Published:Updated:

காலநிலை மாற்றமும் காலாவதியாகும் கொள்கைகளும்!

ஜூ.வி 2020

பிரீமியம் ஸ்டோரி

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகளைத் தடுத்து நிறுத்து வதற்காக உலக நாடுகள் முயற்சி எடுத்துவரும் வேளையில், மத்திய பா.ஜ.க அரசு, இந்த விஷயத்தில் பின்னோக்கிப் பயணப்பட வைத்திருப்பது அனைவரையும் அதிரவைக்கிறது. மத்திய பா.ஜ.க அரசு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டுவதற்காக, மாசற்ற ஆற்றலுக்கான தேசிய நிதியத்தின் (National clean energy fund) கட்டுப்பாட்டிலிருந்த பணத்தை எடுத்துக் கையாண்டிருப்பதுதான் இந்தப் பிரச்னைக்கான ஆரம்பப் புள்ளி.

மாசற்ற ஆற்றலுக்கான தேசிய நிதியம் என்றால் என்ன?

உலகை மிக அதிகமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் விஷயம், காலநிலை மாற்றமும் புவி வெப்பமயமாதலும்தான். 2015-ம் ஆண்டு நடந்த பாரிஸ் மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் உலகளவில், கார்பன் அளவை குறைக்கும் முயற்சிகளை எடுப்பதற்கு ஒப்புக்கொண்டன. நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதன்மூலம் கார்பன் அதிகமாக வெளியேறும். இதைக் கருத்தில்கொண்டுதான் ஐக்கிய முற்போக்கு அரசாங்கம் கடந்த 2010-11 ஆண்டுக் காலகட்டத்தில், ‘மாசற்ற ஆற்றலுக்கான தேசிய நிதியம்’ ஏற்படுத்தியது. அதற்கான நிதி ஆதாரத்தையும் அறிவித்தது. அதன் அடிப்படையில், சுரங்கங்களிலிருந்து நிலக்கரி எடுக்கப்பட்டாலோ அல்லது நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டாலோ டன் ஒன்றுக்கு ஐம்பது ரூபாய் வரி என்று நிர்ணயிக்கப்பட்டது.

மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் கடந்த 2010-ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு தேசிய சூரிய சக்தி திட்டத்தையும்

அறிவித்தது. 2020-ம் ஆண்டுக்குள் முதலில் 20,000 மெகாவாட் மின்னுற்பத்தி இலக்கு என்ற அளவில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், நரேந்திர மோடி அரசாங்கத்தால் 2022-ம் ஆண்டுக்குள் 1,00,000 மெகாவாட் என இலக்கு அதிகரிக்கப் பட்டது. 2010-ல் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, சூரியசக்தியில் மின்சாரம் தயாரிப்பது அதிக செலவு பிடிப்பதாகவும், அதிக முதலீடு தேவைப்படுவதுமாக இருந்தது. எனவே, இந்தச் செலவைச் சமாளிக்க மாசற்ற ஆற்றல் நிதியைப் பயன்படுத்துவதுதான் நோக்கம்.

காலாவதியாகும் கொள்கைகள்
காலாவதியாகும் கொள்கைகள்

அதாவது, நிலக்கரி பயன்பாடு மூலம் ஏற்படும் சூழல் மாசை குறைப்பதுடன், சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களை உருவாக்க அதிக முதலீட்டையும் பெற முடியும். ஆனால், இந்த வரி நிர்ணயத்துக்குப் பிறகு நிலக்கரி மின்சார உற்பத்திச் செலவும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்கள்மூலம் நடைபெறும் மின் உற்பத்திச் செலவும் கிட்டத்தட்ட ஒரே அளவில் வந்தன.

ஏற்றமும் இறக்கமும்!

2014-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் 50 ரூபாயாக இருந்த வரியை 100 ரூபாயாக உயர்த்தியது. 2015-ல் இது 200 ரூபாய் ஆனது. 2016-ல் 400 ரூபாயாக உயர்ந்தது இந்த வரி. எனவே, 2017-ம் நிதியாண்டின் தொடக்கத்தில் இந்த நிதி மட்டும் 57,790 கோடி ரூபாயாக இருந்தது. இது, மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு ஒரு நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யும் நிதியைவிட 20 மடங்கு அதிகம். ஆனால், கடந்த 2010-லிருந்து 2017 வரையிலாக, புதுப்பிக்கப்படக் கூடிய ஆற்றல் மற்றும் சூழல் செயற்பாடுகளுக்கு அந்த நிதியிலிருந்து வெறும் 37 சதவிகிதம் மட்டுமே செலவு செய்யப்பட்டிருந்தது. மீதித் தொகை செலவு செய்யப்படாமல் இருந்தது.

ஜி.எஸ்.டி அறிமுகத்துக்குப் பின்னர், இந்த நிதி ஜி.எஸ்.டி-யின்கீழ் வந்திருக்கிறது. அதாவது, 2017-ம் ஆண்டு முதல் சூரிய சக்தி மூலம் நடைபெறும் ஆற்றல் உற்பத்தியை ஜி.எஸ்.டி-யின் கீழ் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இதனால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மாநிலங்கள் சந்திக்கும் வரி இழப்பு களை ஈடு செய்ய இந்த நிதி பயன் படுத்தப்படும். இப்படிச் செய்வதன் மூலம் மாற்று எரிசக்திக்கு தேவையான நிதி இல்லாத நிலை உருவாகிவிட்டது. குறிப்பிட்ட வருடத்தில் செலவு செய்யப்படாவிட்டால்கூட அடுத்த வருடத்துக்கு அதைக் கொண்டு போகலாம். ஆனால், இது எதுவுமே இப்போது சாத்தியமில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதுப்பிக்கப்படக் கூடிய ஆற்றல் களிலிருந்து மின்சாரம் தயாரிப்பது மட்டுமே உலகை அழிவுப் பாதையிலிருந்து மீட்டெடுக்கும். இது நம் கண்ணுக்கு முன்னால் நிற்கும் பெரிய உண்மை. மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசோ, சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருக்கிறது. அந்த நிதியை வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தி யது மட்டுமல்லாமல், இப்போது இன்னொருபடி முன்னேறிச் செல்லவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கார்பன் வரி நீக்கம்!

அதாவது, ஒட்டுமொத்தமாக கார்பன் வரியை நீக்கிவிட முடிவு செய்துள்ளது மத்திய அரசு. அதற்கு அரசு சொல்லும் காரணம்தான் முரணாக உள்ளது. ‘மாநிலங்களிலுள்ள அனல் மின் நிலையங்களும், அனல் மின்நிலையங்களை இயக்கும் தனியார் நிறுவனங்களும் கார்பன் வரி கட்டுவதன் மூலம் அதிகம் செலவு செய்வதால், அவர்களால் மாசைக் கட்டுப்படுத்தக்கூடிய கருவிகளை வாங்கிவைத்து மாசைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, கார்பன் வரியை முழுமையாக நீக்கிவிடப்போகிறோம்’ என்கிறது மத்திய அரசு. என்ன கொடுமை!

குறைந்தபட்சம் அவர்கள் கட்டக்கூடிய கார்பன் வரியைப் பயன்படுத்தி புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களில் முதலீடு செய்தால், அனல் மின்நிலையங்களை படிப்படியாக மூடலாம். ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது... இந்த நிறுவனங்கள் கருவிகளை நிறுவப் போவதும் இல்லை, புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களில் முதலீடு செய்ய மத்திய அரசிடம் பணமும் இருக்கப் போவதில்லை.

காலாவதியாகும் கொள்கைகள்
காலாவதியாகும் கொள்கைகள்

மாசற்ற ஆற்றல் நிதியத்திலிருந்த நிதியை வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தியதால், புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களின் வளர்ச்சி பாதிக்கப் பட்டுள்ளது என்பதை கிடைக்கக்கூடிய தரவுகளி லிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். பாரிஸ் ஒப்பந்தத்தின்படி இந்தியா அறிவித்துள்ள தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பானது, ‘வரும் 2022-ம் ஆண்டுக்குள் சூரியசக்தி உள்ளிட்ட புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்கள் மூலம் 1,75,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவேண்டும்’ என்பதுதான். இதில் சூரியசக்தியின் பங்களிப்பு மட்டுமே 1,00,000 மெகா வாட் இருக்கும்.

இதில் ஏற்கெனவே 31,000 மெகாவாட் நிர்மாணிக்கப்பட்டு விட்டது. 17,000 மெகாவாட்டுக்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக் கின்றன. மேலும் 35,000 மெகாவாட்டுக் கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப் பட்டுள்ளன. ஆக, முதல் சில ஆண்டுகளில் சூரியசக்தி மின்னுற்பத்தி பிரகாசமாக இருந்தது. ஆனால், போகப்போக குறைய ஆரம்பித்து விட்டது. அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் திட்டங்களை நிறுவுவதில் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 2017-18-ம் ஆண்டில் 9,400 மெகாவாட் அளவுக்குத் திட்டங்கள் நிறுவப்பட்டன.

2018-19-ம் ஆண்டில் இது 6,500 மெகாவாட்டாக குறைந்து, இந்த ஆண்டு இதுவரை 2,900 மெகாவாட் மட்டுமே நிறுவப் பட்டுள்ளது. ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்ட திட்டங்களில் அநேகமானவை முதலீட்டாளர் களிடம் போதிய வரவேற்பைப் பெறாததால் திரும்பப் பெறப்பட்டுவி ட்டன.

முதல் சில ஆண்டுகளில் சூரியசக்தி மின்னுற்பத்தி பிரகாசமாக இருந்தது. ஆனால், போகப்போக குறைய ஆரம்பித்து விட்டது. அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக திட்டங்களை நிறுவுவதில் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
சூழலியல் செயற்பாட்டாளர், பூவுலகின் நண்பர்கள் கோ.சுந்தர்ராஜன்

மின்பகிர்மான நிறுவனங்கள் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங் களுக்குப் பணம் தராமல் இழுத்தடிப் பதும் இதற்கு முக்கியமான ஒரு காரணம். 2022-ம் ஆண்டுக்குள் சூரியசக்திமூலம் நடைபெறவேண்டிய 1,00,000 மெகா வாட் உற்பத்தியில், சுமார் 60 சதவிகிதம் குவிக்கப்பட்ட பெரிய மின் உற்பத்தித் திட்டங்கள் மூலமும் மீதமுள்ள 40 சதவிகிதம் வீடுகளின் மாடிகளில் நிறுவப்படும் திட்டங்களின் மூலமும் பெறப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதில் பெரிய திட்டங்களுக்கான முதலீடு சுமார் 1,20,000 கோடிகள். இந்த அளவுக்கான பணம் எங்கே இருந்து வரும்... என்று யோசித்துதான் மாசற்ற ஆற்றலுக்கான தேசிய நிதியம் உருவாக்கப்பட்டது.

இந்த அரசு, மாசற்ற ஆற்றல் நிதியத்தை வேறு விஷயங்களுக்காகப் பயன்படுத்தியது மட்டுமல்லாமல், அந்தத் துறையை நீர்த்துப்போகச் செய்யக்கூடிய அனைத்து விஷயங் களையும் செய்துகொண்டு வருகிறது. ‘கடற்கரையை மாசின்றி வைத்திருக்க வேண்டும்’ என்று நாட்டுக்கு உணர்த்துகிற நமது பிரதமர் மோடி, மாசற்ற ஆற்றல் நிதியத்தை மேம்படுத்துவதிலும் அக்கறை காட்டினால் நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு