Published:Updated:

“தமிழக பா.ஜ.க-வில் கசப்புடன்தான் இருக்கிறேன்!”

ராதாரவி
பிரீமியம் ஸ்டோரி
ராதாரவி

- நடிகர் ராதாரவி வேதனை

“தமிழக பா.ஜ.க-வில் கசப்புடன்தான் இருக்கிறேன்!”

- நடிகர் ராதாரவி வேதனை

Published:Updated:
ராதாரவி
பிரீமியம் ஸ்டோரி
ராதாரவி

2021 சட்டமன்றத் தேர்தல் முடிவில், ‘தோல்விக்குக் காரணம் நீங்கள்தான்’ என்று மாறி மாறி குற்றம் சாட்டிவந்த அ.தி.மு.க - பா.ஜ.க., இப்போது மறுபடியும் உள்ளாட்சித் தேர்தலுக்காக கைகோத்து களமிறங்கியிருக் கின்றன. இந்தநிலையில், சட்டமன்றத் தேர்தலில் தனது பரபர பிரசாரங்களால் சூடுகிளப்பிய நடிகரும், பா.ஜ.க-வைச் சேர்ந்த மூத்த தலைவருமான ராதாரவியை நேரில் சந்தித்தோம்...

“சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு அ.தி.மு.க-தான் காரணம் எனச் சொல்லிவிட்டு, மறுபடியும் கூட்டணி சேர்ந்திருக்கிறீர்களே... அப்படியென்றால் ஏற்கெனவே சொன்னது பொய்யா அல்லது மறுபடியும் தோல்வியைச் சந்திக்கத் தயாராகிவிட்டீர்களா?’’

“அரசியல் கட்சிகளின் கூட்டணி என்பது தாய்-மகள் உறவு போன்றதுதான். ஒரே கட்சிக்குள்ளேயே, ‘நான்தான் ஏரியாவில் பெரியவன்; எனக்குத்தான் சீட் தர வேண்டும்’ என்றெல்லாம்கூட உட்கட்சித் தகராறு நடக்கும்தானே... வெவ்வேறு கட்சிகள் கூட்டணி சேரும்போது இதுபோன்ற வாதங்களெல்லாம் வரத்தான் செய்யும். ஆனால், வரப்போகிற உள்ளாட்சித் தேர்தலுக்குள் இந்தப் பிரச்னைகளெல்லாம் சரியாகிவிடும். மேலும் உள்ளாட்சித் தேர்தலில், தனிப்பட்ட நபர்களைப் பொறுத்துத்தான் வெற்றி தோல்வி அமையும். எனவே, நாங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம்!’’

“கடந்த தேர்தலிலேயே உங்களுடைய பிரசாரங்கள் பல சர்ச்சைகளை எழுப்பினவே... உள்ளாட்சித் தேர்தலிலும் பிரசாரம் செய்கிறீர்களா?’’

“எனக்கு மூடி மறைத்துக்கொண்டு பேசத் தெரியாது. மனதுக்குள் என்ன இருக்கிறதோ அதை அப்படியே பேசிவிடுவேன். அந்தப் பேச்சுகள் கொஞ்சம் சூடாகத்தான் இருக்கும். தி.மு.க வில் இருந்தபோதும் நான் இப்படித்தான் இருந்தேன். இதற்காக என்னை ‘இரண்டாம்தரப் பேச்சாளர்’ என்றுகூடச் சொல்லிக்கொள்ளுங்கள். எனக்கு அதில் கவலையில்லை. நான் ஒன்றும் அறிவார்ந்த பேச்சாளர் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலில் பிரசாரம் செய்வேனா இல்லையா என்றெல்லாம் இதுவரை தெரியவில்லை. கட்சியிலிருந்து கூப்பிட்டால் பேசுவேன்; கூப்பிடவில்லை யென்றாலும் அதற்காக அழுத்தம் கொடுக்கமாட்டேன். பணம், பதவியைத் தேடிப்போகும் ஆள் நான் அல்ல. எனவே, எனக்கு எந்தக் கவலையும் இல்லை!’’

“திரைத்துறை தாண்டி, அரசியலிலும் நீண்ட அனுபவம்கொண்ட உங்களைப் போன்ற தலைவர்களை தமிழக பா.ஜ.க பயன்படுத்திக்கொள்ளாதது கட்சிக்குத்தானே இழப்பு?’’

“கட்சியில் சேரச் சொல்லி அழைக்கும்போது, ‘வாங்க... வாங்க’ என்று அழைக்கிறார்கள். ‘திராவிட இயக்கத்தில் இருந்த ராதாரவியெல்லாம் வந்துவிட்டார்யா...’ என்று புருவத்தைத் தூக்கிச் சொல்கிறார்கள். பிறகு, நாம் யார் என்று தெரிவதற்கு நம்முடைய பயோடேட்டாவைக் கொடுக்கணும்போல... நாமாகப் போய் அவர்கள் கையைப் பிடித்து இழுத்துவந்து, ‘என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்றா சொல்ல முடியும்?’’

 “தமிழக பா.ஜ.க-வில் கசப்புடன்தான் இருக்கிறேன்!”

“தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடமே இது குறித்து நீங்கள் நேரடியாக முறையிடலாம் தானே?’’

“கட்சித் தலைவரிடம் சொல்லலாம்தான்... அதற்கு அவரை முதலில் பார்க்க வேண்டுமே... பார்த்து, அவரும் பேசினால்தானே நான் என் பிரச்னைகளைச் சொல்ல முடியும். ஆனால், பாவம் அவர்... கட்சிப் பணிக்காக ஒவ்வோர் ஊராகத் தொடர்ந்து சுற்றுப்பயணம் சென்றுகொண்டிருக்கிறார். அவரைப் பார்த்துச் சொல்வதற்காக நானும் ஒவ்வோர் ஊராகச் சுற்ற முடியுமா?

அடுத்து, இதுபோன்ற பிரச்னைகளைத் தலைவரிடம்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை. இதற்கென்று ஒருவரைக் கட்சியிலிருந்து நியமித்திருந்தாலே போதும். உதாரணமாக நயினார் நாகேந்திரனையே நியமித்துவிட்டால்கூட போதும். அவரிடமே நான் பிரச்னைகளைச் சொல்லிவிட முடியும். இதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது. அதேசமயம், பா.ஜ.க என்பது நல்ல கட்சி. மேலும் பிரதமர் மோடி, அமித் ஷா பற்றியெல்லாம் தெரிந்துதான் அந்தக் கட்சியிலேயே நாம் போய்ச் சேர்ந்தோம்... அவ்வளவுதான்!’’

“ ‘சினிமாவில் சீனியர்களை எங்கே மதிக்கிறார்கள்’ என்று அண்மையில் வருத்தப்பட்டிருந்தீர்கள்... அரசியலிலும் அதே நிலைதானா?’’

“பொன் ராதாகிருஷ்ணன்தான் என்னைக் கட்சியில் சேரச்சொல்லி அழைத்தார். எதைவைத்து என்னைத் தமிழக பா.ஜ.க-வில் சேரச்சொல்லி அழைத்தார் என்று தெரியவில்லை. அவரிடமே கேட்கலாம் என்று இருக்கிறேன். தி.மு.க-வில் வேணாம் என்று சொல்லிவிட்டதால், என்னைக் கூப்பிட்டார்களா என்று தெரிய வில்லை. ஏனெனில், கடந்த ஒரு வருடமாகவே கசப்புடன்தான் இருக்கிறேன். அதுசரி... பா.ஜ.க ஒரு தேசியக் கட்சி... அதனால் இது போன்ற பிரச்னைகள் இருக்கும்தான். இதெல்லாம் தெரிந்துதானே நாம் போய்ச் சேர்ந்தோம்!’’

“நடிகர் ராதாரவி, மறுபடியும் வேறு கட்சிக்குத் தாவ முடிவெடுத்துவிட்டாரா?’’

“இல்லையில்லை... இப்போதே எனக்கு 69 வயதாகிவிட்டது. இனியும் வேறு கட்சிகளுக்குப் போய், யார் யாருக்காகவோ கத்திக் கொண்டிருந்தால், இதே வேலையாகப் போய்விடும். பா.ஜ.க-வே நல்ல வாய்ப்பு உள்ள கட்சிதான்!’’

“ ‘கொழுந்தியாள் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஜி.எஸ்.டி கூட்டத்தைத் தவிர்த்துவிட்டார் நிதியமைச்சர் பி.டி.ஆர்’ என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறதே?’’

“அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதை நானும் கேட்டேன். பொதுவாக எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் இதுபோன்ற தருணங்களில் கிண்டலுக்காகச் சில செய்திகளைச் சொல்வார்கள்தான். ஆனால், பா.ஜ.க மாநிலத் தலைவரும், முன்னாள் காவல்துறை அதிகாரியுமான அண்ணாமலை, அப்படியெல்லாம் வாட்ஸ்அப்பில் வருகிற தகவலை வைத்துப் பேசிவிட முடியாது; அவர் கவனித்துத்தான் பேசியிருக்க வேண்டும். அதேசமயம், கல்யாணம், காதுகுத்து, பொது நிகழ்ச்சி என்று எதுவாக இருந்தாலும் ஒரு நிதியமைச்சர் என்பவருக்கு ‘ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்’தானே முக்கியமாக இருந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நன்றாகப் பேசக்கூடிய நம் நிதியமைச்சர், ஜி.எஸ்.டி கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசி, தன் வாதத் திறமையை நிரூபித்திருக்கலாமே!’’