அலசல்
அரசியல்
Published:Updated:

கமலாலயமா... அதானியாலயமா? - சர்ச்சை கிளப்பும் காங்கிரஸ்!

மாவட்ட பா.ஜ.க அலுவலகங்கள் திறப்பு விழா
பிரீமியம் ஸ்டோரி
News
மாவட்ட பா.ஜ.க அலுவலகங்கள் திறப்பு விழா

காங்கிரஸின் சத்தியமூர்த்தி பவன் தொடங்கி தி.மு.க-வின் அறிவாலயம் வரை எல்லா கட்சி அலுவலகங்களுமே தொண்டர்கள், பொதுமக்களிடம் நிதி திரட்டி கட்டப்பட்டவைதான்

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 10 மாவட்ட பா.ஜ.க அலுவலகங்களைத் திறந்துவைத்த கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, “விரைவில் தமிழ்நாட்டில் 39 அலுவலகங்களும், நாடு முழுவதும் 887 அலுவலகங்களும் திறக்கப்படும்” என்று அறிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, ‘ஒரே நாளில் பத்து அலுவலகங்களைத் திறக்கும் அளவுக்குத் தமிழகத்தில் பா.ஜ.க வேரூன்றியிருக்கிறது’ என்று பெருமை பேசிக்கொண்டிருக்கின்றனர் பா.ஜ.க-வினர்.

மாவட்ட பா.ஜ.க அலுவலகங்கள் திறப்பு விழா
மாவட்ட பா.ஜ.க அலுவலகங்கள் திறப்பு விழா

இதற்கிடையே விருதுநகர் பா.ஜ.க அலுவலகக் கட்டடத்தின் படத்தைப் பகிர்ந்து, ‘தம்பி அண்ணாமலை, கட்சித் தொண்டர்களிடமிருந்து ஒரு பைசாகூட வசூலிக்காமல், 10 அலுவலகங்களைக் கட்ட உதவிய அதானிக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்’ என்று ட்வீட் செய்திருக்கிறார் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “காங்கிரஸின் சத்தியமூர்த்தி பவன் தொடங்கி தி.மு.க-வின் அறிவாலயம் வரை எல்லா கட்சி அலுவலகங்களுமே தொண்டர்கள், பொதுமக்களிடம் நிதி திரட்டி கட்டப்பட்டவைதான். ஆனால், பா.ஜ.க-வினரோ பொதுமக்கள், தொண்டர்கள் பங்களிப்பு ஏதுமில்லாமல், டெல்லியிலிருந்து ‘லம்ப்’பாக தூக்கிக் கொடுத்த பணத்தைவைத்து அலுவலகம் கட்டுகிறார்கள். ஒவ்வொரு கட்டடமும் சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்புடையது என்கிறார்கள். அப்படியானால் இதற்கெல்லாம் பணம் கொடுத்தது யார்... பா.ஜ.க-வுக்கு உண்மையிலேயே நன்றி விசுவாசம் இருந்தால், ‘பா.ஜ.க விருதுநகர் கமலாலயம்’ என்று பெயர் வைப்பதற்கு பதிலாக ‘அதானியாலயம்’ அல்லது ‘அதானி பவன்’ என்று பெயர் சூட்ட வேண்டும்” என்றார் காட்டமாக.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

இது குறித்து பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவரும், கட்சியின் கட்டடங்கள் குழு தலைவருமான சக்கரவர்த்தியிடம் விளக்கம் கேட்டோம். “நிலம் வாங்குவதற்கு மட்டும்தான் தேசியத் தலைமையிலிருந்து நிதி கொடுக்கிறார்கள். மற்றபடி மாநில பா.ஜ.க-வினர்தான் நிதியாகவும் பொருளாகவும் நன்கொடை வசூலித்து, கட்டட வேலைகள் செய்கிறோம். அதற்குண்டான எல்லா கணக்கு வழக்கு களும் எங்களிடம் இருக்கின்றன. அதானியிடமிருந்து பணம் வாங்கித்தான் கட்டடம் கட்டினோம் என்று குற்றம்சாட்டும் மாணிக்கம் தாகூர், உண்மையென்றால் அதை நிரூபிக்கட்டும் பார்க்கலாம்” என்றார்.

‘வாட்ச் பில்லே இன்னும் தரலை... கட்டட ரசீது கேட்க வந்துட்டாங்க...’ என்று அண்ணாமலை சொல்லாமல் இருந்தால் சரிதான்!