Published:Updated:

சசிகலா விடுதலை ட்வீட்... யாருடைய அரசியல் வியூகம்?

யாருடைய அரசியல் வியூகம்?
பிரீமியம் ஸ்டோரி
யாருடைய அரசியல் வியூகம்?

பின்னணியில் விறுவிறு கணக்குகள்

சசிகலா விடுதலை ட்வீட்... யாருடைய அரசியல் வியூகம்?

பின்னணியில் விறுவிறு கணக்குகள்

Published:Updated:
யாருடைய அரசியல் வியூகம்?
பிரீமியம் ஸ்டோரி
யாருடைய அரசியல் வியூகம்?
‘திருமதி சசிகலா நடராஜன் 2020, ஆகஸ்ட் 14-ம் தேதி பெங்களூரு சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார்’ என்று ட்விட்டரில் பதிவிட்டார் பா.ஜ.க-வின் தேசிய நிர்வாகிகளில் ஒருவரான ஆசீர்வாதம் ஆச்சாரி.

அடுத்தடுத்த நாள்களில் இந்தத் தகவல் தமிழக அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

இது குறித்த விசாரணையில் இறங்கினோம். ‘‘ஆரம்பத்தில் ஆ.ராசாவின் உதவியாளராக இருந்தவர்தான் இந்த ஆச்சாரி. பிறகு 2ஜி விவகாரம் எழுந்தபோது பல முக்கிய விஷயங்களை வெளிக்கொண்டு வந்ததில் முக்கியப் பங்கு இவருக்கு உண்டு. இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு வேண்டப்பட்ட நபராக மாறினார் ஆச்சாரி. அதேசமயம் அந்தக் காலகட்டத்தில் சுப்பிரமணியன் சுவாமியின் வலதுகரமாகவும் செயல்பட்டு வந்தார். 2ஜி வழக்கு விவகாரத்துக்குப் பிறகு சுவாமியின் ஆலோசனைப்படி பா.ஜ.க-வில் இணைந்தார். 2014-ம் ஆண்டு பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்காக ‘விஷன்’ கமிட்டி அமைக்கப்பட்டது. அதில் ஆச்சாரியும் இடம்பெற்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தநிலையில்தான் கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலின் முதல் பிரசாரத்தை தீவுத்திடலில் தொடங்குவதற்காக வீட்டிலிருந்து கிளம்பினார் ஜெயலலிதா. அப்போது, ‘அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை தயாரா, இந்தக் கூட்டத்திலேயே வெளியிட்டு விடலாம்’ என்று சசிகலாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர், ‘இன்னும் தயார் செய்யவில்லை’ என்று கூற... கடுங்கோபத்துடன் பிரசாரத்துக்கு சென்றுவிட்டார்.

சசிகலா விடுதலை ட்வீட்... யாருடைய அரசியல் வியூகம்?

அன்று இரவே ஜெயலலிதாவின் வீட்டிலிருந்து ஆச்சார்யாவைத் தொடர்புகொண்டு, சில குறிப்புகளை மட்டும் சொல்லி, ‘இதைவைத்து அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையைத் தயார் செய்து தர வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார்கள். அதன்படி உடனடியாகத் தேர்தல் அறிக்கையைத் தொகுத்து கொடுத் திருக்கிறார் ஆச்சாரி. அதில் இடம்பெற்ற திட்டங்களில் ஒன்றுதான் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம். இப்படியாக ஜெயலலிதாவுக்கு நம்பிக்கைக்குரிய நபராக இருந்த ஆச்சாரியின் தொடர்பு, தற்போது சசிகலா வரை தொடர்கிறது’’ என்று முன்கதையைச் சொன்னார்கள் ஆச்சாரிக்கு வேண்டப்பட்டவர்கள்.

அவர்களே தொடர்ந்து, ‘‘ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சுப்பிரமணியன் சுவாமியும் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்ததால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சுவாமியும் ஆச்சாரியும் இணைந்தே சசிகலாவை விடுவிக்கும் வேலையில் ஈடுபட்டனர். இந்தநிலையில் ஜூன் 19-ம் தேதி பா.ஜ.க தலைமையிலிருந்து முக்கிய நபர் ஒருவர் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தரப்பைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அவரிடம் எடியூரப்பா தரப்பில் ‘ஆகஸ்ட் மாதம் சசிகலாவை விடுதலை செய்ய வாய்ப்பிருக்கிறது’ என்று கூறப்பட்டதாம். இந்தத் தகவல் ஆச்சாரியின் காதுகளை எட்டியது. அதன் பிறகே சசிகலா விடுதலை தொடர்பான பதிவை ட்விட்டரில் வெளியிட்டார் ஆச்சாரி’’ என்றார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆச்சாரியின் ட்விட்டர் பதிவு அ.தி.மு.க-வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து இது குறித்து விசாரிக்கச் சொல்லியிருக்கிறார்கள். அப்போது கர்நாடக சிறைத்துறை தரப்பில், ‘சசிகலா விடுதலை தொடர்பாக அதிகாரபூர்வமான உத்தரவு எதுவும் வரவில்லை’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. தொடர்ந்து கர்நாடக சிறைத்துறை சசிகலா விடுதலை தொடர்பான செய்திக்கு மறுப்பும் தெரிவித்தது.

தொடர்ந்து முதல்வர் எடப்பாடி தரப்பிலிருந்து சட்ட நிபுணர்களிடமும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ‘சசிகலாமீது கர்நாடக சிறைத்துறை டி.ஜ.ஜி-யாக இருந்த ரூபா சொல்லியிருந்த புகார்களை மீண்டும் தூசுதட்டி எடுத்தால், சசிகலாவின் நன்னடத்தைக் காலத்தை முடக்கிவிடலாம்’ என்று ஆலோசனை சொல்லப் பட்டதாம். இந்தத் தகவல் டி.டி.வி.தினகரன் தரப்புக்கு தெரிந்ததும், அவரும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்துள்ளார். கொரோனா நெருக்கடியால் இப்போது சசிகலாவைச் சந்திக்க முடியாது என்பதால் இப்போதைக்கு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று தினகரன் தரப்பு முடிவு செய்துள்ளது.

ஆசீர்வாதம் ஆச்சாரி
ஆசீர்வாதம் ஆச்சாரி

சசிகலாவின் வழக்கறிஞரான ராஜா செந்தூர் பாண்டியனிடம் இது குறித்துப் பேசினோம். ‘‘இந்திய தண்டனைச் சட்டப்படி, தண்டிக்கப்பட்ட ஒரு நபர் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக் காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு காலத்தைச் சிறையில் கடந்துவிட்டாலே அவரை விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. சசிகலாவின் மொத்த தண்டனைக் காலம் 48 மாதங்கள். ஏற்கெனவே அவர் சிறையிலிருந்த காலத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் 46 மாதங்கள் அவர் சிறையில் இருக்க வேண்டும். 2019, அக்டோபர் மாதமே அவர் தண்டனைக் காலத்தில் மூன்றில் இரண்டு பங்கைக் கடந்துவிட்டார்.

தவிர, நன்னடத்தை விதிகளின்படி மாதத்துக்கு மூன்று நாள்களும், சிறையில் செய்யும் பணிகளுக்காக மாதத்துக்கு மூன்று நாள்களும் என மாதத்துக்கு ஆறு நாள்களை தண்டனைக் காலத்திலிருந்து கழிக்க வேண்டும். இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டால், சசிகலா தண்டனைக் காலம் முடிவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பாகவே விடுதலையாகலாம். அதன்படி சிறைத்துறை நினைத்தால் இந்த ஜூலை மாதமே சசிகலாவை விடுவிக்க முடியும். அதேசமயம், ஆச்சாரி எதன் அடிப்படையில் ‘ஆகஸ்ட் மாதம் சசிகலா விடுதலை யாவார்’ என்று பதிவிட்டார் என்பது எனக்குத் தெரியாது. சசிகலாவின் விடுதலையை கர்நாடக அரசு தள்ளிப்போட நினைத்தாலும் அவர்களால் 2020, அக்டோபர் இறுதிக்கு மேல் தள்ளிப்போட முடியாது. தவிர, நாங்களும் சசிகலா விடுதலைக்கான கோப்புகளை மூவ் செய்துவருகிறோம்’’ என்றார்.

சசிகலா
சசிகலா

சசிகலாவை விரைவில் விடுதலை செய்து, தமிழக அரசியலில் தனது ஆளுமையை நிரூபிக்க சுப்பிரமணியன் சுவாமி தரப்பு முட்டி மோதுகிறது. சுவாமியின் வியூகங்களை உடைக்க, திட்டமிட்டு காய்நகர்த்துகிறது ஆடிட்டர் குருமூர்த்தி தரப்பு. `சமீபகாலமாகத் தனி ரூட்டில் பயணிக்கும் ஆச்சாரி, தனது ஆளுமையை நிரூபிக்க இப்படியொரு ட்வீட்டைப் பதிவு செய்துள்ளார்’ என்பதே அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு. இதற்கிடையே, ‘‘டிசம்பர் வரை சசிகலாவின் விடுதலையைத் தள்ளிப்போடுங்கள்... அதற்குள் சீட் பங்கீடு முதல் கூட்டணி வரை அனைத்தையும் முடிவு செய்துகொள்கிறோம்’’ என்று அ.தி.மு.க தரப்பிலிருந்து சகல திசைகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism