Published:Updated:

`திருக்குறள் முதல் தலையாட்டி பொம்மை வரை..!’ - தமிழ் மீது மோடிக்கு ஏன் இவ்வளவு பாசம்?

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மோடியைப் பற்றி குஜராத்தில் ஒன்று சொல்வார்கள். `தன்னுடைய தோல்வியை அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்ளாதவர்' என்று. அதேபோல், தமிழ்நாட்டில் அவர் தோற்றுப்போனதாகக் கருதவில்லை.

நா`என்னைவிட்டு விலகிச் செல்பவர்களுக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன். நான் தனியாகவே சாதிக்க முடியும் என அவர்கள் நம்புகிறார்கள்' என்பது சாணக்கியரின் வரிகள். இந்த வார்த்தைகளை பிரதமர் மோடி உறுதியாக நம்புகிறார்போலும். தமிழகத்தில் தொடர்ச்சியாகத் தோல்விகள் வந்தபோதும், `இங்கு காலூன்றியே தீர வேண்டும்' என்பதற்காக இந்த மண்ணின் பெருமைகளைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.

 தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை

தலையாட்டி பொம்மை!

``பொம்மைகளை உற்பத்தி செய்யும் மையமாக தஞ்சாவூர் திகழ்கிறது. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. பாரம்பர்ய பொம்மை வகைகளைப் போற்ற வேண்டும். விளையாட்டு பொம்மை என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும். பொம்மைகள் உருவாக்குவது, புதிய கல்வித் திட்டத்தில் ஒரு பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல், ராஜபாளையம், சிப்பிப்பாறை போன்ற இந்திய இன நாய்களை வீடுகளில் வளர்க்க வேண்டும்’’ - இது பிரதமரின் நேற்றைய `மன் கி பாத்’ உரை.

வணக்கம் மட்டுமே தெரியும்!

``இந்தியாவின் பெருமைகளில் ஒன்றான தமிழ் மொழி சம்ஸ்கிருதத்தைவிட மிகவும் தொன்மையானது என்பது சிலருக்கு மட்டும்தான் தெரியும். மிகவும் இனிமையான, அழகான தமிழ் மொழியில் என்னால் பேச முடியவில்லை என்று வருத்தப்படுகிறேன். வணக்கம் சொல்ல மட்டுமே எனக்குத் தெரியும்" - பிப்ரவரி 16, 2018 அன்று டெல்லி டால்கொட்டரா அரங்கில் மாணவர்களிடம் மோடி உதிர்த்த வார்த்தைகள் இவை.

காமராஜர்ஜி!

``எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை. இது போன்ற நல்ல ஆட்சியைத்தான் காமராஜர்ஜி விரும்பினார். தற்போது மக்களாட்சி நடந்துவருகிறது. மோடி ஒன்றும் செய்யவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். காமராஜர் கனவு கண்ட ஆட்சியை இந்தியாவில் நாங்கள் வழங்குவோம்" என 2019, பிப்ரவரி 10 அன்று திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, `வெள்ளத்தனைய மலர் நீட்டம்' என்ற குறளையும் மேற்கோள் காட்டிப் பேசினார். காமராஜரை மேற்கோள் காட்டியதில் உள்ளூர் காங்கிரஸாருக்கே பெரும் அதிர்ச்சி.

ராணுவ மருத்துவமனையில் மோடி
ராணுவ மருத்துவமனையில் மோடி

2019 சுதந்திர தினத்திலும், `நீரின்றி அமையாது உலகு' என்ற குறளை விளக்கினார். 2019, ஜூலை மாதம், லடாக்கில் வீரர்கள் முன் பேசியபோது, ` மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே ஏமம் படைக்கு' என்ற குறளைக் கூறி விளக்கினார் பிரதமர் மோடி.

தாளாற்றித் தந்த!

2019, அக்டோபர் 11-ம் தேதி சீன அதிபருடன் மாமல்லபுரத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் வேட்டி, சட்டை, மேல் துண்டு சகிதமாகக் காட்சியளித்தார். தொடர்ந்து, நவம்பர் 2, 2019 தாய்லாந்தில் மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட மோடி, `தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு, வேளாண்மை செய்தற் பொருட்டு' என்ற குறளை மேற்கோள் காட்டி விளக்கியபோது, அரங்கமே அதிர்ந்தது.

`தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைப் புகழ்ந்த பிரதமர் மோடி!’- மான்கி பாத் உரை ஹைலைட்ஸ்

`நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க-வுக்குத் தொடர்ச்சியாகத் தோல்விகள் வந்தபோதும், ஏன் தமிழ் மண்ணைப் பற்றித் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் மோடி?'

30 சதவிகித வாக்கு!

`` தமிழகத் தேர்தல்களில் தனக்குக் கிடைத்த தோல்வியை ஒப்புக்கொள்ள மோடி தயாராக இல்லை. 2014 தேர்தலில் பா.ஜ.க கூட்டணிக்குக் தமிழகத்தில் கிடைத்த 18.5 சதவிகித வாக்குகளும் தன்னுடைய தலைமைக்குக் கிடைத்ததாகத்தான் அவர் பார்க்கிறார். தி.மு.க., அ.தி.மு.க தலைமை இல்லாமல் அந்தத் தேர்தலை பா.ஜ.க சந்தித்தது. தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க ஆகிய கட்சிகள் பா.ஜ.க-வுடன் அணி சேர்ந்திருந்தன. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அணியில் கிடைத்த 30 சதவிகித வாக்குகளும் தன்னுடைய அரசுக்குக் கிடைத்த வாக்குகளாகத்தான் பார்க்கிறார்.

