அரசியல்
அலசல்
Published:Updated:

கோவை குண்டு வெடிப்பு... தேவை வெள்ளை அறிக்கை! - கோவை சம்பவம் குறித்து சி.பி.ராதாகிருஷ்ணன் கறார்

சி.பி.ராதாகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
சி.பி.ராதாகிருஷ்ணன்

கடந்தகாலத்திலும் இதேபோல்தான் தீவிரவாதிகளின் வீடுகளில் புகுந்து சோதனை செய்ய வேண்டுமென்று காவல்துறை சொன்னபோது, தேர்தல் நேரம் என்று அன்றைய தி.மு.க அரசு அதைத் தடுத்து நிறுத்தியது.

தீபாவளிக்கு முந்தைய நாளன்று நிகழ்ந்த கார் வெடிப்புச் சம்பவத்தால் மீண்டும் பரபரப்பாகியிருக்கிறது கோவை. இந்த விவகாரத்தில் பல்வேறு யூகங்களின் அடிப்படையில் தமிழக பா.ஜ.க கேள்விகளை முன்வைப்பதோடு, மாநில அரசையும் விமர்சித்துவருகிறது. இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த பா.ஜ.க-வின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை போனில் தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தேன்...

“கோவைச் சம்பவத்தையும், அதில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளையும் எப்படிப் பார்க்கிறது பா.ஜ.க?”

“ஒரு கொடூரமான வரலாறு மீண்டும் திரும்புவதற்கான நிகழ்வாகத்தான் இதைப் பார்க்கிறோம். இந்தச் சதித்திட்டம் வெற்றி பெற்றிருந்தால் மிகப்பெரிய பேரழிவை கோவை மீண்டும் சந்தித்திருக்கும். அதிர்ஷ்டவசமாக, கடவுள் அருளால் ஒரு பெரும் நாசகர வேலை வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. அதில் ஒளிவு மறைவற்ற விசாரணையை மக்களின் பார்வைக்குக் கொண்டுவரவேண்டியதே தமிழக அரசின் முதல் கடமை. ஆனால், ஏறத்தாழ ஒன்றரை டன் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து சிக்கியிருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், வழக்கம்போல தி.மு.க அரசு 75 கிலோதான் என்று சொல்லி இந்த விவகாரத்தை மூடி மறைக்கப் பார்க்கிறது.”

“பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விவகாரத்தைத் தமிழக அரசு ஏன் மூடி மறைக்க வேண்டும்?”

“வாக்கு அரசியல்தான். கடந்தகாலத்திலும் இதேபோல்தான் தீவிரவாதிகளின் வீடுகளில் புகுந்து சோதனை செய்ய வேண்டுமென்று காவல்துறை சொன்னபோது, தேர்தல் நேரம் என்று அன்றைய தி.மு.க அரசு அதைத் தடுத்து நிறுத்தியது. அதன் விளைவாக, மிகப்பெரிய கொடூரத்தை கோவை சந்தித்தது. நாடு முழுவதும் பி.எஃப்.ஐ அமைப்பு தடைசெய்யப்பட்டவுடனே இங்கொன்றும் அங்கொன்றுமாக பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டபோதே தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற துர்நிகழ்வு நடந்திருக்காது. நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையின் கைகளை தி.மு.க அரசு கட்டிப்போட்டிருப்பதாலேயே இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கிறோம்.”

கோவை குண்டு வெடிப்பு... தேவை வெள்ளை அறிக்கை! - கோவை சம்பவம் குறித்து சி.பி.ராதாகிருஷ்ணன் கறார்

“ஒரு பக்கம் விசாரணை நடந்துகொண்டிருக்கையில், ‘இது தற்கொலைப்படைத் தாக்குதல்’ என முந்திக்கொண்டு அறிவிக்கிறாரே அண்ணாமலை..?”

“அந்தக் கோணத்திலும் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்கிற கருத்தைத்தான் அண்ணாமலை வலியுறுத்தியிருக்கிறார். காரணம், இறந்த நபர் தன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் அப்படியான கருத்தையே வைத்திருந்திருக்கிறான். கடந்த முறை அத்வானியைக் கொல்வதற்காக மனித வெடிகுண்டு வந்தது என்பதை முதலில் தி.மு.க மறுத்தது. ஆனால், காவல்துறையிலிருந்து ஓய்வுபெற்ற பல அதிகாரிகள் பிற்காலத்தில் அதை ஒப்புக்கொண்டார்கள். அதுபோல, மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த நபர் சென்றிருக்கிறான். எனவே, அந்தக் குற்றச்சாட்டை புறம் தள்ள முடியாது.’’

“இந்தச் சம்பவத்துக்கு எந்த ஓர் அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், மதத் தீவிரவாதமாக பா.ஜ.க கட்டமைக்க முயல்வது ஏற்புடையதா?”

“நாங்கள் அப்படி எதையும் கட்டமைக்கவில்லை. அந்த நபர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்திருந்த வாசகத்தின் அடிப்படையிலான சந்தேகத் தைத்தான் கேள்வி கேட்கிறோம். அதேவேளையில் தி.மு.க-வினரும், அவர்களின் கூட்டணிக் கட்சியினரும் `இஸ்லாமிய சமூகம் என்பது வேறு, இஸ்லாம் தீவிரவாதிகள் என்பவர்கள் வேறு’ என்ற புரிதலுடன் இந்தப் பிரச்னையை அணுக வேண்டும். இஸ்லாமியத் தீவிரவாதிகளை, இஸ்லாமிய சமூகத்திலிருந்து தனிமைப் படுத்துவதுதான் நிரந்தர அமைதிக்கு வழிவகுக்கும் என்பதை உணர வேண்டும்.”

“என்.ஐ.ஏ கண்காணிப்பு வளையத்தில் இருக்கும் ஒரு நபரின் பெயர் இந்த விவகாரத்தில் அடிபடும் நிலையில், மாநில அரசின் உளவுத்துறையை மட்டும் பா.ஜ.க குறிவைத்துக் குற்றம்சாட்டுவது ஏன்?

“என்.ஐ.ஏ அவரை வெளிச்சம்போட்டுக் காட்டி யிருக்கிறது. ஆனால், அதற்குரிய ஆதாரங்கள் அன்றைக்குக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். அதைத் தொடர்ந்து கண்காணிக்கவேண்டியது தமிழக உளவுத்துறையின் அத்தியாவசியமான கடமை. அதற்கென்று ஒரு காவல்துறை அதிகாரி நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. ஆனால், அந்தக் காவல்துறை அதிகாரியின் அறிக்கையை தமிழக டி.ஜி.பி அவர்கள் வெளிக்கொண்டு வரவில்லை. எனவே, கோவை குண்டு வெடிப்பு குறித்தும், தமிழக உளவுத்துறை எத்தகைய பணிகளை மேற்கொண்டது என்பது பற்றியும் டி.ஜி.பி வெள்ளை அறிக்கை தர வேண்டும்.”

“தமிழக பா.ஜ.க-வில் மூத்த தலைவர்களெல்லாம் அதிருப்தியில் இருப்பதாகச் செய்திகள் வருகின்றனவே?”

“அப்படி எதுவுமே இல்லை. இரண்டு தலைவர்கள் ஆளுநர்களாகிவிட்டார்கள். வானதி அகில இந்திய மகளிரணித் தலைவியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். பொன்.ராதா கிருஷ்ணனும், ஹெச்.ராஜாவும், சி.பி.ஆரும்கூட தமிழ்நாட்டைச் சுற்றிக்கொண்டுதானே இருக்கிறோம்... ஓரங்கட்டப்பட்டுவிட்டதாக எப்படிச் சொல்ல முடியும்?”

“ ‘தமிழகத்தில் மத்திய அமைச்சர்களின் தொடர் ஆய்வு ஆரோக்கியமானதல்ல’ என்று உங்கள் கூட்டணியிலிருக்கும் அ.தி.மு.க-வினரே விமர்சிக்கிறார்களே?”

“தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, எல்லா மாநிலங்களுக்கும்தான் ஆய்வுக்குச் செல்கிறார்கள். மத்திய அமைச்சர்கள் தமிழகத்துக்கு வருவது நல்லதுதானே... அப்படி வரும்போது நம் குறைகளை அழகாக எடுத்துச் சொல்லலாமே... வந்தால், ‘ஏன் வந்தார்?’ என்று கேட்பதும், வராவிட்டால் ‘புறக்கணிக்கிறார்கள்’ என்று சொல்வதும் இங்கே வாடிக்கையாக இருக்கிறது. மக்கள் பா.ஜ.க-வை விரும்பத் தொடங்கி விட்டார்கள் என்பது திராவிட இயக்கங்களுக்கும், தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒருவித பீதியைத் தந்திருக்கிறது என்பதைத்தான் அவர்களின் செயல்பாடுகளிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.”