Published:Updated:

“முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காபி சாப்பிட ஆசை...”

டாக்டர் சரவணன்
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் சரவணன்

டாக்டர் சரவணனின் அடுத்த பிளான்

“முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காபி சாப்பிட ஆசை...”

டாக்டர் சரவணனின் அடுத்த பிளான்

Published:Updated:
டாக்டர் சரவணன்
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் சரவணன்

தேர்தல் அரசியலில் கட்சி மாறுவது ஒன்றும் பெரிய விஷயமில்லைதான். ஆனால், டாக்டர் சரவணன் கட்சி மாறியதை, ‘இருக்கிற மேடையிலேயே இங்கிருந்து இன்னொரு கட்சிக்குத் தாவுகிற வக்கீல் வண்டு முருகன்’ என்று மீம்ஸாகப் போட்டுக் கலாய்த்துக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். காரணம், கடந்த 13-ம் தேதி மாலை வரையில் தி.மு.க அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனைக் கடுமையாக விமர்சித்துவிட்டு, இரவோடு இரவாக அவரை வீடு தேடிப்போய் மன்னிப்புக் கேட்டதுடன், ‘பா.ஜ.க-விலிருந்தே விலகுவதாக’ச் சொன்னதுதான். `இடையில் அப்படி என்னதான் நடந்தது?’ என்ற கேள்வியுடன் அவரைச் சந்தித்தேன்.

“அமைச்சர்மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தில் உண்மையில் நடந்தது என்ன... யார் காரணம்?”

“ `அஞ்சலி செலுத்த அண்ணாமலை விமான நிலையம் வருகிறார்... ஆட்களை அழைத்து வாருங்கள்’ என்று எனக்குத் தலைமையிலிருந்து உத்தரவு வந்தது. நான் தொண்டர்களை ‘அழைத்துச்’ சென்றேன். அரசுப் பொறுப்பில் இல்லாத நானும், கட்சி நிர்வாகிகளும் விமான நிலையத்துக்குள் நின்றது தேவையில்லாததுதான். இருந்தாலும், நாங்கள் கட்சிக்கொடி போன்ற அடையாளங்களுடன் அங்கு நிற்கவில்லை. எங்களைப் பார்த்து, ‘என்ன தகுதியில் இங்கே வந்தீங்க?’ என்று கேட்டார் அமைச்சர். அது பிரச்னையானது. அதன் பிறகு அண்ணாமலையும், கட்சியினரும் அஞ்சலி செலுத்த அனுமதித்தார்கள். ஆனால், எனக்குத் தெரியாமல் யாருடைய தூண்டுதலிலோ ஒரு கும்பல் வெளியே சென்று அமைச்சர் காரை முற்றுகையிட்டு செருப்பு வீசியிருக்கிறது. அங்கு நடந்தது லேட்டாகத்தான் எனக்குத் தெரியும். கட்சியிலிருந்து அதை நியாயப்படுத்தி பேசச் சொன்னதால் மீடியாக்களில் முதலில் அப்படிப் பேசினேன். அதன் பிறகு மாவட்டத் தலைவர் என்ற முறையில் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று, கட்சியினருடன் போலீஸில் சரணடையலாம் என்று நினைத்தேன். அதற்கு யாரும் முன்வரவில்லை. ராணுவ வீரரின் ஊருக்குப் போய் அஞ்சலி செலுத்தாமல், அரசு நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்த அண்ணாமலை வந்ததுதான் தேவையில்லாத பிரச்னைக்குக் காரணம்.”

“மாலை வரை அமைச்சரைக் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்த நீங்கள், நள்ளிரவில் அவரைச் சந்தித்து வருத்தம் தெரிவித்தது ஏன்... தி.மு.க சைடிலிருந்து மிரட்டல் வந்ததா?”

“அதுதான் சொன்னேனே... தலைமை சொன்ன தால்தான் மாலைவரை அமைச்சரை விமர்சித்துப் பேசினேன். ஆனால், கட்சியைத் தாண்டி தனிப்பட்ட மனிதனாக யோசித்தபோது என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. தூக்கமும் வரவில்லை. விமான நிலையத்தில் புரோட்டோகால் அடிப்படையில்தான், ‘என்ன தகுதியில் வந்தீங்க?’ என்று அமைச்சர் கேட்டிருக்கிறார். அதைத் தப்பாக புரிந்துகொண்டு, அவருடன் வாதம் செய்தது தேவையில்லாதது என்பதைப் புரிந்து கொண்டேன். யாரும் என்னை மிரட்டவில்லை. மனசாட்சி உறுத்தியதால்தான், இரவோடு இரவாக அமைச்சரைச் சந்தித்து வருத்தம் தெரிவித்தேன். அமைச்சரும், ‘அந்த வார்த்தையை அங்கு சொல்லி யிருக்கக் கூடாது’ என்று என்னிடம் சொன்னார்.”

“அப்படியென்றால் பா.ஜ.க-விலிருந்து உடனே விலகியது ஏன்?

“உண்மையைச் சொல்லணும்னா நெருடலோடு தான் பா.ஜ.க-வில் பயணித்தேன். அந்தக் கட்சியில் சேர்ந்தது முதல் தாமரை இலை தண்ணீரைப்போலத் தான் இருந்தேன். திராவிட சிந்தனையுள்ள என்னால் அந்தக் கட்சிக் கொள்கையுடன் ஒட்ட முடியவில்லை. நான்கைந்து மாதங்களாக, ‘இந்தக் கட்சியில் தொடரலாமா... வேண்டாமா...?’ என்ற குழப்பத்தில் இருந்தேன். அமைச்சர்மீது செருப்பு வீசப்பட்ட இந்த மோசமான சம்பவம் என்னை உடனடியாக இந்த முடிவை எடுக்கவைத்துவிட்டது.”

 “முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காபி சாப்பிட ஆசை...”

“பா.ஜ.க மதவாதம், பிரிவினைவாதம் பேசுகிறது என்று விலகிய பிறகு சொல்கிறீர்களே... இது உங்களுக்கு முன்பே தெரியாதா?”

“தேர்தல் நேர வருத்தத்தில் தி.மு.க-விலிருந்து பா.ஜ.க-வில் சேர்ந்தேன். ஆனால், மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காகப் போராடச் சொல்லாமல், எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிராகவே போராட்டம் அறிவிப்பார்கள். இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு இருந்தேன். ஆரம்பத்தில் பா.ஜ.க கொடியைக் கையில் தொடும் போது மனசு பதறும். அந்த மேடையில் இருக்கும் போது சங்கடமாக இருக்கும். `நாலு பேரு திட்டுற கட்சியில இருக்கோமே’ என்ற வருத்தமும் இருக்கும். பா.ஜ.க-வில் இரண்டு வகையான நிர்வாகிகள் இருக்கிறார்கள். ஒன்று, பல்வேறு கட்சிகளிலிருந்து அதிருப்தியில் வந்து சேர்ந்தவர்கள். இன்னொரு பிரிவினர் தீவிர கொள்கையுடன் இருப்பவர்கள். இவர்களால்தான் பிரச்னை. இவர்களின் கருவியாக நம்மைப் பயன் படுத்திக்கொள்கிறார்கள். கே.பி.ராமலிங்கத்தை கோயில் பூட்டை உடைக்கச் சொல்லி சிக்கலில் மாட்டிவிட்டார்களே, அது ஓர் உதாரணம்.”

“அண்ணாமலை உங்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறாரே?”

“நல்ல மனிதர் அவர். அவரும் சித்தாந்தரீதியாக பா.ஜ.க-வுக்கு வந்தவரல்ல. அவரையும் சீக்கிரம் கட்சியிலிருந்து அனுப்பிவிடுவார்கள். மாநிலத் தலைமையில் கேசவ விநாயகம் என்று ஒரு ஆர்.எஸ்.எஸ்-காரர் மறைமுகத் தலைவராக இருக்கிறார். அவர் சொல்படிதான் எல்லாம் நடக்கும்.”

“அடுத்து தி.மு.க-வுக்குப் போகப்போகிறீர்களா?”

“என் தாய் வீடுதானே அது. திரும்பப் போக எனக்கென்ன தயக்கம்... அப்படிப் போனாலும் என்ன தவறு... ஆனால், ‘தி.மு.க-வுக்குப் போறீங் களா... போறீங்களா?’ என்று எல்லோரும் கேட்கும் போது, உடனே சென்னைக்குப் போய், முதல்வர் ஸ்டாலினைப் பார்த்து அவருடன் ஒரு காபி சாப்பிட ஆசையாக இருக்கிறது. கட்சியில் சேர்த்துக்கொண்டாலும், சேர்க்கவில்லை யென்றாலும் தி.மு.க ஆதரவாளராகத் தொடர் வேன். என் உடம்பில் திராவிட ரத்தம் ஓடுகிறது.”

“ஆரம்பத்தில் தி.மு.க., அடுத்து ம.தி.மு.க., பா.ஜ.க., மீண்டும் தி.மு.க., பிறகு பா.ஜ.க., அடுத்து தி.மு.க ஆதரவு என்று வருடத்துக்கு ஒரு கட்சி மாறுவதாக உங்களை விமர்சித்து நிறைய மீம்ஸ் வருகின்றனவே... கவனித்தீர்களா?

“நான் கட்சி மாறுவதால் யாருக்காவது பிரச்னை ஏற்பட்டிருக்கிறதா... அது நான் எடுக்கிற முடிவு. நான் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை. நல்லது செய்ய வேண்டும் என்று வந்தேன். எந்தக் கட்சியில் இருந்தாலும் நான் சம்பாதித்த பணத்தைத்தான் செலவுசெய்கிறேன். மீம்ஸ் நன்றாக இருக்கிறது, நன்றாக கிரியேட் பண்ணுகிறார்கள். நானும் அதைப் பார்த்து ரசிக்கிறேன்.”