Published:Updated:

நபிகள் நாயகம் விவகாரம்: `பாஜக நாட்டை வளைகுடா நாடுகளிடம் வளைந்துபோக வைத்திருக்கிறது!' -உத்தவ் தாக்கரே

பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே

நபிகள் நாயகம் விவகாரத்தால் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டிருக்கிறது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருக்கிறார்.

நபிகள் நாயகம் விவகாரம்: `பாஜக நாட்டை வளைகுடா நாடுகளிடம் வளைந்துபோக வைத்திருக்கிறது!' -உத்தவ் தாக்கரே

நபிகள் நாயகம் விவகாரத்தால் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டிருக்கிறது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் மசூதிகளில் ஒலிபெருக்கியை அகற்ற வேண்டும் என்று சொன்ன ராஜ் தாக்கரே, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஒளரங்காபாத்தில் கடந்த மாதம் பொதுக்கூட்டம் நடத்தினார். அதற்குப் போட்டியாக மகாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே ஒளரங்காபாத்தில் பொதுக்கூட்டம் நடத்தினார். நேற்று இரவு நடந்த இந்தக் கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, ``முகமது நபிகள் குறித்து பா.ஜ.க தெரிவித்த கருத்தால் இந்தியாவுக்கு சர்வதேச அளவில் தர்மசங்கடம் ஏற்பட்டிருக்கிறது. வளைகுடா நாடுகளிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டிருக்கிறது. பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா முகமது நபிகள் குறித்து தெரிவித்த கருத்தால் மத்திய கிழக்கு நாடுகள், வளைகுடா நாடுகள் இந்தியாவை மன்னிப்புக் கேட்க வைத்திருக்கின்றன. பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பயன்படுத்திய வார்த்தைகள் இந்தியாவின் மதிப்பை சர்வதேச அளவில் களங்கப்படுத்திவிட்டன. பா.ஜ.க-வால் நாட்டின் மதிப்புதான் பாதிக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ.க-வின் மதிப்பு பாதிக்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

தொடர்ந்து பேசியவர், ``இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கிறது. ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்துகொண்டே செல்கிறது. ஆனால், எந்த மசூதியில் சிவலிங்கம் இருக்கிறது, தாஜ் மஹாலில் என்ன இருக்கிறது என்பதுதான் நமது கவலையாக இருக்கிறது. சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவைக் கொண்டு மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி தலைவர்களைத் துன்புறுத்துவதற்கு பதில் காஷ்மீரில் பண்டிட்டுகள் படுகொலை செய்யப்படும் இடத்துக்குச் சென்று ரெய்டு நடத்த வேண்டும்.

எங்களுக்குள் (சிவசேனா, பா.ஜ.க) கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நரேந்திர மோடி நமது நாட்டின் பிரதமர். அவரின் புகைப்படங்கள் சில நாடுகளில் குப்பைத்தொட்டியில் போடப்படுகின்றன. நாம் அதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். பா.ஜ.க-வும், அதன் செய்தித் தொடர்பாளரும் செய்த தவற்றுக்கு இந்தியா ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்... ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பா.ஜ.க-விடமிருந்து இது போன்ற நடத்தையைத்தான் எதிர்பார்த்தீர்களா என்று கேள்வி எழுப்பினார். ஒளரங்காபாத் நகரத்தின் பெயரை சாம்பாஜிநகர் என்று மாற்றுவோம். என் தந்தை பால் தாக்கரேவின் கனவை நாங்கள் மறந்துவிடவில்லை. ஒளரங்காபாத் பெயரை மாற்றுவதன் மூலம் கனவை நிறைவேற்றுவோம்" என்று தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism