Published:Updated:

ரஜினி அரசியலுக்கு வராததற்கு கொரோனாவும் சீனாவும்தான் காரணம்! - அடடே அர்ஜுனமூர்த்தி

அர்ஜுனமூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
அர்ஜுனமூர்த்தி

அப்போது தலைவராக இருந்த முருகனுக்கும், கட்சியினருக்கும் என் மேல் கொஞ்சம் கோபம், நிறைய வருத்தம்

ரஜினி அரசியலுக்கு வராததற்கு கொரோனாவும் சீனாவும்தான் காரணம்! - அடடே அர்ஜுனமூர்த்தி

அப்போது தலைவராக இருந்த முருகனுக்கும், கட்சியினருக்கும் என் மேல் கொஞ்சம் கோபம், நிறைய வருத்தம்

Published:Updated:
அர்ஜுனமூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
அர்ஜுனமூர்த்தி

தமிழக பா.ஜ.க அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜுனமூர்த்தி, நடிகர் ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்தபோது அவர் பக்கம் தாவினார். தொடங்கப்படாத கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ரஜினியால் அறிவிக்கப்பட்டார். கடைசி நேரத்தில், கட்சி ‘கேன்சல்’ என்று ரஜினி சொல்லிவிட்டதால், அவசர அவசரமாக மற்றொருவரின் ‘இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’யை வாடகைக்கு எடுத்தார் அர்ஜுனமூர்த்தி. இப்போது மீண்டும் பா.ஜ.க-வில் இணைந்த கையோடு டெல்லிக்குப் பறந்த அவரை, போனில் தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்.

“பா.ஜ.க-வில் சேருவீர்கள் என்று தெரியும்... ஏன் இந்த தாமதம்?”

“ஆமாம்... பா.ஜ.க-வில் என்னுடைய ரோல் மிகப்பெரியது. அறிவுசார் பிரிவு பாப்புலர் ஆகக் காரணமே இந்த அர்ஜுனமூர்த்திதான். ரஜினி சார் அரசியலுக்கு வரவில்லை என்று தெரிந்தவுடனேயே நான் பா.ஜ.க-வில் சேர்ந்திருக்கலாம். ஆனால், அது தேர்தல் நேரம். அதுமட்டுமல்லாமல், சாரின் புகழைப் பயன்படுத்தி இன்னொரு கட்சிக்குச் செல்வது நன்றாக இருக்காது என்றுதான் சேரவில்லை.”

“ஆனால், ரஜினி கட்சிக்கு நீங்கள் போனபோது பா.ஜ.க-வில் யாருமே தடுக்கவில்லையே?”

“யார் சொன்னது... அப்போது தலைவராக இருந்த முருகனுக்கும், கட்சியினருக்கும் என் மேல் கொஞ்சம் கோபம், நிறைய வருத்தம். ஆனால், நான் எந்த லட்சியத்துக்காகக் கட்சியை விட்டுச் செல்கிறேன் என்கிற காரணத்தை விளக்கியதும் என் மேல் அவர்களுக்கு இன்னும் மரியாதை கூடியது. கட்சியைவிட்டுப் போனது எனக்கே கொஞ்சம் வருத்தம்தான். இப்போது மீண்டும் வந்து இணைந்திருப்பதன் மூலம் பெரும் மகிழ்வோடும் மன அமைதியோடும் இருக்கிறேன்.”

ரஜினி அரசியலுக்கு வராததற்கு கொரோனாவும் சீனாவும்தான் காரணம்! - அடடே அர்ஜுனமூர்த்தி

“பா.ஜ.க-வின் ‘பி’ டீமாக ரஜினியை உருவாக்கத்தான் போனீர்களாமே?”

“அடிப்படையிலேயே ரஜினி சார் ஒரு தலைவர். அவரது ரசிகர்கள் அவரைத் ‘தலைவா’ என்றுதான் அழைத்துவருகிறார்கள். அப்படியிருக்கும்போது அவர் தனக்கு விருப்பமான அரசாங்கத்தையோ, அரசியலையோ உருவாக்கத்தான் ஆசைப்படுவார். அவர் எப்படி ‘பி’ டீம், ‘சி’ டீம்-ஆகச் செயல்படுவார்?’’

“ ‘ரஜினிகாந்த் நடிகராக மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால், அரசியலில் படுதோல்வி கண்டிருக்கிறார்’ என்கிறார்களே?”

“என்னமோ அவர் கட்சி தொடங்கி, வெறும் 4 சதவிகித வாக்கு மட்டுமே வாங்கித் தோற்றுப் போனதுபோல் சொல்கிறார்கள். கொரோனா மட்டும் வராமல் இருந்திருந்தால் நிச்சயம் அவர் வெற்றிபெற்றிருப்பார். ரஜினி அரசியலுக்கு வராததற்கு அவரைக் குறை சொல்ல மாட்டேன். கொரோனாவையும் சீனாவையும்தான் குறை சொல்வேன்.”

“இனி உங்கள், ‘இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’ தொண்டர்களின் எதிர்காலம்?”

“ஏற்கெனவே 20 ஆண்டுகள் இயங்கிவந்த ஒரு கட்சியில்தான் நான் சேர்ந்து தலைவரானேன். இந்த ஆகஸ்ட் 4-ம் தேதி தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன். நான் இல்லாமல் அந்தக் கட்சியை நடத்துவது கஷ்டம் என்பதால், கட்சியையே கலைப்பதற்கு தேர்தல் ஆணையத்தை அணுகியிருக்கிறார்கள். இதில் எனக்கு வருத்தம்தான். அப்படிக் கலைத்தால், ‘நம் கட்சியிலிருந்தவர்கள் பா.ஜ.க-வில் சேருங்கள்’ என்று முன்னணி நிர்வாகிகளிடம் சொல்லியிருக்கிறேன். ரஜினி ரசிகர் மன்றத்தில் இருப்பவர்களும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். அநேகமாக எங்களின் செயல்பாடுகளைப் பார்த்து அவர்களும் பா.ஜ.க-வில் இணைவார்கள்.”

“மாநிலத் தலைவர் அண்ணாமலை சீனியர்களை மதிப்பதில்லை என்கிற விமர்சனம் இருக்கிறது. பா.ஜ.க-வில் உங்களுக்கான சுதந்திரம் இருக்கும் என்று நம்புகிறீர்களா?”

“விவேகமும் வீரியமும் கொண்ட துடிப்பான இளைஞர் அண்ணாமலை. ஓர் இலக்கு வைத்து பயணிக்கும்போது யாரையும் கலந்தாலோசிக்க வேண்டும் என்கிற தேவை இருக்காது. அதேநேரத்தில் அவர், சீனியர்களின் ஆலோசனைகளைக் கேட்கவும் செய்கிறார். தமிழ்நாடு பா.ஜ.க-வில் அனுபவசாலிகளும், ஆரோக்கியமான இளைஞர்களும் கலந்துதான் வேலை செய்துவருகிறார்கள். இது 2024 மற்றும் 2026 தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும். சீனியர், ஜூனியர் என்கிற சண்டைகளையெல்லாம் தாண்டி வாக்குவங்கியை அதிகப்படுத்துவதே பா.ஜ.க-வின் இப்போதைய தேவை. அதற்கான வேலைகளில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை. அதனால்தான் நிறைய பேர் பா.ஜ.க-வில் இணைகிறார்கள்.”

“ஆனால், பா.ஜ.க-வில் சமூகவிரோதிகளும் ரௌடிகளும்தான் அதிக அளவில் இணைகிறார்கள் என்கிற விமர்சனம் எழுந்திருக்கிறதே?”

“யாரும் ரௌடி என்று முகத்தில் எழுதி வைத்துக்கொண்டு சேர்வதில்லையே... எல்லாக் கட்சிகளிலும் பலதரப்பட்ட மக்கள் வந்து சேர்வார்கள். அரசியல் கட்சி என்பதே சமுதாயத்தின் மற்றொரு முகம்தானே... வளர்ந்துவரும் பா.ஜ.க-வை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக அதை எவ்வளவு சிறுமைப்படுத்த, கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவையும் செய்துவருகின்றன இங்குள்ள திராவிடக் கட்சிகள்.”

“அதிமுக-வில் நடக்கும் பிரச்னைகளுக்கெல்லாம் பா.ஜ.க-தான் காரணம் என்கிறார்களே?’’

“உலகத்தில் என்ன நடந்தாலும் அதற்கு பா.ஜ.க-தான் காரணமா... இப்படியே போனால், பூமி உருண்டையைச் சுற்றிவிடுபவரே மோடிதான் என்று சொல்லப்போகிறார்கள். அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, சசிகலா அரசியலில் இல்லை என்றாலும் சர்வ அதிகாரத்தோடு இருந்தவர். எடப்பாடியார் நான்கு ஆண்டு ஆட்சி செய்து தன்னை நிரூபித்திருக்கிறார். ஓ.பி.எஸ் மூன்று முறை முதல்வராக இருந்து மக்களிடம் தன்னைத் தெரியப்படுத்திவிட்டார். இதில் பா.ஜ.க செய்வதற்கு என்ன இருக்கிறது... பா.ஜ.க-வை பலப்படுத்தவே எங்களுக்கு நேரம் பத்தவில்லை.’’

“பா.ஜ.க தலைவராக அர்ஜுனமூர்த்தி?”

``அண்ணாமலையே மிகச் சிறப்பாகத்தான் செயல்பட்டுவருகிறார். 2026-ல் தமிழ்நாட்டின் முதல்வராக வருவதற்கு அத்தனை யோக்கியாம்சங்களும் அண்ணாமலைக்கு இருக்கின்றன.”