விவசாயிகளுக்குத் துரோகம் இழைத்ததாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லம் முன் இன்று பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பல கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், டெல்லியின் கிராமப்புறங்களிலிருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தின்போது பேசிய டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ராம்வீர் சிங் பிதூரி, ``ஆட்சிக்கு வருவதற்கு முன்பு முதல்வர் கெஜ்ரிவால் விவசாயிகளுக்குப் பல வாக்குறுதிகளை அளித்தார். ஆனால், அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளின் விளைநிலங்களில் குழாய்க் கிணறு அமைக்க விடாமல் கெஜ்ரிவால் அரசு தடுக்கிறது.

அதையும் மீறி எப்படியாவது குழாய்க் கிணறு அமைத்தால் மின் இணைப்பு வழங்கப்படுவதில்லை. விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. விவசாயிகளின் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகையை ஏக்கருக்கு ரூ.10 கோடியாக உயர்த்த வேண்டும்" எனப் பேசினார்.
அதைத் தொடர்ந்து அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டெல்லி பா.ஜ.க தலைவர் வினோத் செராவத், ``ஒருவகையில் விவசாயிகளை அரசு ஏமாற்றுகிறது. வணிக வாகனங்கள் பிரிவில் இருந்து டிராக்டர்களை நீக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அரசு இதுவரை அதைக் கண்டுகொள்ளவில்லை" என்றார்.
