Published:Updated:

`குறைக்கப்படுமா வாட் வரி?!’ - பெட்ரோல் விலை அரசியலை திமுக-வுக்கு எதிராக திருப்பும் பாஜக, அதிமுக!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள்
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள்

பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க எதிர்க்கட்சிகள் தயங்குகின்றன என பா.ஜ.க-வினர் விமர்சனம் செய்கின்றனர். குறிப்பாகத் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., பா.ஜ.க., இதைத் தி.மு.க-வுக்கு எதிராகத் திருப்புகிறார்கள். வாட் வரி குறைப்பில் இருக்கும் அரசியல் என்ன…

நாடு முழுவதும் பெட்ரோலுக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் கலால் வரியைக் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவையடுத்து உத்தரகண்ட், பீகார், அருணாசலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, புதுச்சேரி உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி குறைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தொடர்ந்து ஏறுமுகத்திலிருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. “மத்திய அரசு தங்களுடைய பங்கில் பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைத்துள்ளபோதும் தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்காதது ஏன்? தமிழக அரசு இன்னும் மௌனம் காப்பது ஏன்? தமிழக அரசு தீபாவளிப் பரிசாக மக்களுக்கு வரிச் சுமையைக் குறைக்க முன்வருமா? மத்திய அரசின் வேண்டுகோளை நிறைவேற்றுமா? அல்லது வழக்கம்போல நாடகத்தில் ஈடுபடுவார்களா?” எனத் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசு வாட் வரியைக் குறைக்காதது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதேபோல “தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியினை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்” என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் “தி.மு.க. அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைக்காமல், பெட்ரோலுக்கு மட்டும் சிறிதளவு மாநில வாட் வரியினைக் குறைத்துள்ளது. எனவே, தமிழக மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, உடனடியாகத் தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்” என அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

எடப்பாடி - ஓபிஎஸ்
எடப்பாடி - ஓபிஎஸ்

‘பெட்ரோல், டீசல் விலைக்கான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததற்குக் காரணம் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் அடைந்த மோசமான தோல்வியே காரணம்’ என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. ஆனால், ‘மக்கள் நலனுக்காக மத்திய அரசு வரியைக் குறைத்திருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் வரியைக் குறைக்கத் தயங்குகிறார்கள்’ என பா.ஜ.க-வினர் இதை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் திருப்புகின்றனர். குறிப்பாகத் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., பா.ஜ.க., இதைத் தி.மு.க-வுக்கு எதிராகத் திருப்புகிறார்கள். வாட் வரி குறைப்பில் இருக்கும் அரசியல் என்ன?

பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள வரிகள் எவ்வளவு? | Doubt of Common Man

தமிழ்நாடு பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜனிடம் பேசினோம்... “பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்பது அனைத்துத்தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு. மக்களின் கஷ்டத்தைப் போக்கும் விதமாக, தீபாவளி இனிப்பாக பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கர்நாடகா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களும் வாட் வரியைக் குறைத்திருக்கின்றன. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் எனத் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துவிட்டு தற்போது பெட்ரோலுக்கு மட்டும் விலை குறைத்து, வெள்ளை அறிக்கை வெளியிட்டு மக்களுக்குக் குழப்பத்தையே ஏற்படுத்தினார்.

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தி.மு.க-வுக்குத் தற்போது மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி பெட்ரோல், டீசல் மீதான வரியைத் தமிழக அரசு குறைத்தால் மக்களுக்கும் தி.மு.க-வுக்கும் தான் நல்லது. ஆனால், அதைச் செய்ய தி.மு.க-வுக்கு மனசு வரவில்லை” என்றவர்…

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“தேர்தலுக்காக எதையும் சொல்வோம். ஆனால், அவற்றைச் செயல்படுத்த மாட்டோம் என்ற தி.மு.க-வின் இரட்டை நிலைப்பாட்டைத்தான் இது காட்டுகிறது. ஜி.எஸ்.டி-க்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசுக்கு தி.மு.க அரசு கோரிக்கை வைக்க வேண்டும் என எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். அப்படிக் கொண்டுவரப்பட்டால் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும். ஆனால், இதற்கும் தி.மு.க தயாராக இல்லை. பெட்ரோலுக்கான விலையை 3 ரூபாய் குறைக்க அனைவருக்கும் வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால், தி.மு.க முந்திக்கொண்டு பெயரை வாங்கிக்கொண்டது. அவ்வளவுதான். ஆனாலும் அவர்கள் சொன்னதை முழுமையாகச் செய்யவில்லையே. பெட்ரோல், டீசல் தொடர்பாக தி.மு.க சொல்வது அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை.

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

நகைக்கடன் ரத்து, குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் தருவது என எல்லாவற்றிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாகவே தி.மு.க அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தி.மு.க அரசு வாட் வரியைக் குறைக்க வேண்டும். இது எங்கள் கருத்தில்லை. மக்களின் விருப்பம்” என்றார்.

"பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தித்தான் வைக்க வேண்டும்!"- நாராயணன் திருப்பதி

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டோம், “பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்தது திராவிட முன்னேற்ற கழகம். ‘வரியைக் குறைக்க எங்களுக்குத் தகுதியோ அதிகாரமோ இல்லை’ எனக் கூறியது பா.ஜ.க. ஆனால், தற்போது நடந்த இடைத்தேர்தலில் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்த பின்னர்தான் ‘கலால், வாட் வரிகள் நாம்தான் விதிக்கிறோம்’ என்ற ஞானோதயமே பிறந்திருக்கிறது. இப்போதுதான் மக்களின் மகிழ்ச்சிக்காகச் செய்கிறோம் என்றால் 100, 110 ரூபாய் என விலை உயர்ந்த போது எங்கே இருந்தார்கள் இவர்கள். தேர்தலில் டெபாசிட் இழந்தால்தான் வரியைக் குறைப்பீர்களா? மக்களுக்காக அரசு நடத்துகிறீர்களா, வாக்குக்கான அரசு நடத்துகிறீர்களா? நீங்களே குறைக்கும்போது நாங்கள் வரியைக் குறைக்க மாட்டோமா? ஆனால், அதற்குமுன் எதில், எப்படி, எந்தளவு வரியைக் குறைக்க வேண்டும் என ஆராய்ந்துதான் முடிவெடுக்க வேண்டும். எனவே சற்றுக் கால தாமதம் ஆகும். விரைவில் அந்த முடிவை எடுப்போம்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

ஏற்கெனவே வரியைக் குறைத்த எங்களைப் பார்த்து இப்போது கேள்வி கேட்க பா.ஜ.க-வினருக்கும், அ.தி.மு.க-வினருக்கும் வெட்கமாக இல்லையா? இப்போது குறைப்பவர்கள் எல்லாம் இதுவரை குறைக்காதவர்கள். தி.மு.க அரசுதான் ஏற்கெனவே வாட் வரியைக் குறைத்துவிட்டதே. தி.மு.க-வைக் கேள்வி கேட்பதற்கு பா.ஜ.க-வுக்கு தகுதியே இல்லை” என்றவர்…

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் நழுவுகிறதா திமுக அரசு?!

”பா.ஜ.க செய்வது ‘Rhetoric Politics’. எல்லாவற்றையும் யாருக்காவது கூவிக் கூவி விற்பனை செய்வதுதான் இதுவரை அவர்கள் செய்தது. மக்கள் நலன் சார்ந்தோ நாட்டின் வளர்ச்சி சார்ந்தோ பா.ஜ.க-வுக்கு அரசியல் செய்ய வராது. வாட் வரியைத் தி.மு.க குறைக்க முன்வரவில்லை என்பவர்களை என்னுடன் நேருக்கு நேர் விவாதத்துக்கு வரச் சொல்லுங்கள். 2014-லிலிருந்து மோடி சொன்ன வாக்குறுதிகள், பட்ஜெட்டில் சொன்ன அறிவிப்புகள் எந்த லெவலில் இருக்கின்றன எனப் பேசுவோம். பா.ஜ.க-வின் ஏழு ஆண்டு ஆட்சியை தி.மு.க-வின் ஏழு மாத ஆட்சியோடு ஒப்பிட்டுப் பேசுவோம். அதற்கு பா.ஜ.க-வில் யாருக்காவது தைரியம் இருக்கிறதா? 20 கோடி மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழ் கொண்டு சென்றதுதான் உங்களின் சாதனை. பஞ்சம் இந்தியாவில் மிகக் கொடுமையாக இருந்தபோது கூட வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தவர்கள் இந்த எண்ணிக்கையில் இல்லை.

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

மோசமாக ஆட்சி செய்துவிட்டு மக்கள் நல அரசை வழிநடத்திக்கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பார்த்துக் கேள்வி கேட்க பா.ஜ.க., அ.தி.மு.க-வினருக்குக் கூச்சமாக இல்லையா?” எனப் பல்வேறு வினாக்களோடு விளக்கமளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு