Published:Updated:

நுஸ்ரத் ஜஹான்: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி திருமண விவகாரம்! - சர்ச்சையைக் கிளப்பும் பா.ஜ.க

நுஸ்ரத் ஜஹான்
நுஸ்ரத் ஜஹான்

கடந்த சில மாதங்களாக நிகில் ஜெயினுடனான கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரைப் பிரிந்து வாழ்ந்துவரும் நுஸ்ரத் ஜஹான் தற்போது, அவரை பிரிந்துவிட்டதாகவும், தங்கள் திருமணம் முறைப்படி பதிவுசெய்யப்பட்டு நடந்த திருமணம் இல்லையென்றும் கூறியிருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பசீர்ஹட் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் நுஸ்ரத் ஜஹான் (31). திரைப்பட நடிகையான இவர் 2019-ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து முழு நேர அரசியலில் இறங்கினார். அதே வருடம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கட்சித் தலைமை பசீர்ஹட் தொகுதியில் நுஸ்ரத் ஜஹானை வேட்பாளராகக் களமிறக்கியது. அவரும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரைத் தோற்கடித்து, நாடாளுமன்ற உறுப்பினரானார்.

தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன்பாக நடிகை நுஸ்ரத் ஜஹான், துருக்கியில் தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். துருக்கியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் யாருமின்றி மிகவும் எளிமையான முறையில் நிகில் ஜெயினை கரம் பிடித்த நுஸ்ரத் ஜஹான், மேற்கு வங்கம் திரும்பி, தேர்தலில் வெற்றிபெற்றதும் கொல்கத்தாவில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனது திருமண வரவேற்பை பிரமாண்டமாக நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

நுஸ்ரத் ஜஹான் -  நிகில் ஜெயின்
நுஸ்ரத் ஜஹான் - நிகில் ஜெயின்

இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக, கணவர் நிகில் ஜெயினுடனான கருத்து வேறுபாட்டின் காரணமாக நுஸ்ரத் ஜஹான் அவரைப் பிரிந்து வாழ்ந்துவருகிறார். தற்போது, தன் கணவரைப் பிரிந்துவிட்டதாகவும், தங்கள் திருமணம் முறைப்படி பதிவுசெய்யப்பட்டு நடந்த திருமணம் இல்லையென்றும் நுஸ்ரத் ஜஹான் கூறியிருக்கிறார்.

இது குறித்து விளக்கமளித்துள்ள நுஸ்ரத் ஜஹான், "இந்திய நாட்டின் சட்டப்படி பார்க்கையில் எங்களுக்கு நடந்தது திருமணமே இல்லை. நாங்கள் வெளிநாட்டில்தான் திருமணம் செய்துகொண்டோம். இந்தியத் திருமண சட்டப்படி நாங்கள் பதிவுசெய்யப்பட்ட கணவன், மனைவி இல்லை. அடிப்படைப் புரிதலின் பேரில்தான் திருமணம் செய்துகொண்டோம்.

தற்போது இருவருக்கும் ஒத்து வராததால் பிரிகிறோம். சொல்லப்போனால், நிகில் ஜெயின் என்னுடைய நகைகள் மற்றும் சொத்துகள் சிலவற்றைச் சட்டவிரோதமாக எனக்கே தெரியாமல் என்னிடமிருந்து அபகரித்துவிட்டார். என்னுடைய சொத்து மற்றும் நகை விவகாரம் தொடர்பாக யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடம் பேசிக்கொள்கிறேன். அதைச் சட்டபூர்வமாக அணுகுவேன். இனியும் என்னுடைய சொந்த விவகாரங்கள் குறித்து விவாதிப்பது சரியல்ல" என்று கூறினார்.

நுஸ்ரத் ஜஹானின் விவாகரத்து அவருடைய தனிப்பட்ட முடிவு என்றாலும், பாஜக-வினர் இது குறித்து கேள்வி எழுப்பி சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றனர். நுஸ்ரத் ஜஹான் 2019 தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றபோது, 'நுஸ்ரத் ஜஹான் நிகில் ஜெயின் ஆகிய நான் லோக் சபாவின் உறுப்பினராகப் பதவியேற்றுக்கொள்கிறேன்' என்று கூறி பதவியேற்றார்.

நுஸ்ரத் ஜஹான் நாடாளுமன்றத்தில் பதவியேற்கும் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக-வின் ஐடி விங் தலைவர் அமித் மல்வியா, "நுஸ்ரத் ஜஹானின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச விரும்பவில்லை. ஆனால், நாடாளுமன்றத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட அரசாங்கப் பிரதிநிதியான அவர் நா,டாளுமன்றத்தில் தான் திருமணமானவர் என்றும், கணவர் பெயர் நிகில் ஜெயின் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தற்போது தான் முறையாகத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்கிறார். அப்படியென்றால் அவர் நாடாளுமன்ற அவையில் சொன்னது பொய்யா..?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அமித் மல்வியா - பாஜக
அமித் மல்வியா - பாஜக

மறுமுனையில் நுஸ்ரத் ஜஹானின் குற்றச்சாட்டுக்கு ஊடகங்கள் வாயிலாக பதிலளித்துள்ள நிகில் ஜெயின், "நாங்கள் இருவரும் காதலித்துவந்தோம். நான் அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினேன். அதை ஜஹானிடம் சொன்னேன். அவரும் சம்மதித்ததால் இருவரும் துருக்கியில் முறைப்படி திருமணம் செய்துகொண்டோம். இந்தியா திரும்பியும் நாங்கள் கணவன், மனைவியாகத்தான் வாழ்ந்துவந்தோம். ஜஹானை நான் மிகவும் நேசித்தேன். உண்மையாக இருந்தேன். அது என் குடும்பத்தினருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், 2020-ல் திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்காகச் சென்ற ஜஹான், வீடு திரும்பியதிலிருந்தே என்னை வெறுக்க ஆரம்பித்தார். தேவையில்லாமல் சண்டையிட்டு வாதம் செய்தார். பின்னர் வீட்டைவிட்டு வெளியேறினார். என் மேல் எந்தத் தவறும் இல்லை" என்றார்.

நிகில் ஜெயினின் பதிலடியும், எதிர்க்கட்சியினரின் அழுத்தமும் அதிகரித்துவருவதால் திரிணாமுல் காங்கிரஸ் தலைமை நுஸ்ரத் ஜஹான் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறதாம்.

அடுத்த கட்டுரைக்கு