இரண்டாவது முறையாக 2019-ல் பதவியேற்றபோது, அமைச்சர்கள் பட்டியல் ரகசியம் காக்கப்பட்டது. அதேபோல, தற்போது மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவைப் பட்டியலையும் ரகசியம் காத்தது பிரதமர் அலுவலகம். குறிப்பாக, அமைச்சர் பதவியிலிருந்து 12 பேர் விலகியதுகூட, செய்தி முறைப்படி வெளியானபோதுதான் பல அமைச்சர்களுக்கே தெரிந்ததாம். எல்லோருமே அவசரமாக அழைக்கப்பட்டு, ராஜினாமா கடிதம் கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். பாபுல் சுப்ரியோ வெள்ளந்தியாக, ‘பதவி விலகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டேன்’ என ட்விட்டரில் பதிவிட்டுவிட்டார். பிறகு அதைத் திருத்தினார். பதவியேற்பு முடிந்த பிறகே துறைகள் குறித்த விவரங்களை வெளியிட்டது ஜனாதிபதி மாளிகை.

பெயர் குறிப்பிட வேண்டாமென்ற கோரிக்கையுடன் பேசிய பா.ஜ.க மத்திய இணையமைச்சர் ஒருவர், “ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நெருக்கமானவர்களைக் கழற்றிவிடுகிறார் அல்லது கவர்னர் ஆக்குகிறார் மோடி. நேரடியாக அரசியல் களத்தில் இறங்கிய இளைஞர்களைத் தனது அமைச்சரவைக்குள் கொண்டுவந்திருக்கிறார். அதாவது, ‘உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது நான்தான்’ என்று புதியவர்களைத் தன்னுடைய ஆதரவாளர்களாக மாற்றும் யுக்தியைக் கையாள்கிறார் அவர். இரண்டு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டது இந்த வகையில்தான். நிர்மலா சீதாராமனை மாற்ற வேண்டும் என்கிற ஆர்.எஸ்.எஸ் விருப்பத்தை மோடி நிராகரித்துள்ளார். அதேநேரம் யாரெல்லாம் அமைச்சர்களாக இருக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நினைத்ததோ, அவர்களில் பலருக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. ரமேஷ் பொக்ரியால் இதற்கு ஓர் உதாரணம். இந்தப் பட்டியல் தயாரிப்பு முதல் பதவியேற்பு வரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மோடி எடுக்கும் நடவடிக்கையை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. பா.ஜ.க-வின் இமேஜை மாற்றி, அதன் மூலமாக நொறுங்கிப்போயுள்ள தன் இமேஜை வலுப்படுத்தப் பார்க்கிறார் அவர்” என்றார்.

அவர் மாற்றிக்கொண்டிருக்கும் இந்த முகம், மோடிக்குப் புதிய இமேஜைத் தருமா அல்லது புதிய பிரச்னைகளைக் கொண்டுவருமா என்பது விரைவில் தெரிந்துவிடும்!

*****

எதிர்பார்ப்புகள்... ஏமாற்றங்கள்!

பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் எல்லா பெரிய கட்சிகளுக்கும் இந்த முறை அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கிறது, அ.தி.மு.க-வைத் தவிர! மத்திய அமைச்சர் பொறுப்பு கிடைக்குமென அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்.பி-யுமான ஓ.பி.ரவீந்திரநாத் எதிர்பார்த்தார். அதே எதிர்பார்ப்பு மாநிலங்களவை எம்.பி-யான தம்பிதுரையிடமும் இருந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து இவர்களுக்கு சிபாரிசு செய்யக்கூட தயாராக இல்லையாம். ‘சிபாரிசு கடிதம் கொடுத்திருந்தாலாவது டெல்லியில பேசி ஏதாவது செஞ்சுருக்கலாம்’ என்று புலம்பிவருகிறது ஓ.பி.ஆர் மற்றும் தம்பிதுரை தரப்பு. அதேபோல, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தரப்பும் மத்திய அமைச்சர் கனவில் மிதந்தது. ‘கட்சியைக் கலைத்துவிட்டு பா.ஜ.க-வில் இணையுங்கள். பதவி தருகிறோம்’ என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டதாம் டெல்லி. இதனால் ஜி.கே.வாசன் அப்செட்! பா.ம.க மீது டெல்லி பா.ஜ.க தலைவர்கள் பெரிதாக அபிப்ராயம் வைத்ததில்லை என்பதால், அன்புமணிக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

முகம் மாறும் பா.ஜ.க... உஷாராகும் மோடி!

எல்.முருகன் இடம்பிடித்தது எப்படி?

“கொங்குப் பகுதியில் கணிசமாக இருக்கும் அருந்ததியர் சமூக மக்களை பா.ஜ.க-வின் வாக்குவங்கியாக மாற்ற வேண்டுமானால் எல்.முருகனின் பெயரை அமைச்சரவைப் பட்டியலில் இணைக்க வேண்டும். ஒன்றுமே இல்லாத நேரத்தில், நான்கு எம்.எல்.ஏ-க்களை வெற்றிபெறச் செய்து சட்டமன்றத்துக்குள் அனுப்பியிருக்கிறார் அவர். அவருக்கு உரிய மரியாதை தர வேண்டும்” என்று பா.ஜ.க அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்ட சிலர் மோடிக்கு அழுத்தம் கொடுத்திருக் கிறார்கள். அதேசமயம், மாநிலத் தலைவர் பொறுப்புக்கு அண்ணா மலையைக் கொண்டுவரவே, எல்.முருகனை கழற்றிவிட பி.எல்.சந்தோஷ் இப்படிக் காய்நகர்த்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், தமிழக பா.ஜ.க-வைச் சேர்ந்த சிலர், தி.நகர் பா.ஜ.க தலைவர் ஒருவர் தலைமையில் எல்.முருகனுக்கு எதிராகக் காய்நகர்த்தியுள்ளனர். “எல்.முருகன் மாநிலத் தலைவராகச் சிறப்பாகச் செயல்படுகிறார். அவரை ஏன் மத்திய அமைச்சராக்க வேண்டும்?” என்று நாசுக்காக ஜே.பி.நட்டா மூலம் மோடிக்கு அழுத்தம் கொடுத்துள்ளது அந்த தி.நகர் பார்ட்டிகள் தரப்பு. இது தெரிந்ததும் டென்ஷனான எல்.முருகன், தமிழக பா.ஜ.க இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியுடன் களமிறங்கி, பல முன்னணித் தலைவர்களைப் பார்த்துப் பேசியிருக்கிறார். ஜூலை 6-ம் தேதி இரவு, இந்தியாவிலேயே மிக மூத்த தலைவர் ஒருவரை நேரில் சந்தித்தும் தன் பதவிக்காகப் பேசியிருக்கிறார். இதைத் தொடர்ந்தே அவரின் பெயர் அமைச்சரவைப் பட்டியலில் இடம்பிடித்ததாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism