Published:Updated:

புதுச்சேரி: தனியார் கைக்குச் செல்லும் மின்துறை..! - பாஜக கூட்டணி அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு

போராட்டத்தில் மின்துறை ஊழியர்கள்

புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் களமிறங்கியிருப்பதால் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசுக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

புதுச்சேரி: தனியார் கைக்குச் செல்லும் மின்துறை..! - பாஜக கூட்டணி அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு

புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் களமிறங்கியிருப்பதால் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசுக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

Published:Updated:
போராட்டத்தில் மின்துறை ஊழியர்கள்

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறைகளை தனியார்மயமாக்குவதற்கு முடிவெடுத்திருக்கும் மத்திய அரசு, அதற்கான பணிகளை துரிதப்படுத்திவருகிறது. புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து புதுச்சேரி மின்துறையில் பணியாற்றும் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்து மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவை ஏற்படுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

ஆனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. அது தொடர்பாக சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, ஊழியர்களின் கருத்துகளையும் கேட்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் போராட்டக்குழுவினர் அந்தக் கருத்துக்கேட்பு கூட்டத்தைப் புறக்கணித்தனர். இதனிடையே தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.

ஆளுநர் தமிழிசையை சந்தித்த எதிர்க்கட்சியினர்
ஆளுநர் தமிழிசையை சந்தித்த எதிர்க்கட்சியினர்

அதையடுத்து போராட்டக்குழுவினர் இன்று முதல் பணிகளைப் புறக்கணித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதேசமயம் போராட்டத்தைத் தடுப்பதற்காக மின்துறையை தொழிலாளர் தாவா சட்டத்தின் கீழ் அத்தியாவசிய பணிகள் துறையாக அரசு அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மின்துறை தலைவர் சண்முகம் ஊழியர்களுக்கு வெளியிட்ட எச்சரிக்கை செய்திக்குறிப்பில், ``அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் உள்ள மின்துறைகளின் செயல்திறன் மற்றும் நுகர்வோர் சேவையை மேம்படுத்த, மத்திய அரசு மின்துறைகளை தனியார்மயமாக்கும் கொள்கை முடிவை எடுத்துள்ளது.

இது தொடர்பாக தயாரிக்கப்பட்ட வரைவு பரிமாற்றத் திட்டத்தின்படி தற்போது புதுவை அரசு மின்துறை ஊழியர்களால் பெறப்படுகின்ற சம்பளம், ஓய்வூதியம், வருடாந்தர சம்பள உயர்வு, பதவி உயர்வு மற்றும் இதர அனைத்தும் ஓய்வுக்கால பலன்கள் பாதுகாக்கப்படுகின்றன. இதேபோல், மின் கட்டண நிர்ணய செயல்முறை தற்போது உள்ளதுபோல் கூட்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் தொடரும். புதிதாக வரக்கூடிய தனியார் நிறுவனமும்கூட தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளுடன் வருடாந்தர மின் கட்டண நிர்ணய விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எனவே, நுகர்வோருக்கான மின் கட்டணத்தை தனியார் நிறுவனத்தால் தன்னிச்சையாக அதிகரித்துக்கொள்ள முடியாது. தனியார்மயமாக்கலால் விநியோகச் செயல்பாட்டுத்திறன் அதிகரிக்கும். அதன் பலனாக பொதுமக்களுக்கு மின் கட்டண உயர்வு விகிதம் குறைவதற்கு ஏதுவாகும். மேலும், தனியார்மயமாக்கப்படும் பட்சத்தில் அனைத்து பொதுமக்களுக்கும் உடனடி சேவையும், சிறந்த பராமரிப்பும் உறுதி செய்யப்படும். எனவே, புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்குவதற்கு எதிராக பொதுமக்கள் யாரும் அச்சம்கொள்ளத் தேவையில்லை. புதுச்சேரி மின்துறை, ஒரு பொது பயன்பாட்டு சேவைத்துறை. மின்துறை ஊழியர்கள் அத்தியாவசியமான மின் விநியோக பணியைச் செய்கிறார்கள்.

எனவே, இவர்கள் எந்தவித வேலை நிறுத்தத்திலும் ஈடுபடக் கூடாது. மின்துறை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை எதிர்கொள்ள மின்துறை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. மேலும் மின்வாரிய முதன்மை அலுவலகம், அனைத்து துணைமின் நிலையங்கள் மற்றும் மின்துறையின் பல்வேறு அலுவலகங்களில் CRPC பிரிவு 144-ன் கீழ் தடைவிதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த இடங்களில் போராட்டங்கள் மற்றும் கூட்டங்களை நடத்துவது சட்ட விரோதம்.

தமிழிசை - ரங்கசாமி
தமிழிசை - ரங்கசாமி

மின்துறை ஊழியர்கள் அறிவித்துள்ள போராட்டம், பணி விதிகளுக்கு எதிரானது. எனவே, மின் ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பணி நடத்தை விதிகளின்படி, போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். வேலை நிறுத்த காலம், பணி இடைமுறிவாக கருதப்படும். மேலும், வேலை நிறுத்த காலத்துக்குச் சம்பளம் வழங்கப்பட மாட்டாது. எனவே, அனைத்து ஊழியர்களும், தங்களது வேலை நிறுத்த அறிவிப்பைக் கைவிட்டு, வழக்கம்போல தங்கள் பணிகளைச் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். அதையடுத்து ஊழியர்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்தும்விதமாக மின்துறை அலுவலக வளாகத்தில் 144 தடையுத்தரவைப் பிறப்பித்தார் மாவட்ட ஆட்சியர் வல்லவன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த போராட்டக்குழுத் தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் வேல்முருகன் ஆகியோர், ``மின்துறை ஊழியர்களின் போராட்டம் தனிப்பட்ட போராட்டம் அல்ல. புதுவை மக்களின் போராட்டம். எங்கள் போராட்டத்துக்கு ஆளுங்கட்சியைத் தவிர்த்து அனைத்து அரசியல் கட்சியினரும், அமைப்புகளும், இயக்கங்களும் முழு ஆதரவு அளித்துள்ளன. முதலமைச்சரும், அமைச்சர்களும், ஆளுங்கட்சியினரும் மட்டும்தான் மௌனம் சாதித்துவருகின்றனர். மின்துறை தலைவர் தனியார்மயமாக்கும் பணியை வேகப்படுத்தியுள்ளார்.

தனியார்மயமானால் துரித சேவை கிடைக்கும் என்கிறார். இதுவரை துரித சேவை கிடைக்கவில்லையா? எங்களை போராட்டத்துக்கு அரசுதான் தள்ளியுள்ளது. வேலை நிறுத்த போராட்டத்தின்போது ஒட்டுமொத்த ஊழியர்களும் மின்துறை தலைமை அலுவலகம் முன்பு ஒன்று கூடுவோம். ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம். இதனால் ஏற்படும் மின் இடர் பிரச்னைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. அரசும், மின்துறை நிர்வாகமும்தான் பொறுப்பு. திட்டமிட்டபடி எங்கள் போராட்டம் இதற்குத் தீர்வு காணும்வரை நீடிக்கும்” என்று அறிவித்திருந்தனர்.

போராட்டத்தில் மின் துறை ஊழியர்கள்
போராட்டத்தில் மின் துறை ஊழியர்கள்

அதேபோல, ”இன்றைய தேதியில் 800 கோடி ரூபாய் State Bank Account-ல் மின் நுகர்வோர்களின் பணம் Deposit செய்யப்பட்டுள்ளது. ரூ.1,200 கோடி அளவுக்கு மின் உபகரணங்களின் மதிப்பு உள்ளதாகத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் கொடுத்துள்ளனர். ஆனால் உண்மை அதுவல்ல. சரியான கணக்குகள் மறைக்கப்பட்டுள்ளன. 285 ஏக்கர் நிலம் மின்துறையில் உள்ளது. அதன் மதிப்பு இன்றைய தேதியில் மார்க்கெட் மதிப்பு எவ்வளவு என்று நீங்களே தீர்மானியுங்கள். அவ்வளவு சொத்தும் தனியார் வசமிருந்து, அரசாங்கத்தின் பயன்பாட்டுக்கு சிலர் இலவசமாகவும் அளித்தனர். மேலே உள்ள இவை அனைத்தையும் 25 ஆண்டுகளுக்கு தனியாரிடம் Lease-க்கு விட உள்ளனர். மேலும் சுமார் 350 கோடி அளவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரப் பகுதி முழுவதும் மின் மாற்றிகள், solar plant, உயர் மின்னழுத்த மின்புதைவடங்கள் போட டெண்டர் கோரப்படவுள்ளது.

Lawspet பகுதியில் ECR சாலையில் 25 கோடி செலவில் ஒரு துணை மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது. 262 கோடி ரூபாய் செலவில் தற்போதுள்ள ஐந்து லட்சம் மின் மீட்டர்களை ப்ரீபெய்டு மீட்டர்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த மின்துறை சார்ந்த அனைத்து மின் உபகரணங்கள் அசையா சொத்துகள் அனைத்தையும் தனியாருக்குத் தாரைவார்க்க முனைப்பு காட்டுகிறது மத்திய அரசு” என்று தெரிவித்திருக்கிறார் அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் மற்றும் மின்துறை தனியார்மய எதிர்ப்பு கூட்டு நடவடிக்கைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் C.H. பலமோகனன்.

இந்த நிலையில் இன்று காலை மின்துறை ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்து வம்பாகீரப்பாளையத்தில் உள்ள தலைமை அலுவலகம் அருகே திரண்டனர். மின்துறை தலைமை அலுவலகத்தின் இருபுறமும் பேரிகார்டு அமைத்து போலீஸார் தடுத்தனர். தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சக ஊழியர்கள், அவுட்சோர்ஸிங் ஊழியர்களை மட்டும் பணிக்குச் செல்ல அனுமதித்தனர். இதனால் போலீஸாருடன் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேரம் செல்லச் செல்ல மின் விநியோக அலுவலகம், துணை மின் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மின்துறை தலைமை அலுவலகம் அருகே கூடினர். அவர்களுக்கு ஆதரவாக அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்கத்தினரும் திரண்டனர்.

இதனால் அங்கு பதற்றம், பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மின்துறை ஊழியர்கள் தனியார்மயத்தைக் கண்டித்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். `தனியார்மய கொள்கையைத் திரும்பப் பெறு, திரும்பப் பெறு, கார்ப்பரேட்களுக்கு ஆதரவாகச் செயல்படாதே, பொதுத்துறை நிறுவனத்தை தனியார் மயமாக்காதே’ என்றும், ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் தமிழகம், கேரளாவில் உள்ள மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகிகளும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். மின்துறை ஊழியர்களுக்கு ஆதரவாக அனைத்து எதிர்க்கட்சிகளும் களமிறங்கியிருப்பதால் கலக்கத்தில் இருக்கிறது என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism