Published:Updated:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: `தனித்துப் போட்டியிட பாஜக தயாரா?!' - என்ன சொல்கிறார் கரு.நாகராஜன்?

``திருமாவளவனுக்கு பா.ஜ.க-வைப் பற்றிப் பேசாவிட்டால் தூக்கம் வராது" என்கிறார் கரு.நாகராஜன்.

கோயில்களைத் திறக்கச்சொல்லிப் போராட்டம் நடத்திவந்த தமிழக பா.ஜ.க., அண்மைக்காலமாக 'மழை நிவாரணத்தை அதிகரிப்பதற்காகப் போராட்டம், பெட்ரோல் விலையைக் குறைக்கச்சொல்லி போராட்டம்' என மக்கள் பிரச்னைகள் பக்கம் கவனம் செலுத்திவருகிறது. இந்தச் சூழ்நிலையில், தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜனை நேரில் சந்தித்து நம் கேள்விகள் அனைத்தையும் முன்வைத்தோம்...

``வெள்ள நிவாரணப் பணிகளில் முழுமூச்சாக இறங்கியிருக்கும் தி.மு.க அரசை விமர்சிப்பது ஏன்?''

``பருவமழையின்போது, வெள்ளநீரை வெளியேற்ற முறையான வடிகால் வசதிகளை செய்து முடிக்காமல், கோட்டைவிட்டுவிட்டது தி.மு.க அரசு. அதனால்தான், முதல்வர் வீட்டுத் தெருவிலேயேகூட மழை வெள்ளம் பெருகி நின்றது. ஆனால், முதல்வரோ தொப்பியும் ஷூவும் மாட்டிக்கொண்டு, வெள்ளநீரைப் பார்வையிடுவதாக போஸ் கொடுக்கிறாரே தவிர, மழைநீரை வெளியேற்றுவதற்கு முன்னெச்சரிக்கையாக எந்தப் பணியையும் செய்யவில்லை. அதனால்தான் சிங்காரச் சென்னை இந்த நிலையில் இருக்கிறது.''

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

``கடந்த 10 வருடங்களாக ஆட்சிப் பொறுப்பில் இருந்துவந்த அ.தி.மு.க-வை இது குறித்துக் கேள்வி கேட்காமல், கொரோனா உச்சத்தின்போது ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க-வைக் கேள்வி கேட்பது நியாயம்தானா?''

``கொரோனாவை இந்தியா முழுக்கவே மத்திய அரசு கட்டுப்படுத்திவிட்டது. ஆனால், தடுப்பூசிகளுக்காக வெளிநாடுகளுக்கு டெண்டர் கொடுத்தது தமிழ்நாடு அரசுதான். அந்த டெண்டர் என்ன ஆனது?

10 வருடங்களாக அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பிலிருந்தது என்றால், அதற்கு முன்பு ஆட்சிப் பொறுப்பிலிருந்த தி.மு.க அரசு என்ன செய்தது? சென்னை மேயராகவே பதவி வகித்த மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் போன்று சிங்காரச் சென்னையை மாற்றுவேன் என்று சொன்னார்தானே?

ஆறு மாதங்களில் மழைக்காலம் வரும். அப்போது மழைத் தண்ணீர் தேங்காமல் வடிந்து செல்ல என்ன செய்ய வேண்டும் என்று தி.மு.க அரசு முன்கூட்டியே யோசித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா?''

``விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்கிய மத்திய பா.ஜ.க அரசின் ஜனநாயக விரோதப் போக்கை கனடா உள்ளிட்ட வெளிநாடுகளே கண்டித்தன. அப்போதெல்லாம் சட்டத்தை வாபஸ் பெறாத பா.ஜ.க., தற்போது தேர்தல் வெற்றி, தோல்வியை மனதில்வைத்து வாபஸ் பெற்றுவிட்டதாக எதிர்க்கட்சிகள் சொல்கின்றனவே?''

``வேளாண் சட்டத்தை வாபஸ் பெற்றதற்கான காரணத்தை, மத்திய அரசு ஏற்கெனவே சொல்லிவிட்டது. ஆனால், இந்த விஷயத்தில் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இந்தியாவின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் கண்டனம் செய்கின்றன.

நமக்கு மட்டுமல்ல... உலகத்துக்கே 500 கோடி தடுப்பூசியை தயாரித்து அளிக்க முடியும் என்ற அளவுக்கு இந்தியாவின் நிலை வளர்ந்திருக்கிறது. இது குறித்து ஜி-20 மாநாட்டிலேயே பிரதமரும் பேசிவிட்டு வந்திருக்கிறார். வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த இந்தியா, இன்றைக்கு இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதைப் பொறுக்க முடியாமல் வெளிநாடுகள் இந்தியாவைக் கண்டிக்கின்றன.''

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

``வேளாண் சட்டம் வாபஸ் என்ற தற்போதைய முடிவை மத்திய பா.ஜ.க அரசு முன்கூட்டியே எடுத்திருந்தால், போராட்டத்தின்போது இறந்துபோன நூற்றுக்கணக்கான விவசாயிகளின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்தானே?''

``ஒரு பிரிவு விவசாயிகள்தான் இதுபோல் போராடிக்கொண்டிருந்தனர் என்பதை பிரதமரே தெளிவுபடச் சொல்லிவிட்டார். இந்த நிலையில், திரும்பத் திரும்ப விவசாயிகள் போராட்டம் பற்றியே கேள்வி கேட்பதை நான் விரும்பவில்லை, பதில் சொல்லவும் தயாரில்லை!''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``வாட் வரியைக் குறைக்கச் சொல்ல பா.ஜ.க-வுக்கு அருகதை கிடையாது. மத்திய அரசுதான் செஸ் வரியைக் குறைக்க வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறியிருக்கிறாரே?''

``அவர் தவறான புரிதலில் இருக்கிறார். நாட்டின் உள் கட்டமைப்பு வசதிகளுக்காகத்தான் செஸ் வரியே விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையில் 42 % மீண்டும் அந்தந்த மாநிலங்களுக்கேதான் போகிறது. இதெல்லாம் சந்திரசேகர ராவுக்கும் தெரியும். அதாவது, 'ஒரு லிட்டர் பெட்ரோலில், மத்திய அரசுக்குத்தான் 32 ரூபாய் போகிறது. மாநில அரசுக்கு வெறும் ஒரு ரூபாய்தான் கிடைக்கிறது' என்று நம் மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொல்வது போன்ற பொய்தான் இது. உண்மையில், மாநில அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலில் 23 ரூபாய் வரியாகக் கிடைக்கிறது.''

சந்திரசேகர் ராவ்
சந்திரசேகர் ராவ்

``வரப்போகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி இடையே மாற்றம் இருக்கிறதா?''

``கூட்டணியில் மாற்றம் இருக்கிறதா இல்லையா என்பதையெல்லாம் மாநிலத் தலைமையும், அகில இந்திய தலைமையும்தான் முடிவு செய்யும். அதேசமயம் பா.ஜ.க தனித்துப்போட்டியிடவும்கூட தயார்தான் என்ற நிலையை நாங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.''

``சட்டப்பேரவை சபாநாயகர்களின் கூட்டத்தின்போது, 'ஆளுநர் முடிவெடுக்க கால நிர்ணயம் தேவை' என தமிழக சபாநாயகர் அப்பாவு பேசியிருக்கிறாரே?''

``இந்திய அரசியலமைப்பு சட்டப்படி எது நடக்க வேண்டுமோ அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. மற்றபடி சட்டத்தை மீறி, எந்த ஆளுநரும் செயல்படவில்லை.''

அப்பாவு
அப்பாவு

``இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, சட்டமன்றம் இயற்றுகிற தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் அப்படி இல்லையே?''

```அரசியலமைப்பு சட்டப்படிதான் எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. அது இல்லை என்று யாரும் மறுக்க முடியாது. நன்றி!''

`` `ஜெய் பீம்’ படத்தை முன்வைத்து தற்போது நடைபெற்றுவரும் சர்ச்சைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

``அது குறித்து நான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை. அதேசமயம் சினிமாவைப் பொழுதுபோக்காக மட்டும் எடுங்கள். காசு கொடுத்துத்தான் சினிமாவைப் பார்க்கிறார்கள் மக்கள். சினிமாவை யாரும் ஓசியில் போட்டுக் காட்டுவதில்லை. எனவே, உங்கள் சொந்தக் கருத்துகளை சினிமாவில் திணிக்க வேண்டாம்.''

ஜெய் பீம்
ஜெய் பீம்

`` `ஜெய் பீம்’ படத்தில், பா.ம.க சுட்டிக்காட்டிய தவற்றைத் திருத்தம் செய்துவிட்ட பிறகும்கூட, தொடர்ந்து பா.ம.க அரசியல் செய்துவருகிறது என்று திரைத்துறையினர் சொல்கிறார்களே?''

``யாரும் அரசியல் செய்யவில்லை. படம் எடுத்தவர்களைக் கேட்டால் அவர்கள் ஒன்று சொல்வார்கள். பாதிக்கப்பட்டவர்களைக் கேட்டால், அவர்களும் ஒரு கருத்தைச் சொல்வார்கள். ஆக, மாறி மாறி இந்தப் பட்டிமன்றம் போய்க்கொண்டேதான் இருக்கும்.''

``பா.ஜ.க-வாக மாறிவிட்டது பா.ம.க என்று திருமாவளவன் சொல்கிறாரே?''

``திருமாவளவனுக்கு பா.ஜ.க-வைக் கண்டால் பயம். எனவே, பா.ஜ.க மீதான எதிர்ப்புணர்வைக் காட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்று பேசிக்கொண்டிருக்கிறார். பா.ஜ.க-வைப் பற்றிப் பேசாவிட்டால் அவருக்குத் தூக்கம் வராது.''

திருமாவளவன்
திருமாவளவன்

``மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் விலையை ஏற்கெனவே குறைத்துவிட்டன. இந்த நிலையில், திரும்பவும் பெட்ரோல் விலையைக் குறைக்கச்சொல்லி தமிழக பா.ஜ.க நடத்துகிற போராட்டம் மத்திய பா.ஜ.க-வுக்குக் கோபத்தை ஏற்படுத்தாதா?''

``நிச்சயமாகக் கிடையாது. தி.மு.க-தான் தனது தேர்தல் அறிக்கையில், பெட்ரோல், சிலிண்டர் விலையைக் குறைப்போம் என்று சொன்னது. பெட்ரோலுக்கு 3 ரூபாய்தான் விலையைக் குறைத்திருக்கிறது. எனவே, தேர்தல் அறிக்கையில் சொன்னபடி விலையைக் குறையுங்கள் என தமிழக அரசுக்கு எதிராகத்தான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்.''

புதுச்சேரி: மது போதையில் தனியார் விடுதியில் தகராறு - டாடி ஆறுமுகத்தின் மகனைத் தேடும் போலீஸ்!

``பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கும் மத்திய பா.ஜ.க அரசைக் கேள்வி கேட்காமல், நிதிச் சுமையில் இருந்துவரும் மாநில அரசைக் குற்றம்சாட்டுவது அரசியல்தானே?''

``மாநிலத்தின் நிதிச்சுமை என்னவென்று தெரியாமலேதான், தி.மு.க-வினர் 500 தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தார்களா? பேசத் தெரியாதவர், மேடை கோணலாக இருக்கிறது என்று சொல்வதுபோலானது இது. தேர்தல் அறிக்கையில், 'விலையைக் குறைப்போம்' என்று சொன்ன தி.மு.க., இப்போது ஏன் செய்யவில்லை என்றுதான் நாங்கள் கேட்கிறோம். சொன்னதைச் செய்ய முடியவில்லையென்றால், 'நாங்கள் தெரியாமல் சொல்லிவிட்டோம்' எனச் சொல்லி வழக்கம்போல், வெள்ளை அறிக்கை கொடுத்துவிடவேண்டியதுதானே? நாங்களும் எங்கள் போராட்டத்தை நிறுத்திக்கொள்கிறோம்.''

அண்ணாமலை
அண்ணாமலை

``ஶ்ரீரங்கம் கோயிலுக்குள் பிரதமர் மோடி உரையை, டி.வி-யில் ஒளிபரப்பிய அண்ணாமலையின் செய்கை தவறு என்று எதிர்ப்பு கிளம்பியிருக்கிறதே?''

``பா.ஜ.க என்ற கட்சிக் கூட்டத்தை கோயிலுக்குள் நடத்தவில்லை. இந்துக்கள் கடவுளாகப் போற்றக்கூடிய ஆதிசங்கரர் சிலையை கேதார்நாத்தில் பிரதமர் திறந்துவைத்தார். இந்த ஆலய நிகழ்ச்சியை தமிழக மக்களும் பார்க்க வேண்டும் என்றுதான் முக்கியக் கோயில்களில் மட்டும் எல்.இ.டி திரை மூலம் ஒளிபரப்பு செய்தோம். இதற்கு கோயில் நிர்வாகமேகூட ஏற்பாடு செய்துகொடுத்தது. மற்றபடி இந்த நிகழ்வில், யாரும் அரசியல் பேசவும் இல்லை, பேட்டி கொடுக்கவும் இல்லை. எனவே இதில் எந்தத் தவறும் இல்லை.''

Fact Check: `உ.பி பந்தேல்கண்ட் பகுதியில் புதிய அணை' - பாஜக தலைவர்கள் பகிர்ந்த புகைப்படம் உண்மையா?!

``இந்த விவகாரத்தில், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வீடியோ வெளியிட்டிருக்கிறாரே?''

``அப்படி எந்தச் செய்தியையும் நான் பார்க்கவில்லை. எனவே, இதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை.''

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

``அரசியலுக்குள் வந்துவிட்ட பிறகும்கூட, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, 'தி.மு.க அரசு, என் மீது கைவைக்கட்டும் பார்க்கலாம்' என்றெல்லாம் காவல்துறை பாணியில் சவால் விடுகிறாரே?''

``இன்றைக்கும்கூட, 'நாங்கள் மிசாவைச் சந்தித்தவர்கள்' என்றெல்லாம் தி.மு.க-வினர் பேசிவருகிறார்கள்தானே. அதெல்லாம் வீரம் காட்டுவதில்லையா? சட்டமன்றத்திலேயே எத்தனை வன்முறைச் சம்பவங்களைப் பார்த்துவிட்டோம். அண்ணாமலை பேசினால் மட்டும் கேள்வி கேட்கிறீர்களே... யாருக்கு என்ன பதில் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லியிருக்கிறார் அண்ணாமலை.

அரசியலில் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. நாங்களும் இந்த மண்ணின் மைந்தர்கள்தான். எதற்கும் தயாராகவே இருக்கிறோம். யாரையும் மிரட்டிப் பணியவைக்க முடியாது. எங்கள் வீரம் பற்றி அண்ணாமலை பேசியிருக்கிறார். இதில் எந்த வன்முறையும் இல்லை... சவாலும் இல்லை!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு