Published:Updated:

பா.ஜ.க மிகப்பெரிய கட்சி...எங்களோடு அ.தி.மு.க-வை ஒப்பிட்டுப் பேசாதீர்கள்! - கரு.நாகராஜன் காட்டம்

எதிர்க்கட்சியினர் அப்படித்தான் சொல்வார்கள். சட்டத்தை நடைமுறைப்படுத்தினால், எதிர்ப்பார்கள்.

பிரீமியம் ஸ்டோரி

‘தி.மு.க-வுக்கு எதிர்க்கட்சி நாங்கள்தான்’ என்று மழை வெள்ளத்தில் படகு ஓட்டியும், கட்சிக் கூட்டத்தில் தம் கட்டிப் பேசியும் ‘கெத்து’ காட்டுகின்றனர் தமிழக பா.ஜ.க தலைவர்கள். ஆனால், பா.ஜ.க-வினரின் அத்தனை முயற்சிகளும் ‘மீம்ஸ்’களாக உருமாறி டிரெண்டிங் ஆகிவிடுவதுதான் ஆகப்பெரும் சோகமாகத் தொடர்கிறது. தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, ‘பெட்ரோல் விலைக் குறைப்பு, வேளாண் சட்டம் வாபஸ்’ என அடுத்தடுத்து மத்திய பா.ஜ.க அரசு இறங்கிவரும் சூழலில், தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜனை நேரில் சந்தித்தோம்...

“மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களைப் படகில் சென்று பார்த்த தமிழக பா.ஜ.க தலைவர்களைக் கிண்டல் செய்கிறார்களே?’’

“இன்றைக்குச் சமூக ஊடகம் என்றாலே கேலி, கிண்டல் என்றாகிவிட்டது. இதற்காகவே ஒவ்வொரு கட்சியினரும் கூலிக்கு ஆள் அமர்த்தி வைத்துக்கொண்டு இந்த வேலைகளைச் செய்துவருகிறார்கள்.அவர்கள் கிண்டல் செய்வதுபோல், முழங்கால் அளவு தண்ணீர்கூட இல்லாத இடத்தில் நாங்கள் படகு ஓட்டவில்லை. முதல்வர் தொகுதியில் ஆழமாகத் தேங்கியிருந்த மழைநீரில்தான் படகில் சென்றோம். நாங்கள் ஒன்றும் தி.மு.க தலைவர்போல், மேக்கப் போட்டுக்கொண்டு, பச்சைத்துண்டு போட்டு ஷூட்டிங் நடத்தவில்லை!’’

“ ‘வேளாண் சட்டத்தில் ஒரு கமாகூட திருத்தம் செய்ய மாட்டோம்’ என்று தமிழக பா.ஜ.க சவால்விட்டிருந்த நிலையில், மத்திய பா.ஜ.க அரசு இப்படி தடாலடியாகச் சட்டங்களை வாபஸ் வாங்கிவிட்டதே?’’

“மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுமே அற்புதமானவை. ஆனால், நாட்டிலுள்ள ஒரு பகுதி விவசாய மக்கள் அந்தச் சட்டங்களைப் பற்றி சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. எனவே, தேசத்தின் நன்மைக்காகவே சட்டங்களை வாபஸ் பெற்றிருக்கிறது மத்திய அரசு.’’

“ஆனால், எதிர்வரும் மாநிலத் தேர்தல்களின் வெற்றியைக் கணக்கில்கொண்டே ‘வாபஸ்’ முடிவை பா.ஜ.க எடுத்திருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் சொல்கின்றனவே?’’

“எதிர்க்கட்சியினர் அப்படித்தான் சொல்வார்கள். சட்டத்தை நடைமுறைப்படுத்தினால், எதிர்ப்பார்கள். வாபஸ் பெற்றாலும் குறை சொல்வார்கள். வரப்போகிற மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், ‘இனி மத்திய அரசுக்கு எதிராக எதைவைத்துச் சண்டைபோடப்போகிறோம், வெளிநடப்பு செய்யப்போகிறோம்’ என்றெல்லாம் தெரியாததால், இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.’’

“பாதாம், பிஸ்தா சாப்பிட்டுக்கொண்டு போராடுகிறார்கள் என்றெல்லாம் விவசாயிகள் போராட்டத்தைக் கிண்டல் செய்துவந்த பா.ஜ.க., இன்று அதே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுவிட்டதே?’’

“சாதாரணமாக ஒரு விவசாயி, எந்த அளவு கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பார் என்பதெல்லாம் நமக்குத் தெரியும். ஆனால், போராட்டக்களத்தில் மெஷின் வைத்து மசாஜ் செய்து கொண்டிருந்தவர்களையெல்லாம் பார்த்தோம். அதைத்தான் கடந்தகாலத்தில் விமர்சித்தோம். அவ்வளவுதான்.’’

“போராட்டக்களத்தில் சாலையெங்கும் ஆணியடித்ததையும், விவசாயிகளை அடித்து விரட்டியதையும்கூட கடந்தகாலத்தில் பார்த்தோம்தானே?’’

“இந்த பாதிப்புகளெல்லாம் யாரால் ஏற்படுத்தப்பட்டன என்பது எல்லோருக்குமே தெரியும். இதற்குமேல் இந்தப் பிரச்னை குறித்து நான் பேச விரும்பவில்லை!’’

பா.ஜ.க மிகப்பெரிய கட்சி...எங்களோடு அ.தி.மு.க-வை ஒப்பிட்டுப் பேசாதீர்கள்! - கரு.நாகராஜன் காட்டம்

“ ‘இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுகிறது. வரவிருக்கும் தேர்தல் வெற்றியைக் கணக்கில்கொண்டு வேளாண் சட்டம் வாபஸ் பெறப்படுகிறது. ஆக, மத்திய அரசுக்கு மக்களைப் பற்றிக் கவலை இல்லை. தேர்தல் வெற்றி ஒன்றே குறி’ என ப.சிதம்பரம் சொல்வது நியாயமானதுதானே?’’

“ப.சிதம்பரம் என்றைக்குமே பொய் மட்டுமே பேசக்கூடிய தமிழகத் தலைவர். எப்படியாவது நாட்டு மக்களைக் கடனுக்குள்ளாக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி செயல்பட்டதால்தான், இன்றைக்கு நீங்களும் நானுமே பெட்ரோல் பாண்ட் கடனைக் கட்டிக்கொண்டிருக்கிறோம். எனவே, பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பைப் பற்றி ப.சிதம்பரம் பேசுவதே தப்பு. மத்திய அரசு, பெட்ரோல் விலையைக் குறைத்துவிட்டது. இந்தச் சூழலில், ‘தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல், மாநில அரசும் வாட் வரியைக் குறைத்து, பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும்’ என்று ப.சிதம்பரம், தமிழக அரசைத்தானே கேட்க வேண்டும்?’’

“ஆனால், ‘பெட்ரோலுக்கான வரியை உயர்த்திய முட்டாள்தான் அதைக் குறைக்கவும் வேண்டும்’ என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மத்திய பா.ஜ.க அரசைக் காட்டமாக விமர்சித்திருக்கிறாரே?’’

“யார் முட்டாள் என்ற வாதத்துக்குள் போக நான் விரும்பவில்லை. அவர் ஏதோ பதற்றத்தில் அப்படிப் பேசியிருக்கிறார். ஆனால், அவர் முதல்வராக இருக்கும் தெலங்கானா இடைத்தேர்தலில்தான் பா.ஜ.க மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.’’

“தமிழகத்தில், ‘அ.தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளி பா.ஜ.க முன்னேறுவதாக மக்கள் கருதுகிறார்கள்’ என்று அண்ணாமலை எப்படிச் சொல்கிறார்?’’

“அவர் அப்படிச் சொல்லவேயில்லை. அப்படிச் சொன்னதாக நான் எங்கும் படிக்கவும் இல்லை. அதேசமயம், தமிழக மக்களுக்கான பிரச்னைகளைக் கையிலெடுத்துச் செயல்படுவதில், பா.ஜ.க முன்னேறுகிறது. மேகதாது அணையைக் கட்டக் கூடாது என்று முதலில் போராட்டம் நடத்தியது பா.ஜ.க. அதேபோல், முல்லைப்பெரியாறு போராட்டத்தையும் அ.தி.மு.க-வுக்கு முன்பே நடத்தியது பா.ஜ.க-தான். மற்றபடி அ.தி.மு.க முன்னேறுகிறதா, பின்னேறுகிறதா என்பதெல்லாம் அந்தக் கட்சியினுடைய வேலை. பா.ஜ.க என்பது தேசிய அளவிலான மிகப்பெரிய கட்சி. எனவே, நாங்களும் அ.தி.மு.க-வும் ஒன்றல்ல. எங்களோடு அ.தி.மு.க-வை ஒப்பிட்டுப் பேசாதீர்கள்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு