அரசியல்
அலசல்
Published:Updated:

எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டுகிறதா பா.ஜ.க?

ராகுல் காந்தி, மணீஷ் சிசோடியா, அபிஷேக் பானர்ஜி, கவிதா
பிரீமியம் ஸ்டோரி
News
ராகுல் காந்தி, மணீஷ் சிசோடியா, அபிஷேக் பானர்ஜி, கவிதா

தோண்டி எடுக்கப்படும் வழக்குகள்... தீவிரப்படுத்தப்படும் விசாரணைகள்...

காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் தொடர்புடைய ஒன்பது இடங்களில் அதிரடி சோதனை நடத்தியிருக்கிறது சி.பி.ஐ. விவசாயிகள் போராட்டம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பறிப்பு, அக்னிபத் திட்டம், புல்வாமா தாக்குதல் போன்ற விவகாரங்களில் ஆளும் பா.ஜ.க அரசைக் கடுமையாக விமர்சித்தவர் சத்யபால் மாலிக். அவரைப் பழிவாங்கும்விதமாகவே, பழைய இன்ஷூரன்ஸ் மோசடி வழக்கைத் தோண்டியெடுத்திருக்கிறது சி.பி.ஐ என குற்றம்சாட்டுகின்றன எதிர்க்கட்சிகள். சத்யபால் மாலிக்கும், `எனக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு பா.ஜ.க அரசுதான் பொறுப்பு’ என பகிரங்கமாகவே கூறியிருக்கிறார்.

`நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், தேசிய அளவிலும், மாநிலங்களிலும் பா.ஜ.க-வுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழும் எதிர்க்கட்சித் தலைவர்களைக் கட்டம்கட்டுகிறது பா.ஜ.க’ எனத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. குறிப்பாக, சி.பி.ஐ (CBI), அமலாக்கத்துறை (ED) போன்ற விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவர்களை பல்வேறு வழக்குகளில் மத்திய அரசு சிக்கவைத்துவருவதாக 14 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கின்றன. அப்படி ‘விசாரணை வளையத்துக்குள்’ கொண்டுவரப்பட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் யார், யார்... அவர்கள்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் என்னென்ன... பார்க்கலாம்!

ராகுல் காந்தி - இந்திய தேசிய காங்கிரஸ்

2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, ‘மோடி’ என்ற பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திமீது, பா.ஜ.க எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி, குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. அதேபோல, பாட்னா, புனே நீதிமன்றங்களிலும் ராகுல் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 2014 முதல் தற்போது வரை ராகுல் மீது 10-க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதைத் தடுப்பதற்கான பா.ஜ.க-வின் செயல்திட்டமே என்கிறது காங்கிரஸ். இதேபோல, நேஷனல் ஹெரால்டு வழக்கு, ராஜீவ் காந்தி அறக்கட்டளை விவகாரம், பாரத் ஜோடோ நடைப்பயண விதிமீறல் வழக்குகளும் அவரைப் பின்தொடர்கின்றன.

ராகுல் காந்தி, மணீஷ் சிசோடியா, அபிஷேக் பானர்ஜி
ராகுல் காந்தி, மணீஷ் சிசோடியா, அபிஷேக் பானர்ஜி

மணீஷ் சிசோடியா - ஆம் ஆத்மி

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை விவகாரத்தில் ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு, சி.பி.ஐ அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார், ஆம் ஆத்மியைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா. அதைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்த சிசோடியா, டெல்லி திகார் சிறையில் கடும் குற்றங்கள் புரிந்த குற்றவாளிகளுடன் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடமும் விசாரணை நடத்தியது சி.பி.ஐ. இந்த நிலையில், ‘டெல்லி அரசின் ரகசியத் தகவல் பிரிவான ஃபீட்பேக் யூனிட்டை ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் உளவு வேலைகளுக்குப் பயன்படுத்தியதாக’ அவர்மீது மேலும் ஒரு வழக்கைப் பதிவுசெய்திருக்கிறது சி.பி.ஐ. இதேபோல, ஆம் ஆத்மியின் முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்மீதும் பண மோசடி வழக்கு போடப்பட்டு, அவர் ஓராண்டாகச் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அபிஷேக் பானர்ஜி - திரிணாமுல் காங்கிரஸ்

ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாகக் கூறி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யுமான அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது சி.பி.ஐ. அடுத்தடுத்து அவருடைய மனைவி, உறவினர்கள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸின் பிற எம்.எல்.ஏ-க்கள் தொடர்புடைய இடங்களிலும் சி.பி.ஐ விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் முன்னாள் கல்வியமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, மாணிக் பட்டாச்சார்யா, ஜிபன் கிருஷ்ணா சாஹா என அந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் பலர் சி.பி.ஐ-யால் கைதுசெய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கவிதா - பாரத் ராஷ்டிர சமிதி

பி.ஆர்.எஸ் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை டெல்லி மதுபான ஊழல் வழக்கின் குற்றப்பத்திரிகையில் சேர்த்திருக்கிறது சி.பி.ஐ. இந்த வழக்கில் 14-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் அருண் ராமச்சந்திர பிள்ளை என்பவர், தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினராக இருக்கும் கவிதாவின் பிரதிநிதி எனக் கூறி வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் அவரிடம் மாறி மாறி விசாரணை நடத்திவருகின்றன. விரைவில் தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் கவிதா சி.பி.ஐ-யால் கைதுசெய்யப்படலாம் என்கிறார்கள்!

கவிதா, லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ், ஹேமந்த் சோரன்
கவிதா, லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ், ஹேமந்த் சோரன்

லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம்

2004-2009 ஆண்டுகளில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது ரயில்வே அமைச்சராக இருந்த பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ்தான் பா.ஜ.க-வின் முக்கியமான குறி. ரயில்வே பணிக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு வேலை வழங்கியதாக அவர்மீது சி.பி.ஐ குற்றம்சாட்டியது. இந்த வழக்கில் லாலுவின் மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி உள்ளிட்ட 14 பேர்மீது சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்து, 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது. பீகாரின் துணை முதல்வரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவையும் அழைத்து விசாரித்திருக்கிறது. தேஜஸ்வி யாதவ் குஜராத்தி தொழிலதிபர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாகக் கூறி, அகமதாபாத் நீதிமன்றத்தில் தற்போது அவதூறு வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது.

ஹேமந்த் சோரன் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

ஜார்க்கண்ட் மாநில முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மோசடி செய்ததாகவும், தன் பெயரிலேயே சுரங்கங்களை ஒதுக்கிக்கொண்டதாகவும் மாநில பா.ஜ.க குற்றம்சாட்டியது. அதைத் தொடர்ந்து, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பண மோசடி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறினார் எனக் கூறி அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பி, விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கிறது.

ரஞ்சய் ராவத் - சிவசேனா

மகாராஷ்டிராவில் கடந்த 2007-ம் ஆண்டு வீட்டு வசதி வளர்ச்சி ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட மும்பை பத்ரா சால் குடியிருப்பு சீரமைப்புத் திட்டத்தில் மோசடி செய்ததாகக் கூறி சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் மீது வழக்கு பதிவுசெய்த அமலாக்கத்துறை, கடந்த ஆகஸ்ட் மாதம் நள்ளிரவில் அவரைக் கைதுசெய்தது. மேலும், அவர் மனைவி வர்ஷா ராவத்தையும் அழைத்து விசாரித்தது.

சுமார் மூன்றரை மாதங்கள் சிறையில் இருந்த சஞ்சய் ராவத் மீதான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், `சஞ்சய் ராவத் மீதான கைது நடவடிக்கை, காரணமில்லாமல் நடத்தப்பட்ட சூனிய வேட்டை’ எனக் கூறி அவரை ஜாமீனில் விடுதலை செய்தது. இருப்பினும், சஞ்சய் ராவத்துக்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணை இன்னும் நிலுவையில்தான் இருக்கிறது.

ரஞ்சய் ராவத், ஹசன் முஷ்ரிஃப், அகிலேஷ் யாதவ்,பினராயி விஜயன்
ரஞ்சய் ராவத், ஹசன் முஷ்ரிஃப், அகிலேஷ் யாதவ்,பினராயி விஜயன்

ஹசன் முஷ்ரிஃப் - தேசியவாத காங்கிரஸ்

கோலாப்பூர் சர்க்கரை ஆலை விவகாரத்தில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஹசன் முஸ்‌ரிஃப் பெரும் ஊழல் செய்திருப்பதாக, பா.ஜ.க முன்னாள் எம்.பி கிரீத் சோமையா புகார் தெரிவித்தார். அதனடிப்படையில் ஹசன் முஸ்‌ரிஃபுக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்திய அமலாக்கத்துறை, தற்போது அவரைக் கைதுசெய்யவும் தீவிரமாகியிருக்கிறது.

ஏற்கெனவே தேசியவாத காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கை, சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை சிறைக்கு அனுப்பிய நிலையில், ஓராண்டு கழித்து தற்போதுதான் அவர் ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். அதேபோல, மற்றொரு முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக், 1999-ல் தாவூத் இப்ராஹிமின் சகோதரியிடம் சட்டவிரோதமாக நில வர்த்தகம் செய்துகொண்டதாகக் கூறி அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு இன்னமும் சிறையில்தான் இருக்கிறார்.

நீளும் பட்டியல்...

இவர்கள் தவிர மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் மீது மாநில கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கு, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மீது சொத்துக்குவிப்பு வழக்கு, ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ரசென் கெலாட் மீதான உர மோசடி வழக்கு, ஜம்மு-காஷ்மீரின் மூத்த காங்கிரஸ் தலைவர் தாஜ் மொஹிதீன் மீது நில ஆக்கிரமிப்பு வழக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயனைக் குறிவைக்கும் தங்கக் கடத்தல் வழக்கு என மத்திய அரசின் சி.பி.ஐ., அமலாக்கத்துறையால் மேற்கொள்ளப்பட்டுவரும் வழக்கின் பட்டியல் நீண்டுகொண்டேயிருக்கிறது.