Published:Updated:

``பாம்புப் புற்றில் கைவிட்டுவிட்டது பி.ஜே.பி.!'' - எச்சரிக்கும் பழ.கருப்பையா

பழ.கருப்பையா
பழ.கருப்பையா

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் மற்றும் இந்துத்துவா கொள்கைகள் குறித்த தனது பார்வையை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் தி.மு.க-வைச் சேர்ந்த பழ.கருப்பையா.

தமிழக அரசியலில், மூத்த தலைவர் பழ.கருப்பையா. தி.மு.க-வில் இருந்தாலும் அ.தி.மு.க-வில் இருந்தாலும் சொந்தக்கட்சியையே காய்ச்சி எடுப்பவர். எதிர்க்கட்சி என்றால் அவரது வீச்சு வேற லெவலில் இருக்கும். ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் மற்றும் இந்துத்துவா கொள்கைகள் குறித்த தனது பார்வையை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் தி.மு.க-வைச் சேர்ந்த பழ.கருப்பையா.

பழ.கருப்பையா
பழ.கருப்பையா

''ஜம்மு-காஷ்மீர் என்பது இந்தியாவைச் சேர்ந்த மாநிலம் அல்ல. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானுடன் சேராமல், தானே முன்வந்து இந்தியாவுடன் இணைந்த சமஸ்தானம் அது. இதற்கான விலையாக அவர்கள் பெற்றதுதான் இந்த 370-வது பிரிவு சிறப்பு அந்தஸ்து.

காஷ்மீர், இந்தியாவோடு இணைவதற்கு முன்பே, 'ஜனநாயகம் என்பது பெரும்பான்மையானவர்களுக்கான அமைப்பு. அங்கே, 51 முட்டாள்கள் என்ன முடிவு செய்கிறார்களோ அதைத்தான் 49 அறிஞர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தியா என்பது இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு' என்று அப்போதே காஷ்மீரை எச்சரித்திருந்தார் ஜின்னா.

காஷ்மீர்
காஷ்மீர்

அதனால்தான், 'பின்வரும் நாள்களில், இந்தியப் பெரும்பான்மை பாராளுமன்றம் நம்மை நசுக்கி அழித்துவிடக்கூடும். எனவே, நம்முடைய பாதுகாப்புக்குரிய ஏற்பாடுகளைச் செய்துகொண்டால் மட்டுமே இந்தியாவுடன் இணைய வேண்டும்' என்ற மனநிலையில் இருந்தது ஜம்மு-காஷ்மீர். இதைப் புரிந்துகொண்டதால்தான் இந்தியாவின் எல்லையாக, ராணுவக் கேந்திரமாக இருக்கக்கூடிய ஜம்மு-காஷ்மீரின் கோரிக்கையை ஏற்று, 'பெரும்பான்மையான நாங்கள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்போம்' என்று கூறி சிறப்பு அந்தஸ்தை வழங்கினார்.

இதன்படியே தொடர்ந்து 70 ஆண்டுகளாகக் கட்டிக்காக்கப்பட்டு வந்த இந்த நம்பிக்கையை 'ஒரே தேசம்' என்ற பெயரில், இப்போது சிதறடித்துவிட்டது மத்திய பி.ஜே.பி அரசு. இது நம்மை நம்பி வந்தவர்களுக்கு நாம் செய்த துரோகம்!

அமித் ஷா
அமித் ஷா

'நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம். நம் உரிமைகளைக் காத்து பாதுகாப்புக் கவசமாக இருப்பார்கள் என்று யாரை நாம் நம்பினோமோ, அந்தப் பாராளுமன்றமே நம் உரிமைகளைப் பறித்துவிட்டது' என்று கருதுவார்களேயானால், எப்படி அவர்கள் நமக்கு விசுவாசமாக இருப்பார்கள்?

இதுமட்டுமல்ல... 370-வது சட்டப் பிரிவின் கீழ் இன்றும் பல சலுகைகளை அனுபவித்து வரும் திரிபுரா, நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களும் மத்திய பி.ஜே.பி அரசைப் பார்த்துப் பயப்பட ஆரம்பித்திருக்கின்றன. எதையும் சிந்திக்காமல், முரட்டுத்தனமாக 'பண மதிப்பிழப்பு' நடவடிக்கையையும் கொண்டுவந்தார்கள். இப்போதுவரை அதன் பாதிப்பை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

பி.ஜே.பி. தலைவர்கள்
பி.ஜே.பி. தலைவர்கள்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், நாட்டின் பொருளாதாரமே சரிந்துகிடக்கும் சூழலில், அதைச் சீராக்கும் முயற்சியில் ஈடுபடாமல், பாம்புப் புற்றில் கைவிட்ட கதையாக, தேவையே இல்லாமல் காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறது மத்திய அரசு. ஏற்கெனவே காஷ்மீருக்காக 3 முறை போர் நடந்திருக்கிறது.

மதம், பண்பாடு, பழக்கவழக்கம், உணவு, உடை என்று எல்லா விஷயங்களிலும் இஸ்லாமியரும் இந்துக்களும் முற்றிலும் வேறுபட்டவர்கள். இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாக கொண்ட ஜம்மு-காஷ்மீர், தங்களது தனித்தன்மை அழிந்துவிடக் கூடாது என்று கருதினார்கள். அதன் அடிப்படையில்தான் அங்கே மற்றவர்கள் இடம் வாங்குவதுகூட தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அந்தஸ்து ரத்து ஆனதும் 'ஜம்மு-காஷ்மீரில் இடம் வாங்கப்போகிறோம்' என்று அம்பானியும் அதானியும் அலறுகிறார்கள். இவர்களிடம்தான் பணம் கொட்டிக்கிடக்கிறது. அதனால்தான் உலகம் முழுக்க எங்கே இடம் வாங்குவது என்று தேடியலைகிறார்கள். இவர்கள் இடம் வாங்குவதற்காக ஒரு அரசியல் சாசனத் திருத்தம் செய்ய வேண்டுமா என்றுதான் கேட்கிறேன்.

பழ.கருப்பையா
பழ.கருப்பையா

இதுமட்டுமா... 'அழகிய காஷ்மீர் பெண்களை நாம் மணந்து கொள்ளலாம்' என்று பி.ஜே.பி-யைச் சேர்ந்த ஒரு எம்.பி சொல்கிறார். இந்திய நாட்டின் எல்லையோர மாநிலம் நம்மிடம் காட்டிய விசுவாசத்தை மதிக்காமல், துரோகம் இழைத்து விட்டோமே என்ற அடிப்படை நாகரிகம்கூட இவர்களுக்கு இல்லையே.

வள்ளலாருக்கோ, என் பாட்டனாருக்கோ தான் இந்து என்று ஒருபோதும் தெரியாது. ஏனெனில், இந்து என்ற சொல்லே ஆங்கிலேயர் காலத்தில் சொல்லப்பட்டது, சுதந்திரப் போராட்டத்தில் காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை எல்லோரையும் ஒன்று திரட்ட பயன்படுத்தப்பட்டது. மற்றபடி இங்கே சைவம், வைணவம், முன்னோர் வழிபாடு, நாட்டார் வழிபாடு என்று பல சமயங்கள் உண்டு. ஆனால், எல்லோரையும் இந்து என்று ஒரே அவியலுக்குள் கொண்டுவருவது சரியல்ல.

பழ.கருப்பையா
பழ.கருப்பையா

இன்னும் சொல்லப்போனால், 'இந்து சமய அறநிலையத்துறை' என்ற சொற்பதமே இங்கே தவறானது. 'திராவிட சமயங்கள் அறநிலையத்துறை' என்றுதான் இருக்க வேண்டும். 'நாம் இந்துக்கள் இல்லை' என்ற செய்தியை முதலில் தமிழகத்தில் புரியவைக்க வேண்டும்.''

பளீச் என்று முடிக்கிறார் பழ.கருப்பையா.

அடுத்த கட்டுரைக்கு