Published:Updated:

Hunger Index: `பணக்காரர்களுக்கான அரசு; கேலிக்குரிய நாடாக்கிவிடும்!’ - மோதும் பா.ஜ.க - காங்கிரஸ்

உலக பட்டினிக் குறியீட்டு அட்டவணை
உலக பட்டினிக் குறியீட்டு அட்டவணை ( Representational Image | எம்.விஜயகுமார் )

உலக பட்டினிக் குறியீட்டு அட்டவணையில், இந்தியா 94-வது இடத்தில் இருக்கிறது. ``மத்திய பா.ஜ.க அரசு, ஏழைகள் மீது அக்கறை காட்டாமல், பணக்காரர்களுக்காக மட்டுமே செயல்படுவதால்தான் இந்த நிலைமை'' என்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி.

உலகளாவிய நாடுகளில், தீவிரமான பட்டினிப் பிரிவில், இந்தியா இடம்பிடித்திருப்பது குறித்து பா.ஜ.க - காங்கிரஸ் இடையே ஏற்பட்டிருக்கும் முட்டல், மோதல்கள் இந்திய அரசியலையே அதிரவைத்துவருகின்றன!

உலகெங்குமுள்ள பட்டினிச் சாவுகளையும், ஊட்டச் சத்துக் குறைபாடுகளையும் குறிக்கும் வகையில், ஆண்டுதோறும் பட்டினிக் குறியீட்டு அட்டவணை வெளியிடப்பட்டுவருகிறது. இந்த வரிசையில், அண்மையில் வெளியாகியிருக்கும் பட்டினிக் குறியீட்டு அட்டவணையில், இந்தியா 94-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. 107 நாடுகள் கொண்ட அந்தப் பட்டியலில் பாகிஸ்தான், வங்கதேச நாடுகளுக்கு அடுத்து இந்தியா இடம்பெற்றிருப்பது, இந்தியர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இது குறித்து ட்விட்டரில் வேதனை தெரிவித்திருந்தார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரான ஜோதிமணி இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, ``2004 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் மட்டும் இந்தியாவின் வறுமை என்பது 38.9 % -லிருந்து 21.2% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது என்று உலக வங்கியின் அறிக்கை சொல்கிறது. அதாவது மொத்தம் 14 கோடி மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டெடுத்திருக்கிறது அன்றைய காங்கிரஸ் அரசு. இது அந்த காலகட்டத்தில், உலக நாடுகள் எவையும் செய்யாத சாதனை.

அப்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது 8.2% ஆக இருந்தது. மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் என புதுப்புது திட்டங்களை அமல்படுத்தியது காங்கிரஸ் அரசு. இது மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ததோடு, பணப்புழக்கத்தையும் அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக மக்களின் வறுமை குறைந்தது; பட்டினிச் சாவுகளும் தவிர்க்கப்பட்டன. காரணம்... அன்றைக்கு ஆட்சிப் பொறுப்பிலிருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஏழை எளிய மக்களின் மீது அன்பும் அக்கறையும் இருந்தது.

ஆனால், இன்றைக்கு மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்துவரும் பா.ஜ.க அரசுக்கு, இப்படியான அடித்தட்டு மக்கள் நாட்டில் இருக்கிறார்கள் என்பதே தெரிவதில்லை. அதனால்தான் ஊரடங்கின்போது, புலம்பெயர் தொழிலாளர்கள் நாடெங்கும் சாலை வழியாகவே பல ஆயிரம் கி.மீ நடந்தே சென்ற கொடுமையெல்லாம் அரங்கேறியது.

பா.ஜ.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு பல நூறு மடங்கு உயர்ந்திருக்கிறது. அதனால்தான் இந்தியப் பணக்காரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார் அவர். கடந்த ஆண்டில் 2,750 கோடி ரூபாய் அனைத்துக் கட்சிகளுக்கும் நன்கொடையாக கிடைத்திருக்கிறது. அதில், 2,250 கோடி ரூபாய் பா.ஜ.க-வுக்கு மட்டுமே கிடைத்திருப்பதாக அந்தக் கட்சி கணக்கு காட்டியிருக்கிறது.

ஜோதிமணி
ஜோதிமணி

இதுதவிர, `4,500 கோடி ரூபாயை கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தல் நிதிப் பத்திரமாக வாங்கியிருக்கின்றன' என எஸ்.பி.ஐ வங்கி அறிவித்திருக்கிறது. இந்த நன்கொடையை யார் வழங்கினார்கள் என்ற கணக்கைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பா.ஜ.க அரசே புதிய சட்டம் கொண்டுவந்துவிட்டதால், இயல்பாகவே இந்தப் பணம் அனைத்தும் பா.ஜ.க-வுக்குத்தான் போய்ச் சேர்ந்திருக்கும். ஆக, பணக்காரர்களின் கைகளுக்குச் சென்ற பணம் மறுபடியும் பா.ஜ.க-வின் கைகளுக்குத்தான் திரும்பி வருகிறது.

ஆக, மக்கள் பசி, பட்டினியில் சிக்கித் தவிக்கின்றனர். பா.ஜ.க-வினரும் பத்து பணக்காரர்களும் மட்டுமே நாட்டின் பணத்தை கொள்ளையடித்து கொழுக்கின்றனர். வறுமையில் சிக்கித் தவித்துவரும் ஏழை மக்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்கள் எதையும் இவர்கள் தீட்டுவதில்லை. மாறாக, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி என அடுத்தடுத்து தவறான கொள்கைகளால் பொருளாதாரத்தைச் சீரழித்துவிட்டனர். இன்றைக்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு வெறும் 4 % -ஆக குறைந்துபோயிருக்கிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது.

``ஜோதிகா உதவியால் நோயாளிகள் பயன்பெறுகிறார்கள்!" - தஞ்சை மருத்துவக் கல்லூரி டீன்

இவையெல்லாம் கடந்த ஆண்டு நிலவரம். இந்த கொரோனா காலகட்டத்தில், மத்திய அரசின் நடவடிக்கைகள் இன்னும் மோசமாக இருப்பதால், அடுத்த ஆண்டு வரக்கூடிய அறிக்கைகள் இன்னும் படுமோசமாக இருக்கும் என்பதால், உண்மையிலேயே அச்சமாக இருக்கிறது. இப்போது வெளியாகியிருக்கும் பட்டினிக் குறியீட்டு அட்டவணையிலேயே பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகள் நம்மைவிட சிறந்த நிலையில் இருக்கின்றன. அடுத்த வருடம் என்னாகுமோ...'' என்றார் அச்சத்துடன்.

பா.ஜ.க அரசின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு தமிழக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.``எந்தத் தரவுகளின் அடிப்படையில், இப்படியோர் ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது என்பது போன்ற எந்த விவரமும் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டில் கொடுக்கப்படவில்லை. ஏனெனில், இது குறித்த புள்ளிவிவரங்களை அதிகாரபூர்வமாக கொடுக்க வேண்டியதே மத்திய அரசுதான்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இது போன்ற ஆய்வுகளை உலகம் முழுக்க பல்வேறு நிறுவனங்களும் செய்துவருகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு குறியீடுகளின் அடிப்படையில், பல்வேறு அளவுகளின் அடிப்படையில் கணக்கீடு செய்து ஒவ்வொரு நாட்டின் நிலையையும் குறிக்கின்றன. 2014-க்குப் பிறகு மத்திய அரசு, எந்தத் தரவுகளையும் யாருக்கும் கொடுக்கவில்லை.

உண்மையில், பா.ஜ.க ஆட்சியில்தான் பட்டினிச் சாவுகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டேவருகிறது. ஆனால், இப்போது இவர்கள் சொல்கிற புள்ளிவிவரங்களெல்லாம் 2014-ம் ஆண்டு ஆய்வுகளின் அடிப்படையில் சொல்லப்படுபவை.

ஐந்து வயதுக்குட்பட்ட, எடை குறைவான, உயரம் குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துகொண்டே வருகிறது. இவர்களது இறப்புவிகிதமும் பெருமளவில் குறைந்திருக்கிறது. இது குறித்த அனைத்து விவரங்களும் நம்முடைய நிதி ஆயோக்கின் அறிக்கையிலேயே தெளிவாக இருக்கின்றன.

US Elections: `ம்யூட்'... அதிபர் தேர்தல் விவாதத்தில் புதிய அதிரடி; கொதிக்கும் ட்ரம்ப்

மக்களின் வறுமையைப் போக்க உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவந்ததாகச் சொல்கிறது காங்கிரஸ் கட்சி. 2013-ல்தானே இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தார்கள்... அதை முழுமையாக அமல்படுத்தியது பா.ஜ.க அரசுதானே... மேலும் உணவுப் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டையும் கடந்த ஆறு வருடங்களில் இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறோம். கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில், இந்த உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் வழியே நபருக்கு 5,000 ரூபாய் வரை வழங்கிவருகிறோம்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் நோய்த்தொற்றால், கர்ப்பிணிகள் மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் இறக்கிறார்கள். எனவே, இதைத் தடுப்பதற்காக 'தூய்மை இந்தியா' திட்டத்தை பா.ஜ.க அரசு அமல்படுத்தியிருக்கிறது. அதனால்தான் இன்றைக்கு இந்தியா முழுக்க எல்லா கிராமங்களிலும் கழிப்பறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உண்மை இவ்வாறிருக்க, எதிர்க்கட்சிகள் தங்கள் அதிகாரத்துக்காக மலிவான அரசியல் செய்துவருவது, இந்தியாவை கேலிக்குரிய நாடாக்கிவிடும்... தயவுசெய்து அப்படிச் செய்யாதீர்கள் என எதிர்க்கட்சிகளைக் கேட்டுக்கொள்கிறோம்'' என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு