Published:Updated:

`முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்களை அழைத்து வாருங்கள்!’ - நட்டாவின் தமிழக விசிட் பின்னணி

மாற்றுக் கட்சியில் இருந்து ஆட்களை இழுக்க வேண்டும் என்றால், அதற்கு நமது அரசியல் நடவடிக்கையை மாற்ற வேண்டும் என தமிழக பி.ஜே.பி. தலைவர்கள் கட்சித் தலைமைக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்!

மோடி அமித்ஷா
மோடி அமித்ஷா

அ.ம.மு.க-விலிருந்து பிரிந்துசெல்லும் ஆட்களை வளைத்துப் பிடிப்பதில் தி.மு.க., அ.தி.மு.க. இடையே கடும் போட்டியே நடைபெறுகிறது. இந்த நிலையில், வரும் ஜூலை 6-ம் தேதி சென்னை வரும் பி.ஜே.பி செயல் தலைவர் ஜே.பி.நட்டா, மாற்றுக் கட்சிகளிலிருந்து ஆட்களைப் பிடித்து வரும்படி உத்தரவிட்டுள்ளாராம். குறிப்பாக அ.தி.மு.க-வில் இருக்கும் ஆட்களுக்குக் குறிவைத்துள்ளது பி.ஜே.பி.

மோடி அமித்ஷா
மோடி அமித்ஷா

கட்சியில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியை வரும் ஜூலை 6-ம் தேதி பி.ஜே.பி தொடங்குகிறது. பிரதமர் மோடி வாரணாசியிலும், உள்துறை அமைச்சரும், பி.ஜே.பி தலைவருமான அமித் ஷா தெலங்கானாவிலும் இந்தப் பணியைத் தொடங்கவுள்ளனர். அதே தினத்தில், புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிக்காக பி.ஜே.பி செயல் தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வருகிறார்.

நட்டாவின் வருகை குறித்து நம்மிடம் பேசிய பி.ஜே.பி மாநிலப் பொறுப்பாளர் ஒருவர், ``தமிழகத்தில் மொத்தம் 67,720 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 புதிய உறுப்பினர்களைச் சேர்க்குமாறு பி.ஜே.பி தலைமை பணித்துள்ளது. தமிழகத்தை 6 மண்டலங்களாகப் பிரித்து, சமூக, அரசியல் செல்வாக்குப் பெற்ற ஒருவரை மண்டலத்துக்குப் பொறுப்பாளராக நியமிக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாற்றுக் கட்சியிலிருந்து ஆட்களை இழுக்கத் தலைமை உத்தரவிட்டுள்ளது.

அமித்ஷா
அமித்ஷா

குறிப்பாக, சித்தாந்தரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் எங்களுடன் சார்ந்துபோகும் அ.தி.மு.க-விலிருந்து ஆட்களை இழுக்க கட்சித் தலைமை ஆலோசனை வழங்கியுள்ளது. `அ.தி.மு.க-வை ஆதரித்துப் பேசி வருவதால், அங்கிருந்து யாரும் நம்மிடம் வரப் போவதில்லை.

அக்கட்சியைத் தாக்கினாலே, நமக்கும் அவர்களுக்குமான வேறுபாடு மக்களுக்குப் புரியும். முன்னாள் அமைச்சர் அந்தஸ்திலுள்ள நபர்கள் இணைந்தால்தான் கட்சிக்கு விளம்பரம் கிடைக்கும், உறுப்பினர் சேர்க்கைப் பணியும் வேகமெடுக்கும். அதற்கு நமது அரசியல் நடவடிக்கையை மாற்ற வேண்டும்’ என இங்குள்ள தலைவர்கள் ஜே.பி.நட்டாவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டா

‘இப்போதைக்கு ஆட்களைப் பேசி இழுக்கப் பாருங்கள். காலம் வரும்போது அ.தி.மு.க-வைத் தாக்கலாம்’ என அவரும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அ.தி.மு.க-வில் கட்சிப் பொறுப்பு இல்லாமல் ஓரங்கட்டப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர்கள், மேயர்களுக்கு வலை விரிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்குள் கட்சியை அடிமட்டம் வரையில் பலப்படுத்த பி.ஜே.பி. தலைமை தீர்க்கமாக உள்ளது” என்றார்.

மோடி
மோடி

புதிய உறுப்பினர் சேர்க்கையின்போது, ஒவ்வொரு பூத்திலும் ஐந்து மரக்கன்றுகளை நடவேண்டும் என பிரதமர் மோடி அன்புக் கட்டளை இட்டுள்ளாராம். இதற்காக, புதிய மரக்கன்றுகளைக் கொள்முதல் செய்யும் பணியிலும் தமிழக பி.ஜே.பி-யினர் மும்முரமாகியுள்ளனர்.