Published:Updated:

`மைத்ரேயனை ஆஃப் செய்யுங்கள்' - டெல்லி கட்டளையால் பதறிய அ.தி.மு.க தலைமை!

கடும் அதிருப்தியிலுள்ள மைத்ரேயனை முதல்வர் அல்லது துணை முதல்வர் சந்தித்துப்பேச ஏற்பாடு நடந்துவருகிறது. மைத்ரேயன் விஷயத்தில் பி.ஜே.பி தரப்பு அழுத்தம் கொடுக்கும் என்பதால், இந்த சமாதானப்பேச்சை நடத்த ஆயுத்தமாகியுள்ளது, அ.தி.மு.க தலைமை.

மைத்ரேயன் கண்ணீர் உரை
மைத்ரேயன் கண்ணீர் உரை

“இந்த அவை, எத்தனையோ பேர் மறைவுக்கு, பேரிடர்களில் மறைந்த மக்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. ஆனால், 2009-ம் ஆண்டில் என் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்டபோது இரங்கல் தெரிவிக்கவில்லை. இது, என்றுமே என் நெஞ்சில் முள்ளாய் தைத்துக்கொண்டே இருக்கும். நான் இறந்தால், இந்த அவையில் எனக்காக இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம்” என்று நாடாளுமன்றத்தில் தனது கடைசி உரையை கண்ணீர் மல்க பேசி உருகவைத்தார் மைத்ரேயன். அவர், இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு, அடுத்த பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஜெ.நினைவிடத்தில் மைத்ரேயன் அஞ்சலி
ஜெ.நினைவிடத்தில் மைத்ரேயன் அஞ்சலி

நாடாளுமன்றத்தில் பதவிக்காலம் முடிந்தபிறகு, இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் மைத்ரேயன் அஞ்சலி செலுத்தினார். அ.தி.மு.க-வில் தனக்கென எந்த ஆதரவு வட்டமும் இல்லாமல் தனித்துவமான செயல்பாட்டை உடைய மைத்ரேயன், ஜெயலலிதா நினைவிடத்திற்கு வரும்போது நுாற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் வந்ததே அ.தி.மு.க தலைமைக்கு அதிர்ச்சியைக்கொடுத்துள்ளது. தற்போது, மைத்ரேயன் பின்னால் அணி திரண்டிருப்பவர்கள் பெரும்பாலானோர், தென்சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க-வினர். இவர்களைக் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்டச்செயலாளர் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவினால் பதவி பறிக்கப்பட்டவர்கள். பதவி பறிக்கப்பட்ட நிர்வாகிகள், அ.தி.மு.க அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியும் அ.தி.மு.க தலைமை கண்டுகொள்ளவில்லை. இதனால், இத்தனை ஆண்டுகள் கட்சிகாக உழைத்த தங்களை கட்சி கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் விரக்தி அடைந்தவர்கள், இப்போது மைத்ரேயன் பின்னால் அணி திரண்டிருக்கிறார்கள்.

மைத்ரேயன், கடந்த சில மாதங்களாகவே அ.தி.மு.க தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்துவந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்தவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பன்னீர் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவருக்கு ஆதரவு தெரிவித்த முதல் எம்.பி மைத்ரேயன். ஆனால், பன்னீரும் அவரை கடைசியில் பரிதவிக்கவிட்டதால் மனவருத்தத்தில் இருந்தார். ஆனால், அ.தி.மு.க தலைமைக்கு மைத்ரேயன் மீதான அச்சம் மட்டும் தொடர்ந்து இருந்துவந்தது. பி.ஜே.பி தலைமையுடனும், பிரதமர் மோடியுடனும் அவருக்கு இருக்கும் தனிப்பட்ட நட்பே காரணம். அ.தி.மு.க தலைமைக்கு அவர்மீது ஒரு விதமான அச்சம் எப்போதுமே இருப்பதும் அதனால்தான். எனவே, அவரை அமைதியாக ஒதுக்கிவிட எடப்பாடி தரப்பு முடிவு செய்தது.

மைத்ரேயன்- பன்னீர்செல்வம்
மைத்ரேயன்- பன்னீர்செல்வம்

இந்நிலையில், தன்னுடைய பதவிக்காலம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் “மக்களவைத் தேர்தலில் தென் சென்னைத் தொகுதியில் நான் போட்டியிட விரும்பினேன். ஆனால், எனக்கு வாய்ப்பு தரப்படவில்லை. ஜெயலலிதாவால் மாநிலங்களவையில் மூன்று பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவன். அதில் ஒரு பதவியாவது கிடைக்கும் என நினைத்தேன். ஆனால், அதுவும் கிடைக்கவில்லை. அந்த வருத்தம் எனக்கு நிச்சயமாக இருக்கிறது. ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் நடக்கிறதா என்பதற்கு தமிழக மக்கள் தக்க நேரத்தில் பதில் அளிப்பார்கள்”என்று பேசியிருந்தார்.

மைத்ரேயன், தலைமைமீது அதிருப்தியில் இருப்பது அவர் பேட்டியில் வெளிப்பட்டது. அவரின் அடுத்த மூவ் பற்றி அ.தி.மு.க தலைமையில் ஆலோசனை நடந்துள்ளது. முதலில், பன்னீர்செல்வம் மைத்ரேயனைத் தொடர்புகொண்டு, ‘‘அமைதியாக இருங்கள் பேசிக்கொள்ளலாம்” என்று சொல்லியிருக்கிறார். அதற்கு, ‘‘இத்தனை நாள்கள் அமைதியாகத்தான் இருந்தேனே” என்று மைத்ரேயன் திருப்பிக்கேட்க, பதில் சொல்ல முடியாத பன்னீர் செல்வம், ‘‘செய்தியாளர்களைச் சந்தித்து ஏதும் பேசவேண்டாம். கட்சிக்குள் பேசி முடிவு எடுக்கலாம்’’ என்று சமாதானம் செய்துள்ளார். அதே நேரம், மைத்ரேயனுக்கு நெருக்கமான டெல்லி பி.ஜே.பி தலைவர் ஒருவர், எடப்பாடிக்கு நெருக்கமான இரண்டு அமைச்சர்களுக்கும் போன் செய்து, இது தொடர்பாகப் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மோடி- மைத்ரேயன்
மோடி- மைத்ரேயன்

இதுபற்றி நம்மிடம் பேசிய பி.ஜே.பி நிர்வாகி ஒருவர், ‘‘டெல்லியிலிருந்து பேசிய அந்த பி.ஜே.பி தலைவர் ‘மைத்ரேயன் விஷயத்தில் என்ன நடக்கிறது. அவரை ஆஃப் செய்ய முடியாதா... அவர் லாபி எங்களுக்குத் தெரியும். நீங்கள் அவரைச் சந்தித்து முதலில் சமாதானம் செய்யுங்கள்’ என்று எச்சரித்திருக்கிறார். மைத்ரேயன் வேறு மூவ் ஏதும் எடுப்பதை பி.ஜே.பி விரும்பவில்லை என்பதை சூசகமாகச் சொல்லியிருக்கிறார். இதனால், அ.தி.மு.க தலைமை கொஞ்சம் பதறிப்போயிருக்கிறது. நாளை, முதல்வர் அல்லது துணை முதல்வர் அவரை சந்தித்துப் பேசுவார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது. மைத்ரேயன் விஷயத்தில் பி.ஜே.பி தரப்பு அழுத்தம்கொடுக்கும் என்பதால், இந்த சமாதானப் பேச்சை நடத்த ஆயத்தமாகியுள்ளது அ.தி.மு.க தலைமை’’ என்றார்.

மைத்ரேயனை சமாதானப்படுத்தும்பொருட்டு அ.தி.மு.க தலைமை எடுக்கும் இந்த முயற்சி வெற்றி பெறுமா அல்லது மைத்ரேயன் ஏதாவது அதிரடி முடிவை எடுப்பாரா என்பது இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும்.