Published:Updated:

மாநில உரிமைகளைப் பறிப்பதில் காங்கிரஸும், பா.ஜ.க-வும் ஒன்றுதான்! #தமிழ்நாடுநாள்

மோடி
மோடி

தமிழகம் உதயமான இன்றைய தினத்தில்.... `மாநில உரிமைகளைப் பறிப்பதில் மிகவும் மோசமானது காங்கிரஸ் அரசா... பா.ஜ.க அரசா?’ என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு நிலைமை மிக சீரியஸாக இருக்கிறது.

1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களை எல்லைகளாகக் கொண்டு தமிழகம் என்கிற மாநிலம் உருவாகி இன்றுடன் 63 ஆண்டுகள் ஆகின்றன. தமிழகம் உதயமான அதே நாளில்தான் கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களும் உதயமாகின. அப்போது, பல பகுதிகளை இழந்ததால், இன்றுவரை பெரும் பாதிப்புகளைத் தமிழகம் சந்தித்துவருகிறது.

நெடுமாங்காடு, நெய்யாற்றங்கரை, தேவிகுளம், பீர்மேடு எனப் பல பகுதிகள் கேரளத்துக்குப் போய்விட்டன. கொள்ளேகால், கோலார் ஆகியவை கர்நாடகத்திடமும், சித்தூர், நெல்லூர், திருப்பதி, காளஹஸ்தி உள்ளிட்ட சில பகுதிகள் ஆந்திராவிடமும் போய்விட்டன. சில நிலப்பகுதிகளை அன்றைக்கு இழந்த தமிழகம், இன்றைக்கு ஏராளமான உரிமைகளை இழந்துகொண்டிருக்கின்றது என்பது பெரும் துயரம்.

பல்வேறு கலாசாரங்களைக்கொண்ட, வெவ்வேறு விதமான வளர்ச்சி நிலையைக் கொண்ட, பல மொழிகளைப் பேசக்கூடிய மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், அவர்களின் முன்னேற்றத்துக்காகவும் மொழிவாரி மாநிலங்கள் கோரிக்கை எழுந்தது. பெரும் போராட்டங்களுக்கும், உயிர் தியாகங்களுக்கும் பிறகே மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறியிருக்கிறதா என்று பார்த்தால், வேதனையே மிஞ்சுகிறது.

காங்கிரஸ் - பா.ஜ.க
காங்கிரஸ் - பா.ஜ.க

சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவைப் பெரும்பாலான காலம் ஆட்சி செய்த காங்கிரஸாக இருக்கட்டும், இன்றைக்கு ஆட்சி செய்துகொண்டிருக்கும் பா.ஜ.க-வாக இருக்கட்டும், இருவருக்குமே அதிகாரப் பரவல் என்பதும், மாநில உரிமைகள் என்பதும் பெரும் அலர்ஜி.

எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியே நடைபெற்றதால், மத்திய அரசின் அதிகாரம்தான் மாநிலங்களில் கொடிகட்டிப் பறந்தது. மாநில உரிமைகள் குறித்து எந்த மாநில அரசும் அப்போது வாய்திறக்கவில்லை. இந்த நிலையில்தான், 1957-ல் இ.எம்.எஸ் தலைமையில் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது. அந்த ஆட்சியை அரசியல் சட்டப்பிரிவு 356-ஐப் பயன்படுத்திக் கலைத்தது மத்திய காங்கிரஸ் அரசு. அதன் பிறகு, 1967-ல் பல மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சிக்கு வந்தன.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. மத்திய அரசின் அனுமதியில்லாமல் எதையும் செய்ய முடியவில்லை என்ற சூழலில், மாநில உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள் எழுந்தன. மாநில உரிமைகள், மாநில சுயாட்சி குறித்து தி.மு.க தீவிரமாகப் பேசியது. மேற்குவங்க மாநிலத்தில் ஜோதிபாசு தலைமையில் இடது முன்னணி ஆட்சிக்கு வந்த பிறகு, மாநில அதிகாரங்கள் குறித்து அங்கும் குரல் எழுந்தது.

கருணாநிதி
கருணாநிதி

மு.கருணாநிதி, ஜோதிபாசு, பரூக் அப்துல்லா, என்.டி.ராமராவ் போன்ற மாநில உரிமைகளை உரக்கப்பேசும் தலைவர்கள், மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வேண்டும் என்று குரல் எழுப்பினர். ஆனாலும், மாநிலங்களுக்கு உரிமைகள் வழங்க மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. அதுமட்டுமல்ல, இருந்த உரிமைகளும் பறிக்கப்பட்டன. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, பொதுப்பட்டியலுக்கு கொண்டுசெல்லப்பட்டது. இன்றைக்கு 3-ம் வகுப்புக்கும் 5-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு முடிவுசெய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது.

இந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தமிழ் வளர்ச்சி நாளாக அறிவித்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அந்தக் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜிடம் பேசினோம்.

``அதிகாரங்கள் அனைத்தும் மத்தியில் குவிக்கப்பட வேண்டும் என்று விரும்பிய மத்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள், அதை நோக்கி செயல்பட்டார்கள். தங்களுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று பார்த்து காங்கிரஸ் ஆட்சியாளர்கள் செயல்பட்டார்கள். தற்போது மத்தியில் இருக்கும் பா.ஜ.க-வோ, ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே வரி என்று ஒற்றைத்தன்மையை நோக்கமாகக் கொண்டதாக இருக்கிறது. தத்துவார்த்த ரீதியாகவே கூட்டாட்சிக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள். மொழிவாரி மாநிலங்களைச் சிதைக்கிறார்கள்.

கனகராஜ்
கனகராஜ்

புதிய பொருளாதாரக் கொள்கை வந்த பிறகு, மாநில அரசின் உரிமைகள் மட்டுமல்ல, மத்திய அரசின் உரிமைகளும் பறிபோய்விட்டன. உலக வர்த்தக ஒப்பந்தம் போன்ற சில ஒப்பந்தங்களால் நம் தேசத்தின் முக்கியமான பல உரிமைகள் பறிபோயுள்ளன. நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளால் வர்த்தகம் மற்றும் தொழில்களுக்காக நாட்டின் கதவுகள் திறந்துவிடப்பட்டப் பின்னணியில், மாநிலங்களுக்கு தனியான உரிமைகள் என்பது அடிபட்டுப்போய்விட்டது. மாநிலங்கள் வசம் இருந்த பல உரிமைகள், புதிய சட்டங்களின் மூலமாகப் பறிக்கப்பட்டுள்ளன.

`ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற மத்திய அரசின் திட்டம், பொதுவிநியோகத்திட்டத்தையே காலிசெய்கிறது. மத்திய அரசின் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கப்படும். ஆனால், தமிழ்நாட்டில் ஏராளமான பொருள்கள் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டன. உணவுப்பாதுகாப்புச் சட்டம் கொண்டுவந்து, அவற்றையெல்லாம் நிறுத்தச்சொல்லிவிட்டது மத்திய அரசு. தான் நினைக்கிற விலையில், தான் நினைக்கிற பொருள்களை ரேஷன் கடைகளில் தமிழ்நாடு அரசால் வழங்க முடியாது. அப்படி வழங்கினால், மத்திய அரசின் நிதி கிடைக்காது என்ற நிலை வந்துவிட்டது.

ரேஷன் கடை
ரேஷன் கடை

வரி வருவாயில் பெரும் பகுதி மத்திய அரசிடம் இருந்த நிலையில், தற்போது வரி விதிக்கும் அதிகாரம் ஒட்டுமொத்தமாக மத்திய அரசிடம் போய்விட்டது. ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்டப் பிறகு மாநில அரசுகள் எந்த வரியையும் விதிக்க முடியாது. மதுபானத்துக்கான கலால் வரி, பெட்ரோலுக்கான வாட் வரி ஆகியவற்றை மட்டும் விட்டுவைத்துள்ளார்கள். மற்றபடி, தேசியப் பேரிடர் வந்தால்கூட மத்திய அரசை எதிர்பார்த்துதான் மாநில அரசு இருக்க வேண்டிய நிலை உள்ளது.

குடிநீர் விநியோகத்தைத் தனியாருக்கு கொடுக்கவில்லையென்றால், தாங்கள் வழங்கிவரும் மானியத்தைத் தர முடியாது என்கிற மத்திய அரசு. நிலத்தடி நீரைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டம், அணைப்பாதுகாப்புச் சட்டம் எல்லாம் அப்பட்டமாக மாநில உரிமைகளைப் பறிப்பவை.

தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் நிறுத்தப்பட்டதற்கும் மத்திய அரசுதான் காரணம். மாநில அரசின் பல்வேறு பணிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வுகளை எல்லா மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் எழுதலாம் என்று சட்டத்தைத் திருத்தியதற்கு மத்திய அரசு கொடுத்த அழுத்தமே காரணம்.

பொதுவான மனிதர் என்ற தோற்றம் கொண்டவர்களை மாநில ஆளுநர்களாக நியமிக்கும் நிலைமை மாறி, இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை ஆளுநர்களாக நியமிக்கும் நிலைமை இருக்கிறது. இப்படியாக, இன்றைக்கு மாநிலங்களின் அனைத்து அதிகாரங்களும் உரிமைகளும் மத்திய அரசால் பறிக்கப்பட்டுவரும் நிலையில், நவம்பர் 1-ம் தேதி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது” என்றார்.

மாநில உரிமைகளுக்காக நீண்டகாலமாகப் போராடிவரும் கட்சியான தி.மு.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணனிடம் பேசினோம்.

``ஆரம்பத்தில், தேசியக் கட்சிகள்தான் எல்லா மாநிலங்களிலும் பிரதானமாக இருந்தன. ஆகவே, மாநில உரிமைகள் பெரிதாகப் பார்க்கப்படவில்லை. இந்த நிலையில், பெரிய மாநிலக் கட்சியாக உருவெடுத்த தி.மு.க., மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்தது. கடந்த 20-25 ஆண்டுகளில்தான் மற்ற மாநிலக் கட்சிகள் உருவாகின.

சரவணன்
சரவணன்

இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். பாதுகாப்பு, வெளியுறவு போன்ற முக்கியமான சில துறைகளைத்தான் மத்திய அரசு கவனிக்கும். அவசரநிலை காலத்தில் மாநிலங்களின் பல உரிமைகள் மத்திய அரசால் பறிபோகின. கல்வி பொதுப்பட்டியலுக்குப் போனது. அதன் பிறகு எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், மாநிலப் பட்டியலுக்கு கல்வியைக் கொண்டுவர முடியவில்லை. இப்போது மத்தியில் பெரும்பான்மை கொண்ட அரசு இருப்பதால், நம்முடைய உரிமைகளைப் பெற முடியவில்லை.

நம்மைப் போன்ற மாநில உரிமைகளைப் பேசக்கூடிய மாநிலக் கட்சியாக தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் போன்ற சில மாநிலக் கட்சிகள் மட்டுமே உள்ளன. மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களான லாலு பிரசாத் யாதவ், மாயாவதி போன்றவர்களும்கூட இந்தி பேசும் மாநிலங்கள் என்ற அடிப்படை மத்திய ஆட்சியாளர்களுடன் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டார்கள். இது நமக்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது.

எனவே, மாநில உரிமைகள் பறிபோவதைத் தடுத்துநிறுத்த முடியவில்லை. வரி வருவாய் என்பது மாநில அதிகாரங்களில் முக்கியமானது. நம்மிடமிருந்து மத்திய அரசுக்குப் போகும் வரி அதிகம். ஆனால், அதிலிருந்து திருப்பி வருவது மிக மிகக் குறைவு. அதையும், சமீபத்திய மக்கள்தொகை அடிப்படையில் மாற்றுவோம் என்று மத்திய ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். அதை அவர்கள் செயல்படுத்திவிட்டால், மாநிலங்களின் கதை முடிந்துவிடும்.

2026-ல், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற எம்.பி-க்களின் எண்ணிக்கையை மாற்றுவோம் என்று மத்திய ஆட்சியாளர்கள் கூறிவருவது பெரும் ஆபத்தானது. அப்படிவந்தால், தற்போது 80 எம்.பி-க்களைக் கொண்ட உ.பி மாநிலத்துக்கு 120 எம்.பி-க்கள் வந்துவிடுவார்கள். தமிழக எம்.பி-க்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதற்காக நாம் கொடுக்கப்போகிற விலை இது. கல்வித்துறையில் தமிழ்நாடு சிறப்பாக முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு முக்கியக் காரணம் கல்வியை இங்கு அனைவருக்கும் பரவலாக்கியதுதான்.

ஆனால், அதைக் காலிசெய்யும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. கல்வித்துறையில் எல்லாவற்றிலும் தலையிடுகிறது. 3-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கொண்டுவருகிறார்கள். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதுதான் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது” என்று அச்சத்துடன் கூறுகிறார் வழக்கறிஞர் சரவணன்.

பத்து ஆண்டுகள் அல்ல... அடுத்த ஐந்து ஆண்டுகளில் எல்லாம் தெரிந்துவிடும்.

மொழிவாரி மாநிலங்கள் உருவான கதை... 15 படங்களில்!  #TamilNaduDay
அடுத்த கட்டுரைக்கு