அ.தி.மு.க., பா.ஜ.க பிரிவு, தி.மு.க-வுக்கு சாதகமாக இருக்கலாம்! - கரு.நாகராஜன் கருத்து

சி.வி.சண்முகம் தோல்விக்கு ‘பா.ஜக-தான் காரணம்’ என அவர் சொல்வதை, அவருடைய தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
‘உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறோம். ஆனாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க தொடர்ந்து பயணிக்கிறது’ என்று கூட்டணி முறிவு குறித்து பா.ஜ.க அளித்திருக்கும் புது விளக்கம்... ‘மாப்பிள்ளை அவர்தான்... ஆனா, போட்டுருக்கிற சட்டை என்னுடையது’ என்ற காமெடி டயலாக்கைத்தான் நினைவுபடுத்துகிறது. இந்த நிலையில், தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜனிடம் பேசினோம்...
“கூட்டணிப் பிரிவுக்கு நயினார் நாகேந்திரன் விமர்சனம்தான் காரணமா... அல்லது ‘பா.ஜ.க தேவையில்லை’ என்று அ.தி.மு.க முன்னரே முடிவெடுத்துவிட்டதா?’’
“இந்த இரண்டு கேள்வியுமே உண்மையில்லை. நயினார் நாகேந்திரன் அன்றைக்குத் தன் மனதில் உள்ள கருத்தை யதார்த்தமாகக் கூட்டத்தில் பேசிவிட்டார். இது திட்டமிட்ட செயல் அல்ல. தவற்றை உணர்ந்த பிறகு, ‘என்னுடைய வார்த்தைகளை வாபஸ் பெறுகிறேன்’ என நயினாரும் கூறிவிட்டார். தமிழக பா.ஜ.க தலைவரும்கூட இந்த விஷயத்துக்காக வருத்தம் தெரிவித்துவிட்டார். அ.தி.மு.க-வும் அந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டுவிட்டது. ‘கூட்டணியில் பா.ஜ.க வேண்டாம்’ என அ.தி.மு.க முன்னரே முடிவெடுத்திருந்தால், எங்கள் கட்சித் தலைவர்களோடு அ.தி.முக தலைவர்கள் நான்கு மணி நேரம் ஏன் பேசியிருக்கப்போகிறார்கள்? எங்கள் கட்சிக்குத் தேவையான முக்கிய இடங்களை நாங்கள் கேட்டோம். ஆனால், அதை அவர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. எனவே தனித்துப் போட்டியிட முடிவெடுத்துவிட்டோம். அவ்வளவுதான்!’’
“பா.ஜ.க-வுடனான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே, அ.தி.மு.க தரப்பிலிருந்து முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்டதே..?’’
“பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே அறிவிக்கப்படவில்லை. முதல்நாள் பேச்சுவார்த்தை முடிந்து, மறுநாள் என்ன முடிவு வரும் என்று இரு தரப்பிலுமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, கடலூர், விழுப்புரம், தருமபுரி மாவட்டங்களுக்கான அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டார்கள். அது அவர்களது பொறுமையின்மையைத்தான் காட்டுகிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் வருகிறது, தொடர்ந்து கூட்டணியில் இருப்பதால் எல்லா இடங்களுக்கும் தாமரைச் சின்னம் போய்ச் சேரவில்லை என்ற காரணத்தாலும் தமிழக பா.ஜ.க தனித்துப் போட்டி முடிவை எடுத்திருக்கிறது.’’
“கடந்த முறை கூட்டணியில் இருந்தபோதே ‘ஒத்த ஓட்டு பா.ஜ.க’ என டிரெண்டிங் ஆனது என்கிறபோது, ‘தனித்துப் போட்டி’ என்பது விஷப்பரீட்சை அல்லவா?’’
“இல்லையில்லை... சம்பந்தமே இல்லாமல், வேறோர் இடத்தில் போய் போட்டியிட்டதோடு, அங்கேயும் வெறுமனே நோட்டீஸ் மட்டும் அச்சடித்து எந்தவொரு பிரசாரமும் செய்யாமல் விட்டுவிட்டதால், நடந்துபோன விபத்தைத்தான் அன்றைக்கு எதிர்க்கட்சியினர் டிரெண்ட் செய்துவிட்டார்கள். ஆனால், இப்போது நடைபெறவிருக்கிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என்பது, மக்களைச் சார்ந்து நடைபெறுகிற விளையாட்டுப் போட்டி மாதிரி. இப்போதைய ‘தனித்துப் போட்டி’ முடிவென்பது, எங்களது நம்பிக்கையையும், பலத்தையும், எதிர்காலச் சிந்தனையையும்தான் வெளிக்காட்டுகிறது’. அந்த வகையில், வளர்ந்துவருகிற எங்கள் கட்சிக்கு இந்த உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் பயன்படும்.’’
“கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே பிரதமர் மோடியின் பெயர், படம் தவிர்க்கப்பட்டது, தேர்தல் தோல்விக்கும்கூட ‘பா.ஜ.க-தான் காரணம்’ என சி.வி.சண்முகம் நேரடியாகக் குற்றம்சாட்டியிருந்தார்தானே?’’
“சி.வி.சண்முகம் தோல்விக்கு ‘பா.ஜக-தான் காரணம்’ என அவர் சொல்வதை, அவருடைய தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வன்னியர் சமுதாயத்துக்கென்று 10 சதவிகித உள் இட ஒதுக்கீட்டைச் செய்துகொடுத்திருந்த நிலையிலும்கூட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் சி.வி.சண்முகம், தோல்வி அடைகிறார் என்றால்... தோல்விக்குப் பொறுப்பேற்று அவர்தான் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.அதனால்தான், ‘சி.வி.சண்முகத்தின் பேச்சு, அவரது தனிப்பட்ட கருத்து’ என்று அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஜெயக்குமாரும் அன்றைக்கே சொல்லிவிட்டார்.’’
“அதே ஜெயக்குமார், ‘பா.ஜ.க வெளியேறியதால், அ.தி.மு.க-வுக்குப் பாதகம் இல்லை, சிங்கம் சிங்கிளா வரும்’ என்றும் சொல்லியிருக்கிறாரே?’’
(சிரிக்கிறார்.) “சொல்லட்டும்... பேட்டி கொடுப்பதற்கென்றே தமிழ்நாட்டில் இருக்கின்ற சிறப்பான தலைவர் ஜெயக்குமார். ‘பா.ஜ.க வெளியேறிவிட்டதே...’ என்று முக்காடு போட்டு அவர்கள் அழுதுகொண்டிருக்க முடியாதே... ‘வெற்றியை நோக்கிப் பயணிக்கிறோம்’ என்று எங்களுக்கு இருக்கிற நம்பிக்கையைப்போல், அவர்களும் அவர்களுக்கு இருக்கிற நம்பிக்கையைச் சொல்கிறார்கள்.’’
“அ.தி.மு.க - பா.ஜ.க பிரிவு என்பது தி.மு.க கூட்டணிக்குச் சாதகம்தானே?’’
“சாதகமாக இருக்கலாம்... பா.ஜ.க வேட்பாளர் மூவாயிரம் வாக்குகள் பெற்ற ஓரிடத்தில் தி.மு.க வேட்பாளர் வெறும் ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுகிறார் என்றால், ‘பா.ஜ.க வெளியேறியதால், அ.தி.மு.க தோற்றுவிட்டது’ என்ற பேச்சுகள் தேர்தலுக்குப் பிறகு வரத்தான் செய்யும். தி.மு.க-வுக்குச் சாதகம் என்று சொல்கிற அதேநேரம், தி.மு.க-வுக்கு எதிரான குரல் என்பது ஒரு முனையிலிருந்து வராமல், இரு முனையிலிருந்து வரப்போகிறது என்பதும் உண்மை. இதன் மூலம் தி.மு.க-வின் அராஜகப் போக்கை மக்களிடையே இரு கட்சிகளும் எடுத்துச் செல்லும்.’’
“மத்திய அரசின் பட்ஜெட்டில், ‘வைரத்துக்கு வரிச்சலுகை, குடைக்கு வரிவிதிப்பு’ எனும்போது, இது யாருக்கான பட்ஜெட் என்பது தெரிந்துவிடுகிறதுதானே?’’
“பொருளாதாரம் என்பது பணம் சுற்றும் முறை. வைரத்துக்கு வரிச்சலுகை அளிப்பதால், பணம் படைத்தவர்கள் தங்கள் பணத்தை வைரத்துக்காகச் செலவழிப்பார்கள். ஆக, அந்தப் பணம் கடை, வங்கி மூலமாக அரசுக்குத்தான் வரப்போகிறது. அந்தப் பணத்தின் மூலம் மக்களுக்கான நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தப்போகிறது. அடுத்தது, இறக்குமதியாகும் குடைகளுக்குத்தான் வரி விதிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதனால், நம் நாட்டிலேயே குடைத் தயாரிப்பு அதிகரிக்கும் சூழல்தான் ஏற்படும்!’’