Published:Updated:

`விஜய் ரூபானியின் விலகலும் பூபேந்திர படேல் நுழைவும்'- குஜராத்தில் பாஜக-வின் அரசியல் வியூகம் இதுதான்!

விஜய் ரூபானி - பூபேந்திர படேல்
விஜய் ரூபானி - பூபேந்திர படேல்

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 'மோடி - அமித் ஷா' தலைமையில் மத்திய ஆட்சி நடைபெற்றுவரும் நேரத்தில், 'குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் வெற்றி' பா.ஜ.க-வுக்குத் தேவையாக இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உத்தரகாண்ட், அஸ்ஸாம், கர்நாடகாவைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்திலும் பா.ஜ.க புதிய முதல்வரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. அடுத்த ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நேரத்தில், அதிரடியாக இந்த முதல்வர் மாற்றம் நடைபெற்றிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் பா.ஜ.க ஆட்சி செய்துகொண்டிருக்கும் மாநிலங்களில் அடிக்கடி முதல்வர் மாற்றம் நடைபெற்று வந்திருக்கிறது. குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலத்தில் சில மாத இடைவெளிக்குள் இரண்டு முதல்வர்கள் மாற்றப்பட்டனர். இந்த மாற்றங்களுக்குக் காரணங்களாக, 'மாநில வளர்ச்சி, தொலைநோக்குப் பார்வை, இளையவர்களுக்கு வாய்ப்பு அளித்தல்' எனப் பல்வேறு விளக்கங்களையும் பா.ஜ.க கொடுத்துவரும்.

ஆனந்தி பென் - எடியூரப்பா - விஜய் ரூபானி
ஆனந்தி பென் - எடியூரப்பா - விஜய் ரூபானி

குறிப்பாக, 'வயது முதிர்ந்தவர்கள் அரசுப் பதவிகளைத் துறந்துவிட்டு கட்சிப் பணியாற்ற வேண்டும்' என்பது பா.ஜ.க-வின் விதிமுறை. ஒவ்வொரு மாநிலத்திலும் முதல்வர் மாற்றப்படும் நேரங்களில், மேற்கண்ட கட்சி விதிமுறையையே அச்சுப்பிசகாமல் பதிலாக்குகின்றனர் பா.ஜ.க-வினர். ஆனால், முதல்வர் மாற்றப் பின்னணி குறித்துப் பேசுபவர்களோ, 'ஏற்கெனவே பதவியில் இருப்பவர்கள் மீது கட்சித் தலைமைக்கு ஏற்படும் அதிருப்தியைப் பொறுத்தே இந்த மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன' என்கின்றனர். கர்நாடகாவில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருந்த எடியூரப்பா, கடந்த ஜூலை மாதம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்வராகப் பொறுப்பேற்ற பசவராஜ் பொம்மைக்கு வாழ்த்து கூறிய எடியூரப்பா, தனது ராஜினாமாவுக்கான காரணமாக, கட்சியின் அதே விதிமுறையைச் சுட்டிக்காட்டினார். ஆனாலும்கூட எடியூரப்பா தலைமையிலான அரசுமீது படிந்திருந்த பல்வேறு குற்றச்சாட்டுகளும், உட்கட்சித் தகராறுகளுமே அவரை வீழ்த்தியது என்கின்றனர் கர்நாடக மாநில அரசியலை உற்று நோக்குபவர்கள்.

ராஜ்ய சபா எம்.பி பதவி: திமுக-வில் கிடுகிடு ரேஸ் ஆரம்பம்; காங்கிரஸ் மூத்த தலைவருக்கு வாய்ப்பா?!

குஜராத்தில், 2022-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தலைச் சந்திக்க ஒரு வருட காலம் மட்டுமே இருக்கும் சூழலில், குஜராத் மாநில முதல்வராக பொறுப்பு வகித்துவந்த விஜய் ரூபானி, கடந்த சனிக்கிழமை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். 'குஜராத் மாநில வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல தொலைநோக்கு கொண்ட புதிய தலைவர் தேவைப்படுகிறார். எனவே, நான் ராஜினாமா செய்திருக்கிறேன். தொடர்ந்து கட்சிப் பணியில் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்' என மேலிட முடிவை செய்தியாளர்கள் முன்னிலையில் வார்த்தை மாறாமல் ஒப்புவித்திருக்கிறார் விஜய் ரூபானி. இதையடுத்து 'புதிய முதல்வர் யார்?' என்ற கேள்வி மாநில அரசியலைப் பரபரப்பாக்கிவந்தது. கடந்த ஞாயிறன்று புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒன்றுகூடிய மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் 'பூபேந்திர படேலை'த் தேர்ந்தெடுத்துள்ளனர்.

அமித் ஷா - நரேந்திர மோடி
அமித் ஷா - நரேந்திர மோடி

குஜராத்தில், படேல் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி நடைபெற்றுவந்த போராட்டங்கள் 2016-ம் ஆண்டு உச்சம் தொட்டன. அப்போது, பா.ஜ.க-வின் ஆனந்தி பென் படேல் முதல்வராகப் பதவி வகித்துவந்தார். போராட்ட சூழ்நிலையைச் சமாளிக்கும் நோக்கில், ஆனந்தி பென் படேலை பதவி விலகச் செய்த பா.ஜ.க மேலிடம், அவருக்கு பதிலாக ஜெயின் பனியா சமூகத்தைச் சேர்ந்த விஜய் ரூபானியை முதல்வராகத் தேர்ந்தெடுத்தது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில், முதல்வர் பொறுப்பேற்றிருந்த விஜய் ரூபானி தனிப்பட்ட தலைமையாக வளர முடியவில்லை. மோடி, அமித் ஷா ஆலோசனைகளைச் செயல்படுத்துகிறவராக பதவி வகித்துவந்தார். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க மீண்டும் வெற்றி பெறவே மீண்டும் முதல்வரானார் விஜய் ரூபானி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மொத்தமாக ஐந்து வருடங்கள் முதல்வர் பதவியில் இருந்துவந்த விஜய் ரூபானி, அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருந்த நேரத்தில் திடீரென ராஜினாமா செய்ய வைக்கப்பட்டிருப்பது தேர்தலை எதிர்கொள்ளும் உத்தி என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். தொடர்ந்து இது குறித்துப் பேசுபவர்கள், ``ஏற்கெனவே பொறுப்பில் உள்ளவர்கள் மீதான குறைகள் மக்கள் மத்தியில் எதிர்ப்பு மனநிலையை உருவாக்கியிருக்கும். இந்தச் சூழலில், புதிய முகத்தோடு தேர்தலை எதிர்கொள்வதுதான் வெற்றிக்கான வியூகமாக இருக்கும்' என்று எண்ணியே கட்சித் தலைமை இந்த முடிவை எடுத்திருக்கிறது. அடுத்து, குஜராத் மாநிலத்தில் தொடர்ச்சியாக ஆட்சியைத் தக்கவைத்திருக்கும் பா.ஜ.க., அடுத்த வருடத் தேர்தலிலும் வெற்றியை ருசிபார்க்க வேண்டும் என்று எண்ணுகிறது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 'மோடி - அமித் ஷா' தலைமையில் மத்திய ஆட்சி நடைபெற்றுவரும் நேரத்தில், 'குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் வெற்றி' பா.ஜ.க-வுக்குத் தேவையாக இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பை 'விஜய் ரூபானி'யைக் கொண்டு நிறைவேற்ற முடியாது என்பது கட்சித் தலைமையின் கணக்கு.

எனவே, தனிப்பட்ட செல்வாக்கு எதுவுமின்றி, பொம்மலாட்டத் தலைவராக இருந்துவரும் விஜய் ரூபானியின் இடத்தில் புதிய முகத்தை மாற்றியமைத்திருக்கிறது கட்சி. பூபேந்திர படேல், மாநிலத்திலுள்ள பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த 2016-ல் இதே பெரும்பான்மைச் சமூகத்தினர் நடத்திய இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின்போது, படேல் சமூகத்தைச் சேர்ந்த முதல்வரை மாற்றியமைத்து நிலைமையைச் சமாளித்தது பா.ஜ.க.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

வாழ்க்கை ஒரு வட்டம். வருகிற 2022-ல் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. இப்போது மாநிலத்திலுள்ள பெரும்பான்மைச் சமூகமான படேல் சமூக வாக்குகளைக் கைப்பற்றி வெற்றி பெறுவதுதான் கட்சியின் இலக்கு. எனவே, படேல் எனும் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக நியமித்து, வெற்றிக்கான வியூகம் வகுத்துள்ளது'' என்கின்றனர்.

இது குறித்துப் பேசுகிற தமிழக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ``இது முழுக்க முழுக்க பா.ஜ.க-வின் உள்கட்சி விவகாரம். மாநில முதல்வராக யாரைத் தேர்ந்தெடுத்தால், இன்னும் செம்மையாகப் பணி செய்ய முடியும் என்பதை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள்தான் முடிவு செய்திருக்கிறார்கள். எனவே, இதில் சாதி சார்ந்து முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. அப்படி விமர்சிப்பவர்கள் அவர்களுடைய சொந்தக் கருத்தைச் சொல்கிறார்கள் என்று மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.

குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில், 'கட்சிக்காக விஜய் ரூபானி தீவிர பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். அதற்கு முதல்வர் பதவி இடையூறாக இருக்கக்கூடும்' என்றுகூட கட்சித் தலைமை எண்ணியிருக்கலாம். எனவே, ஏற்கெனவே சொன்னதுபோல் இது முழுக்க முழுக்க பா.ஜ.க-வின் உள்கட்சி சார்ந்த விவகாரம். இதில் வெளியிலிருந்து யாரும் கருத்து சொல்லிவிட முடியாது!'' என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு