Published:Updated:

7.5% இட ஒதுக்கீடு விவகாரம் : பா.ஜ.க-வும் ஆளுநருக்குக் கோரிக்கை... தாமதமாவது ஏன்?

அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி - பன்வாரிலால் புரோஹித்
அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி - பன்வாரிலால் புரோஹித்

7.5% இட ஒதுக்கீடு கொடுப்பதில், மத்திய பா.ஜ.க அரசுக்கு விருப்பம் இல்லை. எனவேதான் ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்துகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. ஆனால், தமிழக பா.ஜ.க துணைத்தலைவர் அண்ணாமலை, ``ஆளுநருக்கும் பா.ஜ.க-வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை'' என்கிறார்.

`7.5% உள் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்' என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திவரும் வேளையில், தமிழக பா.ஜ.க-வினரும் திடீரென இந்தக் கோரிக்கையை வலியுறுத்திப் பேச ஆரம்பித்திருப்பது யாரும் எதிர்பாராத திருப்பம்.

தமிழ்நாட்டில், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர்களைத் தேர்வு செய்வதில், மாணவர்களின் 12-ம் வகுப்பு மதிப்பெண்களே தகுதியாக இருந்துவந்தன. இந்தநிலையில், மருத்துவப் படிப்புகளுக்காக 'நீட்' எனும் நுழைவுத் தேர்வை நாடு முழுக்க அறிமுகப்படுத்தியது மத்திய பா.ஜ.க அரசு.

நீட் தேர்வு மையம்
நீட் தேர்வு மையம்

ஆனால், 'நீட் தேர்வு, சமூகநீதியை பாதிக்கும்' எனக் கூறி தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு நின்று எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து 'தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு தேவையில்லை' என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்ற வழக்குகளும் தொடுக்கப்பட்டன. ஆனாலும்கூட நடைமுறையில் நீட் தேர்வு தமிழ்நாட்டிலும் அமல்படுத்தப்பட்டது.

எதிர்பார்த்ததுபோலவே, நீட் தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்களால் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சிபெற முடியவில்லை. குறிப்பாக, கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் நீட் தேர்வால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான வாய்ப்பை வழங்கும்வகையில் புதிய சட்ட மசோதாவை கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றியது தமிழ்நாடு அரசு.

நீட்: `அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 8 சீட்; இட ஒதுக்கீடு நிறைவேறினால் 303 சீட்' - உண்மைநிலை என்ன?

தொடர்ந்து இந்தச் சட்ட மசோதா, ஆளுநர் ஒப்புதலுக்காகவும் அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் இந்தச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து, `மத்திய பா.ஜ.க அரசு, கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வி பெறக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது. உயர் வகுப்பினர் மட்டுமே கல்வி, வேலை வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற உள்நோக்கத்துடனேயே செயல்படுகிறது' என குற்றம்சாட்டின எதிர்க்கட்சிகள். மேலும், ஆளுநர் உடனடியாக இந்தச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, சட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் போராடிவருகின்றன.

மருத்துவப் படிப்பு
மருத்துவப் படிப்பு
Representational Image

இந்தநிலையில்தான் யாரும் எதிர்பாராத திருப்பமாக, தமிழக பா.ஜ.க-வினரே, `7.5% இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்' என பேச ஆரம்பித்திருக்கின்றனர். தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், `அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் தர வேண்டும்' என வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க-வினரே, தமிழ்நாட்டில் இது போன்றதொரு நிலையை எடுத்திருப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பிவருகிறது.

இது குறித்துப் பேசினார் தி.மு.க எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு.

``மருத்துவப் படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 7.5% உள் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று குரல் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு இப்போது தமிழக பா.ஜ.க தள்ளப்பட்டிருக்கிறது. அதனால், பொதுவெளியில் மேம்போக்காக, `இட ஒதுக்கீடு வேண்டும்' என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். உண்மையிலேயே பா.ஜ.க-வினருக்கு இந்த விஷயத்தில் அக்கறை இருக்குமானால், சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் ஏன் இவ்வளவு காலதாமதத்தை ஏற்படுத்த வேண்டும்?

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக, தமிழக அரசு சார்பில், ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையில் கடந்த மார்ச் மாதமே குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு, `நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என்று சிபாரிசு செய்தது. ஆனால், தமிழக அமைச்சரவை 7.5% அளித்தால் போதும் என்று முடிவெடுத்து, அவசரச் சட்டம் இயற்றியது.

தமிழ்நாட்டில், மொத்த மாணவர்களில் 40% பேர் அரசுப் பள்ளி மாணவர்களாக இருக்கும்போது, நீட் தேர்வு இட ஒதுக்கீடும் அதே விகிதாசாரத்தோடுதானே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்... ஆனால், அவ்வாறு கொடுக்கப்படவில்லை. குழு பரிந்துரைத்த 10% ஒதுக்கீட்டையும்கூட முழுமையாகக் கொடுக்காமல், 7.5% என குறைத்து வழங்க அமைச்சரவை முடிவெடுத்திருப்பது எதன் அடிப்படையில் என்று விளக்கம் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில், இந்த 7.5%-க்கும் அனுமதி கொடுக்காமல், காலம் தாழ்த்திவருகிறார் தமிழக ஆளுநர்.

முதலில் சட்ட மசோதா அனுப்பப்பட்டபோதே, ஆளுநர் திருத்தம் போட்டு திருப்பி அனுப்பியதாகச் செய்திகள் வெளிவந்தன. அதாவது, அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல், கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் 25% அளவிலான எண்ணிக்கையில் பயின்றுவரும் ஏழை, எளிய மாணவர்களையும் இந்த 7.5% இட ஒதுக்கீட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று ஆளுநர் கேட்டிருந்ததாகச் சொல்லப்பட்டது. இதையடுத்து, அந்தத் திருத்தத்தையும் செய்து மறுபடியும் ஆளுநருக்கே அனுப்பிவைத்திருப்பதாக ஆளும்தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆனால், இப்போதும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வசதியாகக் கையெழுத்திடாமல், `மறுபடியும் மூன்று வார கால அவகாசம் வேண்டும்' என ஆளுநர் கூறியிருப்பது, திட்டமிட்டு காலதாமதப்படுத்தும் செயல். அதாவது, இட ஒதுக்கீடு அளிப்பதற்கு மத்திய அரசு மற்றும் ஆளுநர் தரப்புக்கு விருப்பம் இல்லை என்றே தெரிகிறது. மாநில அரசான அ.தி.மு.க-வும் மத்திய அரசைப் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை.

எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைக் கொடுக்காமல் அ.தி.மு.க அரசும் போக்குக் காட்டிவருகிறது. ஆக, `அடிக்கிற மாதிரி அடிக்கிறோம்... அழுகிற மாதிரி அழுதுகொள்' என்று மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டே மக்களை ஏமாற்றிவருகின்றன'' என்றார்.

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான புகழேந்தி, இந்த விவகாரத்தில் அ.தி.மு.க அரசு மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கூறிப் பேசும்போது,

``நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டுவிட்ட மூன்று ஆண்டுக்காலத்தில், அரசுப் பள்ளி மாணவர்கள் போதிய எண்ணிக்கையில் உயர் படிப்பைப் பெற முடியவில்லை என்பதையறிந்து, அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவெடுத்து முதல்வர் அறிவிப்பு செய்தார். பின்னர் அவசரச் சட்டத்தை இயற்றி, ஆளுநருக்கும் அனுப்பிவைத்தார்.

அப்போதெல்லாம் யாரும் முதல்வரது முடிவை வரவேற்றுப் பேசவில்லை. குறிப்பாக `இட ஒதுக்கீட்டுக்காகப் போராடி வருகிறோம்’ என்று சொல்லிக்கொள்ளும் பா.ம.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும்கூட அ.தி.மு.க அரசைப் பாராட்டவில்லை.

புகழேந்தி
புகழேந்தி

ஆனால், இப்போது ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதப்படுத்துகிறார் என்றதும், மாநில அரசை நோக்கிக் கேள்வி கேட்கிறார்கள். இப்போதும்கூட, ஆளுநரின் காலதாமதத்தைச் சரியென்று நாங்கள் சொல்லவில்லை. ஐந்து அமைச்சர்கள் நேரிலேயே ஆளுநரைச் சந்தித்து, இது விஷயமாக வலியுறுத்தியிருக்கின்றனர். எனவே, இதில் நாடகம் நடத்த வேண்டிய அவசியம் எதுவும் அ.தி.மு.க அரசுக்கு இல்லை.

விரைவில் நல்லதொரு முடிவு வரும் என்று எதிர்பார்த்திருக்கிறோம். அப்படி வரவில்லையென்றால், நாங்களும் விடுவதாகயில்லை. விரைவில் எங்கள் முடிவை அறிவிப்போம்'' என்றார் சூடாக.

இதற்கிடையே, பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை `கிராமப்புற மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை உடனடியாக அனுமதித்து, மாணவர்களின் மனதில் இருக்கும் குழப்பத்தை நீக்க மேதகு ஆளுநரை நான் கேட்டுக்கொள்கிறேன்.

`ஆன்லைன் மூலம் 18 லட்சம் பேர் தி.மு.க-வில் சேர்ந்துள்ளனர்!’ -துரைமுருகன்

மிக முக்கியமான இதை, இதற்கு மேலும் தாமதப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்' என ட்வீட் செய்திருக்கிறார். அவரிடமும் பேசினோம்...

``காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, ஆளுநர் பதவி என்பது அரசாங்கத்தோடு தொடர்புடைய ஓர் அமைப்பாகத்தான் இருந்துவந்தது. ஆனால், பா.ஜ.க ஆட்சியில் ஆளுநர் பொறுப்பு என்பது நமது அரசியலமைப்பு அதிகாரத்தின்படி, தனிப்பட்ட சுயாதீனமான ஓர் அமைப்பாக விளங்கிவருகிறது. ஆனால், `ஆளுநரே இவர்கள்தானே... ஒரு போன் செய்து பேசினாலே ஒப்புதல் ஆகிவிடாதா...' என்று எதிர்க்கட்சிகள் எங்களை நோக்கிக் கேள்வி கேட்கிறார்கள். உண்மையில், பா.ஜ.க-வுக்கும் ஆளுநருக்கும் எந்தவிதத் தொடர்போ, சம்பந்தமோ கிடையாது.

அண்ணாமலை
அண்ணாமலை

`கிராமப்புற மாணவர்கள் பயனடையும் வகையில், இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும்' என்பதுதான் ஆரம்பத்திலிருந்தே தமிழக பா.ஜ.க-வின் நிலைப்பாடு. கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாடு வந்திருந்த ஜெ.பி.நட்டா, `கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசு விரும்பினால், அதை மத்திய அரசு ஆதரிக்கும்' என்று ஏற்கெனவே பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். எனவே, எங்கள் நிலைப்பாட்டிலிருந்து என்றைக்குமே நாங்கள் மாறியது இல்லை.

மதுரை:`தே.மு.தி.க நினைத்தால் மூன்றாவது அணி அமைக்க முடியும்!' - விஜய பிரபாகரன்

'7.5% இட ஒதுக்கீட்டுக்காக நீங்கள் ஏன் போராடவில்லை...' என்று எங்களை நோக்கிக் கேள்வி கேட்கிறார்கள். ஒரு திட்டம் நிராகரிக்கப்படும்போதுதான் அதை எதிர்த்து போராட்டம் நடத்த முடியும். தமிழ்நாடு சட்டமன்றம், 7.5% இடஒதுக்கீட்டு மசோதாவை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்திருக்கிறது. ஆளுநரும் முறைப்படி மசோதாவை ஆய்வு செய்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில், தமிழக பா.ஜ.க-வின் நிலைப்பாடு, 'விரைவில் இந்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்' என்பதுதான்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

ஏனெனில், நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் `மருத்துவ சீட் கிடைக்குமா, கிடைக்காதா' என்று ஆவலோடு காத்துக்கிடக்கிறார்கள். ரிசல்ட் வந்த பிறகும்கூட, மாணவர்கள் இப்படி எத்தனை நாளைக்குத்தான் காத்துக்கிடக்க முடியும்? எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல், ஆளுநர் விரைவாக ஒப்புதல் கொடுக்க வேண்டும்'' என்கிறார் அழுத்தமாக.

அடுத்த கட்டுரைக்கு