Published:Updated:

`அரசியல் சாசனத்தைச் சிதைக்கும் பாஜக...’ - ப.சிதம்பரம் கருத்தும், பாஜக பதிலும்!

ப.சிதம்பரம்

``அரசியல் சாசனத்தை திருத்தும் முயற்சி மேற்கொண்டால் அதற்கு எதிராக அனைவரும் கருத்து தெரிவிக்க வேண்டும். அரசியல் சாசனத்தை திருத்துவதை தடுக்க நாடு முழுவதும் ஒரே உணர்வு வர வேண்டும்” - ப.சிதம்பரம்

`அரசியல் சாசனத்தைச் சிதைக்கும் பாஜக...’ - ப.சிதம்பரம் கருத்தும், பாஜக பதிலும்!

``அரசியல் சாசனத்தை திருத்தும் முயற்சி மேற்கொண்டால் அதற்கு எதிராக அனைவரும் கருத்து தெரிவிக்க வேண்டும். அரசியல் சாசனத்தை திருத்துவதை தடுக்க நாடு முழுவதும் ஒரே உணர்வு வர வேண்டும்” - ப.சிதம்பரம்

Published:Updated:
ப.சிதம்பரம்

இந்திய அரசியல் சாசன அமைப்புகளின் மீது கடுமையான தாக்குதல்களை பாஜக தொடுத்து வருகிறது என்றும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியினர் நடைபயணத்தை நடத்த வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியது. அந்தவகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு, பிற்படுத்தப்பட்டோர் துறை, ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன், சிறுபான்மைத்துறை, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு என 8 அமைப்புகள் ஒருங்கிணைந்து இந்திய அரசியலமைப்பு பாதுகாப்பு நடைபயணத்தை முன்னெடுத்தது.

இந்திய அரசியலமைப்பு பாதுகாப்பு நடைபயண நிகழ்ச்சி
இந்திய அரசியலமைப்பு பாதுகாப்பு நடைபயண நிகழ்ச்சி

இதற்கான, தொடக்க விழா சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது. மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் இந்த நடைபயணம் நாளை ஶ்ரீபெரும்பதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் முடிவடைகிறது. தொடக்க நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் மத்திய  அமைச்சர்கள் திக் விஜய் சிங், சல்மான் குர்ஷித், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், திருநாவுக்கரசர், கே.வி.தங்கபாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

நிகழ்ச்சியில் பேசிய ப.சிதம்பரம், "நாடாளுமன்றத்தின் படியை தொட்டு வணங்கி விட்டு, மைய அவையில் அரசியல் சாசன நூலை வணங்கி விட்டு பிரதமராக மோடி பதவியேற்றார். அவர் பதவியேற்று 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. அரசியல் சாசனத்தை வடிவமைத்தது நாம். அதனை இன்றைய பா.ஜ.க அரசு சிதைக்கிறது. நாடாளுமன்ற, மாநிலங்களவையில் பா.ஜ.கவுக்கு மூன்றில் இரண்டு சதவீதம் ஆதரவும் இல்லை. பெரும்பான்மையும் இல்லை. இந்த தடை மட்டும் இல்லையென்றால் அரசியல் சாசனத்தை மாற்றுவார்கள், திருத்துவார்கள். எனவே, அரசியல் சாசனத்தை திருத்தும் முயற்சி மேற்கொண்டால் அதற்கு எதிராக அனைவரும் ஒன்றாக கருத்து தெரிவிக்க வேண்டும். அரசியல் சாசனத்தை திருத்துவதை தடுக்க நாடு முழுவதும் ஒரே உணர்வு வர வேண்டும். அப்படி திருத்த நினைத்தால் அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றவாறு திருத்த வேண்டும். அனைத்து மாநிலங்களும், பெண்களும் ஏற்கும் வகையில் திருத்தினால் அதை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகையால் அரசியல் சாசனத்தை காப்பாற்றுவோம்" என்றார். 

ப.சிதம்பரத்தின் கருத்துக்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயண் திருப்பதி, "பல்வேறு அரசியலமைப்பு சட்டங்களை சிதைத்தது காங்கிரஸ் தான். பல அரசியலமைப்பு சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வந்தது காங்கிரஸ். அவசர காலநிலையை பிரகடனம் செய்து நாட்டை மோசமான பாதைக்கு அழைத்து சென்றது. தங்களுடைய வாக்கு வங்கிக்காக அதிகாரத்தை பயன்படுத்தி அனைத்தையும் செய்து வந்தது.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

பா.ஜ.க பற்றி ப.சிதம்பரம் பேச எந்தவித முகாந்திரமும் கிடையாது. நாங்கள் கொண்டு வரும் எந்த சட்டமானாலும் சரி, சட்ட திருத்தமானாலும் சரி எதிர்கட்சிகள் யாரும் எதிர்க்க முடியாத அளவிற்கே சட்டங்களைக் கொண்டு வருகிறோம். பா.ஜ.க கொண்டுவரும் நல்ல சட்டங்களை எதிர்த்தால் தங்களுக்கு பிரச்னை வரும் என்று தெரிந்துகொண்டு அவர்களும் ஆதரித்துள்ளார்கள். மக்களுக்கும், சட்டத்திற்கும் எதிராக எந்தஒரு சட்டத்தை கொண்டுவர அவசியமும் இல்லை. அதற்கான தேவையும் பா.ஜ.கவுக்கு எழவில்லை” என்றார்.