Published:Updated:

`சத்ரபதி சிவாஜிக்கு எதிராகப் பேசிய ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்'- பாஜக உள்ளிட்ட கட்சிகள் போர்க்கொடி

ஆளுநருக்கு எதிராக புனேயில் போராட்டம் ( ட்விட்டர் )

சத்ரபதி சிவாஜிக்கு எதிராகப் பேசிய மகாராஷ்டிரா ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

`சத்ரபதி சிவாஜிக்கு எதிராகப் பேசிய ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்'- பாஜக உள்ளிட்ட கட்சிகள் போர்க்கொடி

சத்ரபதி சிவாஜிக்கு எதிராகப் பேசிய மகாராஷ்டிரா ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

Published:Updated:
ஆளுநருக்கு எதிராக புனேயில் போராட்டம் ( ட்விட்டர் )

மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில் சமீபத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷாரியா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், சத்ரபதி சிவாஜி மகாராஜாவை பழைய சகாப்தம், பாபா சாஹேப் அம்பேத்கர், நிதின் கட்கரி ஆகியோரை புதிய சகாப்தம் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு மகாராஷ்டிராவில் அனைத்துக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. வழக்கமாக ஆளுநருக்கு எதிராக பா.ஜ.க போர்க்கொடி தூக்குவது கிடையாது. ஆனால் சத்ரபதி சிவாஜி விவகாரத்தில் பா.ஜ.க-வே ஆளுநரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறது.

இது தொடர்பாக அந்தக் கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினர் உதயன்ராஜே போஸ்லே செய்தியாளர்களிடம், ``ஆளுநர் பகத்சிங் கோஷாரியாவை முதியோர் இல்லத்துக்கு அனுப்ப வேண்டும். இது போன்று வக்கிரமாகப் பேசுபவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். அவருக்கு ஆளுநர் பதவியில் இருக்கத் தகுதியில்லை'' என்று தெரிவித்திருக்கிறார்.

மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷாரியா
மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷாரியா
ட்விட்டர்

சட்டமேலவை எதிர்க்கட்சித் தலைவர் அம்பாதாஸ் தன்வே இது குறித்துப் பேசும்போது, ``ஆளுநரின் அறிக்கைக்குப் பின்னால் பா.ஜ.க இருக்கிறது. தலைவர்களுக்கு எதிராக அடிக்கடி ஆளுநர் கோஷாரியா இதுபோல் சர்ச்சைக்குரிய வகையில் பேசுகிறார். அவர் மகாராஷ்டிராவை அவமதிக்க முயல்கிறார்'' என்று கூறினார்.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் இது தொடர்பாக செய்தியாளர்களிடம், ``ஆளுநர் உடனே வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட வேண்டும். கோஷாரியா இதற்கு முன்பும் பல முறை சத்ரபதி சிவாஜி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். சத்ரபதி சிவாஜியை வேறு எந்தத் தலைவருடனும் ஒப்பிடக் கூடாது'' என்றார்.

ஆளுநருக்கு எதிராக புனேயில் போராட்டம்
ஆளுநருக்கு எதிராக புனேயில் போராட்டம்
ட்விட்டர்

தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மும்பை சி.எஸ்.டி ரயில் நிலையத்தில் ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள். இது தொடர்பாக அந்தக் கட்சி எம்.பி சுப்ரியா சுலே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``சத்ரபதி சிவாஜிக்கு எதிராகப் பேசிய கோஷாரியாவை பா.ஜ.க காப்பாற்ற முயல்வது துரதிஷ்டவசமானது'' என்றார்.

எதிர்க்கட்சிகள் நாக்பூர், புனே, அவுரங்காபாத் நகரங்களிலும் ஆளுநருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``சத்ரபதி சிவாஜி மகாராஜா எங்கள் ஹீரோ என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆளுநர் கோஷாரியாவுக்கும் இதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. ஆனால் ஆளுநர் தெரிவித்த கருத்துக்கு வேறு பொருள் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது'' என்று தெரிவித்தார்.