Published:Updated:

மீண்டும் கணக்கை தொடங்கிய பா.ஜ.க!

வானதி சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
வானதி சீனிவாசன்

1984 சட்டமன்றத் தேர்தலிலேயே, இந்து முன்னணி ஆதரவுடன், பத்ம நாபபுரம் தொகுதியில் களமிறங்கிய பாலச்சந்திரன் சுயேச்சையாக வெற்றிபெற்றார்

மீண்டும் கணக்கை தொடங்கிய பா.ஜ.க!

1984 சட்டமன்றத் தேர்தலிலேயே, இந்து முன்னணி ஆதரவுடன், பத்ம நாபபுரம் தொகுதியில் களமிறங்கிய பாலச்சந்திரன் சுயேச்சையாக வெற்றிபெற்றார்

Published:Updated:
வானதி சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
வானதி சீனிவாசன்

15 ஆண்டுகள் வனவாசத்துக்குப் பிறகு, தமிழக சட்டமன்றத்தில் தனது கணக்கை மீண்டும் தொடங்கியிருக்கிறது பா.ஜ.க. அக்கட்சியின் சார்பில் நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தி, கோவை தெற்கில் வானதி சீனிவாசன், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், மொடக்குறிச்சியில் சரஸ்வதி ஆகியோர் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் நுழைகிறார்கள். இதனால் உற்சாகமடைந்திருக்கும் தொண்டர்கள், ‘‘பா.ஜ.க எதிர்ப்பு அலை, பிரதமர் மோடிக்கு எதிராக மக்களிடம் கசப்புணர்வு என்றெல்லாம் பேசியவர்களை, இந்த வெற்றியால் வாயடைக்க வைத்திருக்கிறோம். தொடர் முயற்சியும் களப்பணியும்தான் ஒரு வேட்பாளரை வெற்றி பெறவைக்கும் என்பதையும் சாதித்துக் காட்டியிருக்கிறோம்’’ என்று குதூகலிக்கிறார்கள்.

மீண்டும் கணக்கை தொடங்கிய பா.ஜ.க!

1996 சட்டமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதியில் பா.ஜ.க சார்பில் களமிறங்கிய சி.வேலாயுதன், அக்கட்சியின் முதல் பிரதிநிதியாக தமிழக சட்டசபைக்குள் நுழைந்தார். அதன் பிறகு, 2001 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் அணி சேர்ந்து 21 தொகுதிகளில் களம்கண்ட பா.ஜ.க., நான்கு தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஹெச்.ராஜா, ஜெக.வீரபாண்டியன், கே.என்.லட்சுமணன், கே.வி.முரளிதரன் ஆகியோர் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களாக பவனிவந்தார்கள். அதற்குப் பிறகு, 2006, 2011, 2016 தேர்தல்களில் பா.ஜ.க-வால் வெற்றிபெற முடியவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியால், பா.ஜ.க மீண்டும் சட்டமன்றத்துக்குள் நுழைகிறது.

வெற்றி குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர், ‘‘1984 சட்டமன்றத் தேர்தலிலேயே தன் கணக்கை சட்டமன்றத்தில் பா.ஜ.க தொடங்கி விட்டது. இந்து முன்னணி ஆதரவுடன், பத்ம நாபபுரம் தொகுதியில் களமிறங்கிய பாலச்சந்திரன் சுயேச்சையாக வெற்றிபெற்றார். இந்தத் தேர்தலில், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெருவாரியாக பா.ஜ.க கூட்டணிக்கு வாக்களித்திருக்கிறார்கள். ‘தேவேந்திரா... நரேந்திரா’ என்று பிரதமர் மோடி தன்னை தேவேந்திர குல வேளாளர் மக்களுடன் ஐக்கியப்படுத்திக் கூறியதால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்களுக்கு ஆதரவளித்திருப்பது தென் மாவட்டங் களிலும், கொங்கு மண்டத்திலும் கைகொடுத்திருக்கிறது.

மீண்டும் கணக்கை தொடங்கிய பா.ஜ.க!

நாகர்கோவிலில் சிட்டிங் தி.மு.க எம்.எல்.ஏ சுரேஷ்ராஜன் மீதிருந்த அதிருப்தி, தி.மு.க உட்கட்சிப் பூசல் ஆகியவை பா.ஜ.க-வுக்கு சாதகமான சூழலை உருவாக்கியது. தவிர, அந்தத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான எம்.ஆர்.காந்தி, தேசப்பணிக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். செருப்புகூட அணியாமல், வாடகை வீட்டில் குடியிருந்துகொண்டு களப்பணியாற்றுபவர். நேர்மையான ஒருவர் வேண்டுமென அந்தத் தொகுதி மக்கள் தீர்மானித்துத்தான், காந்தியை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள்.

மீண்டும் கணக்கை தொடங்கிய பா.ஜ.க!

திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந் திரனின் பூத் கமிட்டி வியூகங்களும் அ.தி.மு.க-வின் வாக்குகள் பா.ஜ.க-வுக்கு மடை மாறியிருப்பதும் வெற்றியை எளிதாக்கியிருக்கின்றன. கோவை தெற்கில் கடும் போராட்டத்துக்குப் பிறகுதான் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றிருக்கிறார். மொடக்குறிச்சியிலும் அதே கதைதான். இந்தத் தொகுதிகளில் கவுண்டர் சமூகத்தினர் எங்கள் கூட்டணிக்கு ஆதரவாகத் திரண்டிருப்பதை உணர முடிகிறது.

பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிட்ட தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க-வின் வாக்குகள் பா.ஜ.க-வுக்கு திரண்டிருந்தாலும், கொங்கு வேளாள கவுண்டர்களின் வாக்குகள் சற்று மடைமாறிவிட்டன. இதனால்தான், 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் முருகன் தோல்வியைத் தழுவினார். அரவக்குறிச்சியில் சிறுபான்மையினரின் வாக்குகள் பா.ஜ.க-வுக்கு எதிராக மாறியதால், அண்ணாமலையால் வெற்றிபெற முடியவில்லை. புதிய தமிழகம் கிருஷ்ணசாமியைக் கூட்டணியில் வைத்திருந்து, முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்திருந்தால், தெற்கிலும் டெல்டாவிலும் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி மேலும் சில இடங்களைக் கைப்பற்றியிருக்கும்.

வெற்றிபெற்றுள்ள இந்த நான்கு எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு, அடுத்த தேர்தலைக் குறிவைத்துக் களமாடுவதுதான் பா.ஜ.க-வின் திட்டம். பல்வேறு சமூகங்களையும் உள்ளடக்கிய அரசியலை ஆரம்பிக்கப்போகிறோம். சட்டமன்றத்தில் தி.மு.க-வுக்கு உண்மையான அச்சுறுத்தல் பா.ஜ.க-தான். அதைத் தமிழகம் பார்க்கப்போகிறது’’ என்றார்கள்.

மீண்டும் கணக்கை தொடங்கிய பா.ஜ.க!

ஒரு தொகுதியில் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றினால் வெற்றியடைய முடியும் என்பதை பா.ஜ.க நிரூபித்திருப்பதாகக் கூறுகிறார் பா.ஜ.க-வின் துணைத் தலைவர்களில் ஒருவரான எம்.என்.ராஜா. நம்மிடம் பேசிய அவர், ‘‘2016 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கில் வானதி சீனிவாசனும், நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தியும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்கள். அதற்குப் பிறகும் அவர்கள் தொகுதியைக் கைவிடாமல், தொடர்ச்சியாகக் களப்பணியாற்றினார்கள். அதன் விளைவாகத்தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. பா.ஜ.க வெற்றிபெறாத ஏனைய 16 தொகுதிகளிலும், அந்தந்தத் தொகுதிகளின் எம்.எல்.ஏ-க்கள் வேலை பார்க்கிறார்களோ இல்லையோ, பா.ஜ.க-வினர் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவார்கள். இந்த நான்கு எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு, அடுத்த ஐந்து வருடத்துக்குள் ஆட்சியமைக்கக் கூடிய அளவில் பா.ஜ.க தமிழகத்தில் வளரும்’’ என்றார்.

பல கேலிப் பேச்சுகள், நையாண்டிகள், வசவுகளுக்கு மத்தியில் பா.ஜ.க தன் கணக்கை சட்டமன்றத்தில் மீண்டும் ஆரம்பித்திருக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் அந்தக் கட்சி எப்படி வளரப்போகிறது என்பது, வெற்றிபெற்ற அந்த நான்கு எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகளைப் பொறுத்தே அமையும்!