கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் மே மாதம் நடைபெறவிருக்கிறது. தற்போது, அங்கு தேர்தல் களம் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்திருக்கிறது. ஆளும் பா.ஜ.க-வும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் உற்சாகமாகக் களத்தில் இறங்கியிருக்கின்றன. ஆட்சியை எப்படியாவது தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க முனைப்புக் காட்டிவருகிறது.

கடந்த இரண்டு மாதங்களில் ஏழு முறை கர்நாடகாவுக்கு வந்துசென்றிருக்கும் பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காக விரைவில் மீண்டும் கர்நாடகாவுக்கு வரவிருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களும் கர்நாடகாவுக்கு அடிக்கடி வந்துசெல்கிறார்கள்.
மொத்தம் 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா சட்டமன்றத்துக்கு 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 104 இடங்களை பா.ஜ.க-வும், 78 இடங்களை காங்கிரஸும், 38 இடங்களை மதச்சார்பற்ற ஜனதா தளமும் கைப்பற்றின. காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஹெச்.டி.குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைத்தது.
ஓராண்டு முடிந்த நிலையில், காங்கிரஸ் கட்சியினரின் அழுத்தம் தாங்க முடியாமல் முதல்வர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். அதன் பிறகு, பி.எஸ்.எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க ஆட்சியமைத்தது. அவர், இரண்டு ஆண்டுகள் முதல்வராக இருந்தார். அதன் பிறகு, 2021-ம் ஆண்டு ஜூலை மாதம், பசவராஜ் பொம்மையை பா.ஜ.க முதல்வராக்கியது. இப்போதுவரை அவர் தான் முதல்வராக இருந்துவருகிறார்.

பசவராஜ் பொம்மை அரசு ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட பல சவால்களை எதிர்கொண்டுவருகிறது. ‘கமிஷன் அரசு’ என்ற அவப்பெயரைப் பெற்றிருக்கும் பொம்மை அரசுக்கு எதிராக பிரதமர் மோடிக்கு புகார்கள் பறக்கின்றன. “40 சதவிகிதம் கமிஷன் கேட்கிறார்கள். இப்படியிருந்தால், எப்படி எங்களால் பணி செய்ய முடியும்” என்று ஒப்பந்ததாரர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
“கல்வித்துறையில் லஞ்சம் கேட்கிறார்கள்” என்று கர்நாடகாவில் இருக்கும் 10,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கான சங்கம் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறது. இப்படியாக, “தயவுசெய்து தலையிடுங்கள்” என்று பிரதமருக்குப் பல புகார் கடிதங்கள் போயிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான உணர்வு இருப்பதை உணர்ந்து, சில உத்திகளை பா.ஜ.க வகுத்திருக்கிறது. அதன்படி, தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் பலருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்குவதில்லை என்கிற முடிவை பா.ஜ.க எடுத்திருக்கிறது. மாநிலம் முழுவதும் பல சர்வேக்களை பா.ஜ.க எடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில், எந்தெந்தத் தொகுதிகளில் பா.ஜ.க-வுக்கு எதிரான உணர்வு இருக்கிறதோ, அங்கெல்லாம் வேட்பாளர்களை மாற்றுவது என்று முடிவுசெய்திருக்கிறார்கள். அந்த வகையில், பல சீனியர் தலைவர்களுக்கே தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காது என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
சட்டமன்றத் தேர்தலையொட்டி அடிக்கடி கர்நாடகாவுக்குச் சென்றுவரும் அமித் ஷா, மாநில பா.ஜ.க-வினருக்குப் பல ஆலோசனைகளைச் சொல்லிவருகிறார். பழைய மைசூரு பிராந்தியத்தில் பா.ஜ.க-வுக்குப் பெரிய செல்வாக்கு கிடையாது. மொத்தம் 61 தொகுதிகள் இருக்கும் இந்தப் பிராந்தியத்தில் 12-13 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க-வுக்குக் கிடைத்ததே இல்லை. இந்த முறை, அங்கு 35 தொகுதிகளைப் பிடிக்க வேண்டும் என்று அமித் ஷா கட்டளையிட்டிருக்கிறாராம்.

கர்நாடகா அரசியலில் லிங்காயத் சமூகத்துக்குப் பெரிய செல்வாக்கு உண்டு. அதற்கு, லிங்காயத் சமூக வாக்குகள் 17-19 சதவிகிதம் இருப்பது முக்கியக் காரணம். லிங்காயத் சமூக வாக்குகளில் அதிகளவில் பெற வேண்டும் என்பதற்காக, செல்வாக்கு மிகுந்த லிங்காயத் மடங்களின் தலைவர்களுடன் ஜே.பி.நட்டா கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து சந்திப்புகளை நடத்திவருகிறார்.
இவை எல்லாவற்றையும் மீறி உட்கட்சிப் பூசல் பா.ஜ.க-வுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. கர்நாடகாவில் பா.ஜ.க-வின் முக்கிய முகங்களில் ஒன்றாக இருக்கும் முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு கட்சித் தலைமைமீது பல வருத்தங்கள் இருக்கின்றன. மேலும், கட்சிக்குள் எடியூரப்பாவுக்கு நிறைய எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள். எடியூரப்பா தன்னுடைய மகனுக்கு முக்கியப் பதவியைப் பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். இவரைச் சமாளிப்பதற்காக வேலைகளையும் பா.ஜ.க நிர்வாகிகள் செய்ய வேண்டியிருக்கிறது.
இந்த முறை, ஆட்சியைக் கைப்பற்றியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு காங்கிரஸார் வேலை செய்கிறார்கள். குஜராத், இமாச்சலப் பிரதேசம் உட்பட சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்துக்குச் செல்லவில்லை. காரணம், அந்த நேரத்தில் அவர் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் ஈடுபட்டிருந்தார்.
கர்நாடகா தேர்தல் பிரசாரத்துக்கு ராகுல் காந்தி வருகிறார் என்பதால், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த மாநிலம் கர்நாடகா. எனவே, கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் அவர் தனிக் கவனம் செலுத்திவருகிறார்.

பெண்களுக்கு மாதம் ரூ.2,000 உரிமைத்தொகை, பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரணம், இலவச மின்சாரம் என ஏராளமான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வாரி வழங்கியிருக்கிறது. அது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.
கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் டி.கே.சிவக்குமார், ஹெச்.டி.குமாரசாமி அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர். காங்கிரஸ் வெற்றிபெற்றால், சிவக்குமார் முதல்வராகலாம் என்று காங்கிரஸில் ஒரு தரப்பினர் கூறிவருகிறார்கள். இவர், ஒக்காலிகர் சமூகத்தைச் சேர்ந்தவர். காங்கிரஸ் வெற்றிபெற்றால் ‘நம்முடைய சமூகத்திலிருந்து ஒருவர் முதல்வராகும் வாய்ப்பு கிடைக்கும்’ என்று சொல்லிவருகிறார். தற்போது காங்கிரஸுக்கு ஆதரவான சூழல் நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க சூழல் மாறலாம்.!