Published:Updated:

`நாட்டின் பன்முகத் தன்மையை பா.ஜ.க சீர்குலைக்கிறது!' - சீதாராம் யெச்சூரி

சீதாராம் யெச்சூரி
சீதாராம் யெச்சூரி

ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பதை வலியுறுத்துவதன் மூலம் நாட்டின் பன்முகத் தன்மையை சீர்குலைக்க பா.ஜ.க முயற்சி செய்வதாக நெல்லையில் மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு.

நெல்லை புறநகர் பகுதியில் உள்ள கரையிருப்பு கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பொருளாளரான அசோக் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார். சாதிய வன்மத்தின் காரணமாக நடைபெற்ற இந்தப் படுகொலையைக் கண்டித்தும் அவரது குடும்பத்துக்கு நிதி உதவி அளிப்பதற்காகவும் பாளையங்கோட்டையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரி தலைமை வகித்தார்.

அசோக் குடும்பத்துக்கு உதவி
அசோக் குடும்பத்துக்கு உதவி

விழாவில், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அகில இந்திய தலைவர் முகமது ரியாஸ், மாநிலத் தலைவர் அஜீஸ் குமார், மார்க்சிஸ்ட் நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். படுகொலை செய்யப்பட்ட அசோக்கின் தந்தை முருகன், தாய் ஆவுடையம்மாள் மற்றும் அவரது இரு சகோதர்களும் கலந்துகொண்டனர். இந்த விழாவில், அசோக் குறித்த பாடல் அடங்கிய குறுந்தகடு, ஆவணப்படம் ஆகியவை வெளியிடப்பட்டன.

படுகொலையான அசோக் குடும்பத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவியை வழங்கிப் பேசிய சீதாராம் யெச்சூரி, ``சுதந்தரப் போராட்டத்தில் நெல்லை மண்ணுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த மண்ணில் இருந்துதான் பாரதியார், வ.உ.சிதம்பரனார் போன்றோர் ஆங்கிலேய அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார்கள்.

நாட்டில் எதிர்க்கட்சிகளே இருக்கக்கூடாது என்கிற நிலையை உருவாக்க பா.ஜ.க முயற்சிக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குதிரைபேரம் மூலமாக ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகள் நடக்கின்றன.
சீதாராம் யெச்சூரி

அப்படிப்பட்ட இந்த மண்ணில் சாதியப் படுகொலைகள் நடப்பது என்பது வரலாற்றைப் பின்னுக்குக் கொண்டு செல்வதாக அமைந்துள்ளது. சாதி ஆதிக்கத்தையும் அத்தகைய சக்திகளையும் எதிர்க்கும் போராட்டத்தின் ஒருபகுதியாகவே அசோக்கை நாம் இழந்துள்ளோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரே தேசம், ஒரே கலாசாரம், ஒரே மொழி என்பதை வலியுறுத்தும் பாரதிய ஜனதா, நமது தேசத்தின் பன்முகத்தன்மையைச் சீர்குலைக்க முயற்சிக்கிறது. அதைத் தடுக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம். நாட்டில் எதிர்க்கட்சிகளே இருக்கக்கூடாது என்கிற நிலையை உருவாக்க பா.ஜ.க முயற்சிக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குதிரைபேரம் மூலமாக ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகள் நடக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாரிடம் வழங்கவும் பா.ஜ.க முயற்சிக்கிறது. விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கி பெருமுதலாளிகளிடம் கொடுத்து அவர்கள் லாபம் அடைய உதவிகள் செய்யப்படுகின்றன.

விழாவில் பங்கேற்ற கூட்டத்தின் ஒரு பகுதி
விழாவில் பங்கேற்ற கூட்டத்தின் ஒரு பகுதி

நீதித்துறை, ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் என அனைத்தையும் சீர்குலைக்கும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் நமக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கின்றன. தேர்தலில் ஏற்பட்ட தவறுகளைச் சரி செய்வோம். மக்களிடம் சென்று பேசி பா.ஜ.க-வை எதிர்ப்போம். இந்தியாவைப் பாதுகாத்து சரியான வழிக்கு மாற்றுவோம் என்கிற கொள்கையுடன் முன்னோக்கிப் பயணிப்போம்’’ எனப் பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு