Published:Updated:

குதிரை பேரம்தான் ஜனநாயகமா?

பிஜேபி
பிரீமியம் ஸ்டோரி
பிஜேபி

கோவா முதல் கர்நாடகா வரை...

குதிரை பேரம்தான் ஜனநாயகமா?

கோவா முதல் கர்நாடகா வரை...

Published:Updated:
பிஜேபி
பிரீமியம் ஸ்டோரி
பிஜேபி

ர்நாடகத்தில் முதல்வர் அரியணையை நெருங்கிக்கொண்டிருக்கிறார், எதிர்க்கட்சித்தலைவர் எடியூரப்பா. மாநில பாரதிய ஜனதா கட்சிக்கு அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் வரைக்கும் நகர்ந்துவிட்டார் அவர். பா.ஜ.க-வில் இரட்டைப் பொறுப்புகளை எவரும் வகிக்க முடியாது. அதன்படி, எடியூரப்பா முதலமைச்சர் ஆகிவிட்டால், அவர் வகித்து வரும் கட்சியின் மாநிலத்தலைவர் பதவி காலியாகிவிடும். அதனால், அந்தப் பதவிக்கு யாரை நியமிக்கலாம் என்று தீவிர ஆலோசனை நடந்துகொண்டிருக்கிறது. அநேகமாக, டி.எல்.ரவிக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று பேசிக் கொள்கிறார்கள்.

கடந்த வாரம், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் ராஜினாமாக் கடிதத்தை அளித்தார்கள். முதலமைச்சர் குமாரசாமி அப்போது வெளிநாட்டில் இருந்தார். விஷயம் காதை எட்டியதும் அடுத்த நாளே விமானம் பிடித்து பெங்களூரு வந்திறங்கினார். ஆனால், அதற்குள் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் மும்பைக்கு அனுப்பப்பட்டுவிட்டார்கள். அனுப்பியவர், எடியூரப்பாவின் உதவியாளர் சந்தோஷ்! அடுத்தென்ன?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குமாரசாமி மும்பை புறப்பட்டுச் சென்றார். அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்த முயன்றார். ‘அமைச்சர் பதவிதானே வேண்டும்? அளிக்கிறேன்’ என்று வாக்கு கொடுத்தார். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அமைச்சர்கள் ஆவதற்குத் தோதாக, மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த அத்தனை அமைச்சர்களையும் ராஜினாமாவும் செய்ய வைத்தார். ஆனாலும் பலனில்லை. பதவியாசையும் பணவெறியும் பதினெட்டுப் பேரையும் முழுவதுமாகவே ஆட்கொண்டிருந்தன. அதுவுமில்லாமல், எடியூரப்பா ஏற்படுத்தி வைத்திருந்த பாதுகாப்பு வளையமும் உடைக்க முடியாததாக இருந்தது.

குதிரை பேரம்தான் ஜனநாயகமா?

பிறகு, கர்நாடக காங்கிரஸின் காவலனாக அறியப்படும் டிகே சிவக்குமார் களத்தில் இறங்கினார். குமாரசாமியைப் போலவே அவரும் நேரடியாகவே மும்பை சென்றார். அங்கு, எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த ரெனாய்சன்ஸ் ஹோட்டலுக்கு வெளியே பல மணிநேரம் காத்துக் கிடந்தார். ‘இது நம் கட்சி. நாற்பது ஆண்டுகளாக நாம் எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம். இப்போது இப்படி நடுவில் விட்டுவிட்டு ஓடலாமா...’ என்று, அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு உருக்கமாகச் செய்தியும் அனுப்பினார். ஆனால், நாகராஜ் என்ற ஒரே ஒரு எம்.எல்.ஏ-வின் மனதை மட்டுமே அவரால் கரைக்க முடிந்தது. ஆனால், அதுவும் நிலைத்த பாடில்லை. அதாவது, அந்த நாகராஜையும் பேரம்பேசி வளைத்துவிட்டது எடியின் படை. கடந்த ஞாயிற்றுக்கிழமை, பெங்களூரிலிருந்து மும்பைக்கு மறுபடியும் விமானம் ஏறிவிட்டார் நாகராஜ். அழைத்துச் சென்றவரும் அதே சந்தோஷ்தான்!

கர்நாடகம் மட்டுமல்ல, மேற்குவங்கத்திலும் புறவாசல் அரசியலை ஆட ஆரம்பித்திருக்கிறார்கள்!