மோடி
மோடி

இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்தது தமிழ்நாட்டில்தான். `இதற்கு ஸ்டாலின்தான் காரணம். அதனால்தான், காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க தலைமை காங்கிரஸைக் கழற்றிவிட வேண்டும்' என நினைக்கிறார் மோடி. அவரின் ஒரே இலக்காக 2024 தேர்தல் இருக்கிறது. அதையொட்டியே தமிழ்நாட்டில் தன்னுடைய இமேஜை வளர்க்கக்கூடிய வேலைகளைச் செய்துவருகிறார்.

அதனால்தான், `காமராஜர் உயிரோடு இருந்திருந்தால், என்னைப் பாராட்டியிருப்பார்' என்றார். திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுவது என தமிழர்களின் இதயத்தில் இடம் கிடைக்க வேண்டும் என நினைக்கிறார். 2024 தேர்தலில் `மோடியே மீண்டும் வேண்டும்’ எனத் தமிழர்கள் சொல்ல வேண்டும் என நினைக்கிறார். அவருடைய முக்கிய திட்டமாகவும் இது இருக்கிறது" என்கிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.

தனி டீம்!

மோடியின் `தமிழ்நாடு ஆபரேஷன்' குறித்து விவரிக்கும் பா.ஜ.க நிர்வாகிகள் சிலர், `` மோடியைப் பற்றி குஜராத்தில் ஒன்று சொல்வார்கள். ` தன்னுடைய தோல்வியை அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்ளாதவர்' என்று. அதேபோல், தமிழ்நாட்டில் அவர் தோற்றுப்போனதாகக் கருதவில்லை. இஸ்ரோ தலைவர் பதவிக்குப் பல போட்டிகள் இருந்தும், சிவனுக்கு அந்தப் பதவியைக் கொடுத்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு உயர் பதவிகளைக் கொடுக்கிறார். தமிழிசைக்கு ஆளுநர் பதவி வந்து சேர்ந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 30 சதவிகித வாக்குகள் கிடைத்தன. இதோடு ஒரு நல்ல கூட்டணியை அமைத்தால் 2024-ல் சாதிக்க முடியும் என நம்புகிறார். அதனால்தான், சிப்பிப்பாறை நாய், தஞ்சை தலையாட்டி பொம்மை, திருக்குறள், காமராஜர் என இந்த மண்ணின் பெருமைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்" என்கின்றனர்.

`தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைப் புகழ்ந்த பிரதமர் மோடி!’- மான்கி பாத் உரை ஹைலைட்ஸ்

``தமிழ்நாட்டின் பெருமைகளை எடுத்துச் சொல்வதற்கு எனத் தனி டீம் வைத்திருக்கிறார் மோடி. அவர்கள் சொல்லும் மேற்கோள்களை நன்கு ஆய்வுசெய்துவிட்டே பேசுகிறார். குஜராத்தில் உள்துறைச் செயலராக இருந்த ஜெகதீச பாண்டியனுக்கு எதிராக உமா பாரதி போர்க்கொடி உயர்த்தினார். அவருக்குத் தலைமைச் செயலாளர் பதவியைக் கொடுத்தார் மோடி. இப்போது பிரிக்ஸ் வங்கியின் ஆசிய இன்வெஸ்ட்மென்ட் தலைவராக ஜெகதீச பாண்டியன் இருக்கிறார். இந்தப் பதவியை யஷ்வந்த் சின்ஹா கேட்டார். அவருக்குக் கொடுக்காமல் தென் தமிழகத்தைச் சேர்ந்த ஜெகதீச பாண்டியனுக்குக் கொடுத்ததும் இதன் நீட்சிதான்" என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.

`தாளாற்றித் தந்த பொருளெல்லாம்...!' - திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி

அ.தி.மு.க-வுக்கே பயம்!

`மோடியின் `தமிழ்ப் பாசம்' சரியானதுதானா?' காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணாவிடம் கேட்டோம். `` இந்தியாவிலேயே பா.ஜ.க-வை அதிகம் வெறுக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இங்கு அவர்களால் துளிர்விட முடியவில்லை. தாமரை மலர வாய்ப்பே இல்லை. முருகன் வந்த பிறகு அந்த வாய்ப்பும் போய்விட்டது. அடிக்கடி மோடி தமிழகத்தை மேற்கோள் காட்டக் காரணம், எதாவது ஒரு வகையில் காலூன்றத் திட்டமிடுவதுதான். ஆனால், தமிழக மக்கள் இந்த அளவுக்கு ஒரு தேசியக் கட்சியை வெறுத்ததில்லை. அ.தி.மு.க மீதுகூட மக்கள் இந்த அளவுக்கு வெறுப்பு காட்டவில்லை. `பா.ஜ.க-வோடு சேர்ந்தால் நாம் தோற்றுப்போவோம்’ என அ.தி.மு.க பயப்படுகிறது. அந்த அளவுக்குத்தான் பா.ஜ.க-வின் செல்வாக்கு தமிழ்நாட்டில் இருக்கிறது" என்றார் இயல்பாக.

மோடியின் அடுத்த மேற்கோளுக்காகக் காத்திருக்கிறார்கள் தமிழக பா.ஜ.க-வினர்.

அடுத்த கட்டுரைக்கு