Published:Updated:

தேர்தல் முடிவுகள் தந்த புதுத்தெம்பு... ஒரே நாடு ஒரே தேர்தலை நோக்கி நகர்கிறதா பாஜக?

ஐந்து மாநிலத் தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து இந்தியா முழுமைக்கும் ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்ற பேச்சைத் தீவிரமாக்கியிருக்கிறது பாஜக. இதன் சாதக, பாதகங்கள் என்னென்ன, என்னென்ன பிரச்னைகள் வரும் என்ற விசாரணையில் இறங்கினோம்...

தேர்தல் முடிவுகள் தந்த புதுத்தெம்பு... ஒரே நாடு ஒரே தேர்தலை நோக்கி நகர்கிறதா பாஜக?

ஐந்து மாநிலத் தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து இந்தியா முழுமைக்கும் ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்ற பேச்சைத் தீவிரமாக்கியிருக்கிறது பாஜக. இதன் சாதக, பாதகங்கள் என்னென்ன, என்னென்ன பிரச்னைகள் வரும் என்ற விசாரணையில் இறங்கினோம்...

Published:Updated:

“ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நல்ல யோசனை. ஆனால், அதைச் செயல்படுத்த அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவர வேண்டும். தேர்தல் ஆணையம் அனைத்துத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்குத் தயாராகவே இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தவும் தயாராக இருக்கிறோம்.” இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது தற்போது இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையொட்டி பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை `2024 அல்லது 2026-ல் தமிழ்நாட்டிலும் பா.ஜ.க ஆட்சி அமையும்’ எனப் பேசியிருக்கிறார். அ.தி.மு.க தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடர்ந்து இந்தக் கருத்தைப் பேசிவருகிறார்கள். ஆனால், பா.ஜ.க அல்லாத எதிர்க்கட்சிகள் இந்த `ஒரே நாடு ஒரே தேர்தல்’ கருத்தாக்கம் குறித்துல் கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றன. “ஒரே நாடு ஒரே தேர்தல் வராது என்றும் அதற்கு வாய்ப்பில்லை” எனவும் பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கூறியிருக்கிறார். பா.ஜ.க ஆட்சி அமைத்தது முதல் ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே பத்திரப்பதிவு, ஒரே கல்வி முறை எனப் பல்வேறு வகையில் இந்தியா முழுமைக்கும் ஒரே திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துவருகிறது. பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியும்வருகிறது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியை ஒட்டி தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற விவகாரத்தைத் தீவிரமாக முன்னெடுத்துவருகிறது. பா.ஜ.க-வின் இந்தத் திட்டம் செயல் வடிவம் பெறுமா, பெறாதா என்ற விசாரணையில் இறங்கினோம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா... அதில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன?’ என தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டோம். “முதலில் ஐந்து மாநிலத் தேர்தலில் நான்கு மாநிலங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. அதற்கு எனது வாழ்த்துகள், ஆனாலும் கடந்த தேர்தலில் பெற்ற இடங்களைவிட, தற்போது குறைவான இடங்களையே பெற்றிருக்கிறார்கள் என்பதன் மூலம் அவர்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

ஜனநாயகத்தில் எதிரிகள் செய்யும் தவற்றால் பா.ஜ.க வெற்றிபெற்றிருக்கிறது. அதையொட்டி இவர்கள் பேசும் `ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது அரசியலமைப்புக்கே எதிரானது. அதற்கு வாய்ப்பில்லை. அரசியலமைப்பில் 324 முதல் 329 வரை உள்ள பிரிவு தேர்தலை எப்படி நடத்த வேண்டும் என்பதைத்தான் சொல்கிறது. ஜனநாயகத்தின் அடிப்படையே தேர்தல்தான். அதை மாற்ற வேண்டும் என்று பேசுவது ஜனநாயகத்தின் அடிமடியில் கைவைக்கும் திட்டமாகத்தான் தோன்றுகிறது. தேர்தலுக்கான செலவை ஒட்டித்தான் நாங்கள் இந்த ஒரே நாடு ஒரே தேர்தலை முன் மொழிகிறோம் என்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு தேர்தலின்போதும் அதன் செலவினங்களை மாநில அரசுகள்தான் ஏற்கின்றன. பாதுகாப்பு விவரங்களில் மட்டுமே ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உதவி செய்கின்றன. ஐந்தாண்டுக்கு ஒரு முறைதான் தேர்தல் என்றால் அதற்கு என்ன ஏற்பாடு செய்யப்போகிறார்கள் என்பதை விவாதிக்க வேண்டுமில்லையா? கடந்த ஐந்து தேர்தல்களிலும் நாடாளுமன்றத் தேர்தலின்போது நடந்த தேர்தலின்போது நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் மத்தியில் யாருக்கு வாக்களித்தார்களோ, மாநிலத்திலும் அவர்களுக்கே வாக்களிக்கப்பட்டுள்ளது என்கிறது உறுதிப்படுத்தப்பட்ட புள்ளிவிவரம்.

பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - திமுக
பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - திமுக

உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க முதல் இடம், அ.தி.மு.க இரண்டாம் இடம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், வெறும் ஐந்து சதவிகிதம் வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க மூன்றாம் இடம் பெற்றிருக்கிறது என்கிறார்கள். 11.5 சதவிகிதம் பெற்ற சுயேச்சைகளைப் பற்றி நாம் ஏன் பேசுவதில்லை. இதன் மூலம் மக்கள் உள்ளாட்சிக்கு யார், மாநிலத்துக்கு யார், ஒன்றியத்துக்கு யார் என்று சிந்திக்கும் வாய்ப்பு கொடுக்கிறேன். ஒரே தேர்தல் வைக்கும்போது இந்த வாய்ப்பு மக்களுக்கு மறுக்கப்படும்.” என்றவர்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“ஒரே நாடு ஒரே தேர்தலின்போது நாடாளுமன்றத்தில் யாருக்கும் பெரும்பான்மை இல்லையென்றால் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிடலாம். ஆனால், நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை என்ன செய்வது... அதையும் கலைத்துவிடலாமா... இது நியாயமாக இருக்குமா? நவம்பர் மாதம் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் இருந்தது. இப்போது வரை விலை ஏற்றம் இல்லவே இல்லை. அதற்கு முன் ஒரு நாள்கூட மக்களை நிம்மதியாக இருக்கவிடாமல் காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை எனச் சிரமத்துக்குள்ளாகிக்கொண்டிருந்தார்கள். இதற்குக் காரணம் தேர்தல்தான். ஆளும் ஒன்றிய அரசு இல்லாமல் மறைமுகமாகத் தேர்தல் நமக்கு உதவி செய்கிறது. 1991-ல் ஐந்து கட்டங்களாக நடந்தது தேர்தல். ராஜீவ் காந்தி மரணத்துக்கு முன்பு நடந்த மூன்று கட்டத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தது. இறப்புக்குப் பிறகு நடந்த இரண்டு தேர்தல்களில் நாடு முழுவதும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மிகப்பெரிய வெற்றியைச் சந்தித்தன. ஒரே தேர்தல் நடத்திய பிறகு தலைவருக்கு ஏதாவது ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அப்போது மீதமிருக்கும் ஆட்சிக்காலத்தை என்ன செய்வீர்கள், தலைவர்களுக்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு அதிகம். இடையில் ஆட்சி கவிழ்ந்தால் மீதமிருக்கும் நாள்களுக்கு என்ன நடக்கும்? 67-க்கு முன்பு நாட்டில் ஒரே கட்சிதான் இருந்தது. 1967-க்குப் பிறகு தி.மு.க மிகப்பெரிய வெற்றியைப் பெறுகிறது. இதன் பிறகுதான் மாநிலம், ஒன்றியம் என்ற அரசியல் விழிப்புணர்வு ஏற்படுகிறது. காங்கிரஸ், பா.ஜ.க., ஜனதா உள்ளிட்ட கட்சிகள் ஒன்றியத்தில் ஆட்சியிலிருந்தபோது மாநிலத்தில் அவர்களுக்கு எதிராக இருந்த கட்சிகளின் ஆட்சியைக் கலைத்தார்கள்.

மோடி, ஜே.பி.நட்டா, அமித் ஷா
மோடி, ஜே.பி.நட்டா, அமித் ஷா

அரச உரிமை, நிர்வாகம் சார்ந்த அரசு உரிமை ஆகிய இரண்டும் ஒருவருக்கு இருக்க வேண்டும். அமெரிக்க அதிபருக்கு இந்த இரண்டும் இருக்கிறது. அதே இங்கிலாந்தில் ராணிக்கு ஓர் அதிகாரம், பிரதமருக்கு ஓர் அதிகாரம் இருக்கும். இந்தியாவிலும் இதேபோலத்தான். ஒரே நாடு ஒரே தேர்தல் வந்த பிறகு இரட்டைத் தலைமை எதற்கு, இந்தியா முழுமைக்கும் ஒரே தலைமை போதும், ஒரே கட்சி போதும் என்ற இடத்துக்குச் செல்வார்கள். அதுதான் அவர்களின் நோக்கம்” என விளக்கினார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது 1952 முதல் 1980-களின் இறுதி வரை இந்தியாவின் நடைமுறையாக இருந்தது. காங்கிரஸ் அரசின் தவறான நடைமுறைகளால், சில மாநிலங்களின் அரசுகள் இடையிலேயே கலைக்கப்படும் சூழல் உருவானதால் இந்த நடைமுறையில் சிக்கல்கள் எழுந்தன. ஒரு மாநிலத்துக்கே பலகட்டத் தேர்தல் நடத்துகிறார்கள். இந்தியா முழுமைக்கும் இது சாத்தியமா என்கிறார்கள். அதற்கான நடவடிக்கைகள் மற்றும் சட்டத் திருத்தத்துக்கான ஆலோசனையில்தான் மத்திய அரசு இருக்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் செயல்படுத்தப்படும்போது அதில் எந்த நெருடலும் இல்லாமல் நிச்சயம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. திட்டமிட்டரீதியில் இந்த விவகாரத்தில் தேவையில்லாத சிக்கல்களை உருவாக்குகிறார்கள். இது நல்லதல்ல. ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும் ஒரு தேர்தல் என நடக்கும்போது நேரம், பணம் விரயமாவதோடு, கட்டமைப்பு சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்துவதில் கடும் நெருக்கடிகள் உருவாகின்றன. திட்டமிட்ட நேரத்தில் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த முடிவில்லை. இயற்கைப் பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு உரிய உதவிகளைச் செய்ய முடியவில்லை. பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாகிறது.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தேர்தல் வரும்போது ஆளுங்கட்சியினர் சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் நிர்வாகத்தில் சிக்கல் ஏற்படுகிறது. இவற்றையெல்லாம் சரிசெய்யத்தான் ஒரே நாடு ஒரே தேர்தலையே மத்திய அரசு முன்மொழிகிறது.

நாடாளுமன்றத்தில் முறையாகச் சட்டம் இயற்றிய பின்னர்தான் இதைச் செயல்படுத்த முடியும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆட்சி கலைந்துவிடுகிறது என்றால் அடுத்த தேர்தல் வரும் வரை அந்த அரசின் ஆயுள்காலம் என்ன, அதை எப்படிச் செய்வது என்பதற்கு அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். செலவுகள் என்பதும் நிதி என்பதும் மத்திய அரசு, மாநில அரசு எனப் பிரிக்கவேண்டியதில்லை. நாடாளுமன்ற நிலைக்குழு, சட்ட ஆணையம் விளக்கம் அளித்திருக்கிறது. பிரச்னை என்னவென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் மாநிலக் கட்சிகளுக்குப் பிரச்னை வரும் என்கிறார்கள். ஆனால், அப்படி இல்லை. நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து மக்கள் தெளிவான முடிவில் இருக்கிறார்கள். பா.ஜ.க தேசியக் கட்சியாக, ஆளுங்கட்சியாக இருக்கும்போது எதிர்க்கட்சியாக காங்கிரஸ்தானே வந்திருக்க வேண்டும். ஆனால், மாநிலக் கட்சிகள்தானே அதிகமாக இருக்கின்றன. பிரச்னை மக்களிடம் இல்லை, அரசியல்வாதிகளிடம்தான் இருக்கிறது. அதிகாரக் குவிப்பு என்பதற்கும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும் என்றுதான் நாம் சொல்கிறோம்.

ராகுல், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள்
ராகுல், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள்

ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதால் பா.ஜ.க மட்டும்தான் வரும் என்பதை எதைவைத்துச் சொல்கிறார்கள்? அவர்கள்மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றுதானே இதற்குப் பொருள். நமது தேர்தல் அமைப்பே நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு ஒரே மாதிரியான தேர்தல். காங்கிரஸின் நிர்வாகமின்மையால் அது சிதைந்துவிட்டது. நாங்கள் சரிசெய்ய முயல்கிறோம்” என விளக்கமளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism