கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த 6-ம் தேதி பாஜக ஸ்தாபக தின நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், அக்கட்சியின் மாவட்ட பிரசார அணி தலைவர் ஜெயபிரகாஷ் பேசியபோது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும், கனிமொழி உள்ளிடோர் குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க பொருளாளர் கேட்சன், ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஆரல்வாய்மொழி போலீஸார் ஜெயபிரகாஷ் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். நேற்று முன் தினம் அதிகாலை இரணியல் பகுதியில் உள்ள ஜெயபிரகாஷ் வீட்டில் சென்று அவரை கைது செய்ய போலீஸார் முயன்றனர். அப்போது வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்த ஜெயபிரகாஷ், அங்கிருந்து பா.ஜ.க நிர்வாகிககளை போனில் அழைத்தார். இதையடுத்து பா.ஜ.க நிர்வாகிகள் ஜெயபிரகாசின் வீடுமுன் குவிந்தனர். இதையடுத்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி ஜெயபிரகாசை கைது செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கடந்த 6-ம் தேதி ஆரல்வாய்மொழி பகுதியில் நடந்த பா.ஜ.க ஸ்தாபன தினவிழா நிகழ்ச்சியில் ஜெயபிரகாஷ் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு சென்ற இரண்டு பேர் கல்வீசியதாகவும், பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து அந்த இடத்தில் சிறிதுநேரம் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. அதில் பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசிய இருவரும் தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்துக்கு பிறகு தொடர்ந்து பா.ஜ.க நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஜெயபிரகாஷ் ஆவேசமாக முதல்வர் உள்ளிட்டவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

அந்த நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியவர்கள் மீது ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தில் பா.ஜ.க-வினர் புகார் அளித்தனர். மேலும், இரண்டு பேர் மீது வழக்கு பதியவும் வைத்துள்ளனர். இதை அடுத்தே தி.மு.க தரப்பில் பா.ஜ.க-வினர் மீது புகார் அளித்துள்ளனர். ஜெயபிரகாஷ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பா.ஜ.க-வினர் ஆரல்வாய்மொழி காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக முதல்வர் குறித்து அவதூறு பேசியதாக பா.ஜ.க நிர்வாகியை கைது செய்த போலீஸார் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.