இனி, எடியூரப்பாவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவர் மிகவும் எதிர்பார்த்த ‘நம்பிக்கை வாக்கெடுப்பு’ இன்னும் சில தினங்களில் நடக்கப் போகிறது. கிட்டத்தட்ட தமிழகத்தில் எடப்பாடி போட்ட அதே கணக்குதான் கர்நாடகாவில் எடியூரப்பாவின் கணக்கும். கர்நாடகத்தில் மொத்த சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 224. இதில், ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு 118 எம்.எல்.ஏக்கள் இருந்தார்கள். அதாவது, பெரும்பான்மைக்குத் தேவையான 111 எனும் எண்ணிக்கையைவிட ஏழு பேர் அதிகம் இருந்தார்கள். ஆனால், இப்போது நிலைமை வேறுமாதிரி ஆகிவிட்டது. இரண்டு சுயேச்சை உறுப்பினர்கள் உட்பட, மொத்தம் 18 எம்.எல்.ஏக்கள் ராஜினாமாக் கடிதம் அளித்துவிட்டார்கள். இந்த ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுவிட்டால், சட்டசபையில் பெரும்பான்மை பலம் 100ஆகக் குறையும். அப்படி 100ஆகக் குறைந்தால், எடியூரப்பாவால் எளிதில் ஆட்சியமைத்துவிட முடியும். ஏற்கெனவே அவர் கட்சிக்கு 105 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

இப்போதைய சஸ்பென்ஸே, 18 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாக் கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்பாரா இல்லையா என்பதே. தனிப்பட்ட முறையில், ‘என்னால் ராஜினாமாவை ஏற்க முடியாது’ என்று அறிவித்துவிட்டார் ரமேஷ்குமார். ஆனால், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் அவரால் மீறமுடியாது. போதாக்குறைக்கு, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகியிருப்பவர், முகுல் ரோத்கி! தமிழ்நாட்டில் 18 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் தனபால் சார்பாக ஆஜரானார் அல்லவா, அதே முகுல் ரோத்கிதான். என்னவொன்று, தமிழ்நாட்டு வழக்குக்கு ‘சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது’ என்று வாதிட்டவர், கர்நாடகத்துக்கு மட்டும், ‘சபாநாயகர் நீதிமன்றம் சொல்வதைக் கேட்க வேண்டும்’ என்று வாதிட்டுக் கொண்டிருக்கிறார். ‘சட்டம் ஓர் இருட்டறை’ என்றால், மங்கி எரியும் சில விளக்குகளையும் ஊதி அணைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார் திறமையான வழக்கறிஞரான முகுல் ரோத்கி.

குமாரசாமி
குமாரசாமி

‘இதென்ன இழிவரசியல்’ என்று தோன்றுகிறது அல்லவா? இது இழிவரசியல்தான். இதை ஆரம்பித்து வைத்தது பா.ஜ.க அல்ல, காங்கிரஸ். இன்னும் நேரடியாகச் சொன்னால், இந்திரா! ஆந்திராவில், 1983 சட்டமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்று ஆட்சியமைத்திருந்தார் என்.டி.ராமாராவ். இந்திராவுக்கு ஆரம்பத்தில் இருந்தே என்.டி.ஆரின் வெற்றி கண்ணை உறுத்தியது. ஏனென்றால், என்.டி.ஆர் ‘ஆத்ம கௌரவம் (சுயமரியாதை)’ என்று முழங்கி ஆட்சிக்கு வந்திருந்தார். தெலுங்குதேசத்தை இன்னொரு தி.மு.க-வாகவே பார்த்தார் இந்திரா.

1984 ஆகஸ்ட் முதல் வாரத்தில், என்.டி.ஆர் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்திராவுக்கு வாய்த்தது நேரம்! அவருக்குள் ஆறு ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்த `சர்வாதிகார சந்திரமுகி’ வெளியே எட்டிப் பார்த்தார். என்.டி.ஆர் அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் இருந்த பாஸ்கர் ராவைப் பகடைக்காயாக உருட்டினார். சரியாக ஆகஸ்ட் 16-ம் தேதி, பாஸ்கர் ராவுக்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார், ஆளுநர் தாகூர் ராம் லால்.

இரவோடு இரவாக நடந்த இந்த ஜனநாயகப் படுகொலையை அப்போது இந்தியாவே எதிர்த்தது. ஆனால், இந்திரா எதற்கும் மசியவில்லை. `அவசரநிலை அளித்த தோல்வியிலிருந்து நீங்கள் கற்ற பாடம் இதுதானா?’ என்று கேட்டார்கள், அரசியல் அறிஞர்கள். ‘அதுதான் மக்கள் என்னை மீண்டும் தேர்ந்தெடுத்துவிட்டார்களே?’ என்று திருப்பிக் கேட்டார் இந்திரா.

ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் இந்தியா வந்தார் என்.டி.ஆர். ‘இந்தியாவின் ஜனநாயகத்தை அழிக்கிறார் இந்திரா’ என்று முழங்கி சைதன்ய ரதத்தைக் கிளப்பினார். செல்லும் வழியெங்கும் அவருக்கு அமோக ஆதரவு. அப்போது, இந்தியா முழுவதும் இந்திராவை 17 கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. `இப்படியா ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளுவது?’ என்று எதிர்க்குரல் எழுப்பின. அதில் முதல்வரிசையில் இருந்த முக்கியமான கட்சி எது தெரியுமா? பா.ஜ.க!

‘ஐயகோ... ஜனநாயகத்தை அழிக்கிறாரே இந்திரா, கேட்பார் இல்லையா...’ என்று, தினமும் நூறு கூட்டங்கள் நடத்தினார்கள். ஹைதராபாத் வைசிராய் ஹோட்டலில், என்.டி.ஆரின் எம்.எல்.ஏக்களைப் பாதுகாத்து வந்த சந்திரபாபுவுக்குத் துணையாக இருந்ததும் வேறு யாருமல்ல, இப்போதைய குடியசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுதான்.

குதிரை பேரம்தான் ஜனநாயகமா?

ஆனால், இன்றைக்கு அவர்களேதான் கர்நாடகத்திலும் கோவாவிலும் மணிப்பூரிலும் ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளி மண்ணள்ளிப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். வேடிக்கையாக இருக்கிறது அல்லவா! இதைவிட இன்னொரு பெரிய வேடிக்கையும் இருக்கிறது.

அதாவது, இந்திரா பகடைக்காயாகப் பயன்படுத்திய அந்த பாஸ்கர் ராவ், பின்னாளில் காங்கிரஸில் இணைந்தார். 1998 தேர்தலில் வெற்றிபெற்று மக்களவைக்கும்கூடச் சென்றார். இப்போது அந்த பாஸ்கர் ராவ் காங்கிரஸ் கட்சியில் இல்லை. அவர் இப்போது இருப்பது பா.ஜ.க-வில்! இந்த மாதம் ஆறாம் தேதி அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்துவிட்டார் பாஸ்கர் ராவ்.

ஆக, இந்திரா இந்திய ஜனநாயகத்தைத் துணியால் கழுத்தை நெரித்து சத்தமே இல்லாமல் கொன்றார் என்றால், அமித் ஷா கத்தியால் கழுத்தைக் கிழித்துக் கொடூரமாகக் கொல்கிறார்... இருவருக்கும் இடையே இருக்கும் ஒரே வித்தியாசம் இதுமட்டுமே. மற்றபடி, புறவாசல் அரசியலோ, குதிரைபேர சதித்திட்டங்களோ, அத்துமீறல்களோ, எதுவுமே மாறவில்லை! இன்னும் சொன்னால், இந்திரா காலத்தைவிட இப்போது இன்னும் `ஆர்கனைஸ்டு’ ஆக `ஆட்சிக்கவிழ்ப்பு அரசியலை’ மாற்றியிருக்கிறார் அமித் ஷா. எப்படியோ, ஐபிஎல் போல வெளிப்படையாக ஏலத்தொகை அறிவித்து எம்.எல்.ஏக்களை இழுக்காமல் இருக்கிறார்கள், அதுவரைக்கும் ஆறுதல்.

கர்நாடகம் மட்டுமல்ல, மேற்குவங்கத்திலும் புறவாசல் அரசியலை ஆட ஆரம்பித்திருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு மேற்குவங்க பா.ஜ.க-வின் முக்கியத்தலைவர் முகுல்ராய் ஒரு பேட்டி கொடுத்தார். ‘திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 107 எம்.எல்.ஏக்கள் எங்களுடன் இணைய இருக்கிறார்கள்’ என்று தெரிவித்தார். அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை. நாடாளுமன்றத் தேர்தலின்போதே, ‘உங்கள் கட்சியின் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்’ என்று, மம்தாவை அலறவிட்டார் பிரதமர் மோடி. இப்போது, அந்த 40 எனும் எண்ணிக்கை 107ஆக மாறியிருக்கிறது, அவ்வளவுதான்!

வடகிழக்கிலும் இதே கதைதான். மிரி , ராபா, முண்டா, பூட்டியா, சந்தால் போன்ற பழங்குடிக் குழுக்கள் அதிகம் வாழும் பூமி அது. வடகிழக்கில் அத்தனை மாநிலங்களுமே பாரதிய ஜனதா வசம்தான் இருக்கின்றன. எப்படி? இங்கேயும் அதே குதிரைபேர அரசியல்தான் அவர்களுக்கு உதவியது. அஸ்ஸாமில், ஹிமாந்தா சர்மாவை இழுத்து வந்தார்கள். அருணாசலப்பிரதேசத்தில், பீமே காந்துவை வளைத்தார்கள். மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சியையே காலி செய்தார்கள். மணிப்பூரில் நாகா கட்சியின் ஆட்களை விலைபேசி வாங்கினார்கள். மிசோராமில் மிசோ தேசிய முன்னணியை அதட்டி மிரட்டி, கூட்டணிக்குள் அழைத்து வந்தார்கள். இறுதியில், இலக்கை அடைந்தார்கள்.

ஒடிசாவும்கூடப் பழங்குடி பூமிதான். ஏதோ, நவீன் இருப்பதால் தப்பித்துக்கொண்டிருந்தது அந்த நிலம். இப்போது அதற்கும் வைத்தாகிவிட்டது வேட்டு. `ஒடிசாவுக்கு நவீன், டெல்லிக்கு மோடி’ என்று முழங்கினார்கள். அது அவர்களுக்கு நன்றாகவே கை கொடுத்தது. சட்டமன்றத் தேர்தலைவிட, நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு சதவிகிதத்தை எட்டினார்கள். அடுத்த பணி நவீனை அசைப்பதுதான். அதற்கு அவர்கள் எடுத்திருக்கும் துருப்புச்சீட்டு நவீனின் உடல்நிலை. ‘ஒரு அடி நடப்பதற்கே ஒரு நிமிடம் எடுத்துக்கொள்கிறார்’ என்று மனிதத்தன்மையே இல்லாமல் பேசிவருகிறார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்களை இழுக்கும் `ஆபரேஷன் லோட்டஸ்’ அரசியலும் அங்கே கனஜோராக நடக்கிறது. இதற்கும் தர்மேந்திர பிரதான்தான் தலைமை.

தெலங்கானாவும் அபாயத்திலேயே இருக்கிறது. அங்கு சமீபத்தில் கூட்டம் போட்ட ராம் மாதவ், ‘2024-ம் ஆண்டுத் தேர்தலுக்குள் இங்கே நம் கொடி பறக்க வேண்டும். ஆவன செய்யுங்கள்...’ என்று முழங்கியிருக்கிறார். இது ஏற்படுத்தப்போகும் விளைவை எண்ணி, இப்போதே நாளுக்கு நாலு மணிநேரம்தான் தூங்குகிறாராம் சந்திரசேகர் ராவ். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தெலங்கானாவில் 4 தொகுதிகளைக் கைப்பற்றியது பா.ஜ.க. வாக்கு சதவிகிதத்தையும் உயர்த்திக் காட்டினார்கள். அதுவும், நிஸாமாபாத் தொகுதியில் கேசிஆர் மகள் கவிதாவையே தோற்கடித்தார் பா.ஜ.க வேட்பாளர் அரவிந்த் தர்மபுரி. ஆக, சந்திரசேகர் ராவ் அச்சத்தில் நியாயம் இருக்கவே செய்கிறது. ஆந்திராவில் சொல்லவே வேண்டாம். சந்திரபாபு நாயுடுவை வலுவாகக் கட்டம் கட்டியிருக்கிறார்கள். அவரது கட்சியைச் சேர்ந்த 4 மாநிலங்களவை உறுப்பினர்கள், ஏற்கெனவே பா.ஜ.க-வுக்கு ஜாகை மாறிவிட்டார்கள். அடுத்தடுத்தும் விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருக்கின்றன.

‘பாரதிய ஜனதா கட்சி ஊழலற்ற கட்சி’ என்று ஒரு பிம்பம் இருக்கிறது. ஆனால் இந்தக் குதிரை பேரத்துக்குச் செலவழிக்கப்படும் கோடிக்கணக்கான பணம் ஊழல் இல்லாமல் என்ன? ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற முழக்கம் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாக ஏற்கெனவே விமர்சனங்கள் இருக்கும் நிலையில் தங்களுக்குப் பிடிக்காத கட்சிகளின் மாநில அரசுகளின் கதையை முடிக்கப் பார்ப்பது பா.ஜ.க மீதான அதிருப்தியை அதிகரிக்கத்தான் செய்யும்.

இதை ‘சாணக்கியத்தனம்’ என்று பா.ஜ.க மெச்சிக்கொள்ளலாம். ஆனால், இது சாணக்கியத்தனம் அல்ல; ஜனநாயகப் படுகொலை.