Published:Updated:

ஹிஜாப் அணியவே கூடாது என்று சொன்னால், நானே பதிலடி கொடுப்பேன்!

குஷ்பு
பிரீமியம் ஸ்டோரி
குஷ்பு

- கொந்தளிக்கும் குஷ்பு

ஹிஜாப் அணியவே கூடாது என்று சொன்னால், நானே பதிலடி கொடுப்பேன்!

- கொந்தளிக்கும் குஷ்பு

Published:Updated:
குஷ்பு
பிரீமியம் ஸ்டோரி
குஷ்பு

கர்நாடகா மாநிலத்தில் களேபரம் ஏற்படுத்திவரும் ‘ஹிஜாப்’புக்கு எதிரான போராட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க ‘குஷ்புவுக்குத்தான் முழு உரிமை உள்ளது’ என்கிறது தமிழக பா.ஜ.க. இதையடுத்து, பா.ஜ.க-வின் தேசியச் செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்புவை நேரில் சந்தித்தேன்...

“மத விவகாரத்தால் அமைதியைச் சீர்குலைத்து, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதுதான் பா.ஜ.க-வின் வியூகம் என்பது நீண்டநாள் குற்றச்சாட்டாகத் தொடர்கிறதே?’’

“மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்துவரக்கூடிய பா.ஜ.க-வுக்கு, இப்படியெல்லாம் கீழ்த்தரமான வேலையைச் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழகத்திலேயேகூட, ‘தாமரை மலரவே மலராது’ என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களுக்கு, கடந்த சட்டமன்றத் தேர்தலில், நான்கு இடங்களை வென்று பதிலடி கொடுத்துவிட்டோம். எங்கள்மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. மற்றபடி, அமைதியாக இருந்த எந்தப் பகுதியில் நாங்கள் பிரச்னையைத் தூண்டிவிட்டோம்?’’

“கோவையில், காவல்துறை எச்சரிக்கையை மீறி பரப்புரை செய்யச் சென்ற பா.ஜ.க நிர்வாகி வேலூர் இப்ராஹிம் கைதுசெய்யப்பட்டார். நீதிமன்றமும் 10,000 ரூபாய் அபராதம் விதித்திருக்கிறதே?’’

“தேர்தல் நேரங்களில், இது போன்ற விஷயங்கள் பல இடங்களிலும் நடைபெறும்தான். எதிர்க்கட்சியினரேகூட அரசியல் காரணங்களுக்காக ‘பேசாத விஷயங்களைப் பேசியதாக’ச் சொல்லிப் புகார் கொடுப்பார்கள். இப்படி நிறைய பார்த்துவிட்டோம். வேலூர் இப்ராஹிம் விஷயத்தில் நீதிமன்றமே இப்படியோர் உத்தரவைப் பிறப்பித்துவிட்டது. எனவே, இத்துடன் இந்த விஷயத்தை விட்டுவிடலாம். பா.ஜ.க-வுக்கு எதிராகப் பிரச்னைகளை உருவாக்க எதிர்க்கட்சிகள் காத்துக்கொண்டிருக்கின்றன. சின்னதாக நாங்கள் ஒரு புள்ளி வைத்தால்கூட, அதைப் பெரிய கோடாக்கிவிடுகிறார்கள். அரசியலில், தேர்தல் நேரத்தில் இதையெல்லாம் செய்வார்கள்தான். நாம் ஒன்றும் பண்ண முடியாது.’’

“கர்நாடகா மாநிலத்தில், ‘ஹிஜாப்’ விவகாரத்தை இவ்வளவு பெரிய அரசியலாக மாற்றிவருவது யார்?’’

“இதில் அரசியலே கிடையாது. ‘எந்த மதத்தினராக இருந்தாலும், மதத்தைப் பள்ளிக்கூடத்துக்குள் கொண்டுபோகக் கூடாது’ என்று உச்ச நீதிமன்றமே சொல்லியிருக்கிறது. அந்த விதிமுறையைக் கடைப்பிடிக்கத்தான் கர்நாடகா அரசும் வலியுறுத்துகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி, இதை மத அரசியலாகப் பிரச்னையாக்குகிறது. தனிப்பட்ட முறையில் யாரும் ஹிஜாப் அணிவதையோ அல்லது பொதுவெளியில் ‘ஹிஜாப்’ அணிந்து செல்வதையோ யாராவது தடுத்தார்களா... இல்லையே! ‘ஹிஜாப் அணியவே கூடாது’ என்று யாரேனும் சொல்லியிருந்தால், அதற்கு நானே பதிலடி கொடுப்பேன். அப்படி யாரையும் கட்டாயப்படுத்துவதற்கு யாருக்குமே உரிமை கிடையாது.’’

“சீக்கியர்களின் டர்பன் குறித்து கேள்வி எழுப்பத் தயங்கும் பா.ஜ.க., முஸ்லிம்களை மட்டும் மதரீதியாகக் குறிவைப்பது ஏன்?’’

“நாங்கள் யாரையும் மதரீதியாகப் பிரித்துப் பார்க்கவில்லை. எல்லோரும் சமம் என்றுதான் சொல்கிறோம். அதனால்தான், பள்ளிக்குள் ஹிஜாப் அணிவது தவறு என்று சொல்லும்போதே, காவி, நீல வண்ணத்துண்டு அணிவதும் தவறு என்று சொல்கிறோம். காங்கிரஸ் கட்சிதான் வாக்கு அரசியலுக்காக ஷா பானு வழக்கில் எதிர் நிலைப்பாடு எடுத்தது. பா.ஜ.க-வோ இஸ்லாமியப் பெண்களுக்கு ‘முத்தலாக்’கிலிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்திருக்கிறது. சீக்கிய இனத்தைச் சேர்ந்த குழந்தைகள் டர்பனை, தலையில்தான் அணிந்துள்ளனர். ஆனால், ஹிஜாப் என்பது தலையை மட்டுமல்லாமல், முகத்தையும்கூட மறைப்பதாக இருக்கிறது. எல்லோரும் சமம் என்பதை வலியுறுத்தத்தான் சீருடை கட்டுப்பாடே தவிர... இதில் வேறு எந்த உள்நோக்கமும் எங்களுக்கு இல்லை.’’

“ ‘கர்நாடகாவில் எழுப்பப்படும் இந்த மதவாத விஷச் சுவர், தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது’ என்று உங்கள் நண்பர் கமல்ஹாசன் எச்சரித்திருக்கிறாரே?’’

“அரசியலையும் நண்பர்களையும் ஒன்றுசேர்த்து கேள்வி கேட்காதீர்கள். அரசியல்ரீதியாக அவர் அப்படிப் பேசுவார்... பேசட்டும். அதற்காக கமல்ஹாசனை நான் விமர்சிப்பேன் என்று நினைக்காதீர்கள்.’’

ஹிஜாப் அணியவே கூடாது என்று சொன்னால், நானே பதிலடி கொடுப்பேன்!

“ ‘காரில் தீ வைக்கவும், குண்டு வீசவும், பர்தா பற்றிப் பேசவும் பா.ஜ.க-வுக்கு இப்போது தேவை ஏற்பட்டிருக்கிறது’ என்று சீமானும் சொல்கிறாரே?’’

“அரசியல் லாபத்துக்காக அப்படிப் பேசுகிறார். ‘பா.ஜ.க-வினால் எங்கள் அரசியலுக்கு எந்த நஷ்டமும் இல்லை’ என்று சொல்பவர்கள் ஏன், திரும்பத் திரும்ப பா.ஜ.க பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள்? பா.ஜ.க பற்றிப் பேசினால், விமர்சித்தால்தான் தங்களுக்கு வளர்ச்சி என்று இப்படியெல்லாம் பேசிவருகிறார்கள்.’’

“ ‘இந்தியாவுக்குள் வீரம் காட்டுகிற மத்திய பா.ஜ.க அரசு, நம் எல்லைப் பகுதிக்குள் பாலம் கட்டிவருகிற சீனாவைச் சத்தமாகக் கண்டிக்கக்கூட பயப்படுகிறது’ என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு நியாயமானதுதானே?’’

“44,000 சதுர கி.மீ பரப்பளவுகொண்ட இந்தியப் பகுதியை சீனாவுக்கு விட்டுக்கொடுத்தது கடந்தகால காங்கிரஸ் அரசுதான். பா.ஜ.க அரசு வந்த பிறகுதான், நாம் இழந்த பகுதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டுவருகிறோம். 56 வருடங்களாக காங்கிரஸ் கட்சி செய்துவந்த பிரச்னையை எட்டே வருடங்களில் பா.ஜ.க சரிபண்ணிவிட முடியுமா? பா.ஜ.க மத்திய ஆட்சிப் பொறுப்புக்கு வந்து, எட்டு ஆண்டுகளுக்குள் காஷ்மீரில் தேசியக்கொடியைப் பறக்கவிட்டிருக்கிறது. இத்தனை ஆண்டுக்காலம் மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸால் இதைச் செய்ய முடிந்ததா?’’

“ஆனால், சீனா பாலம் கட்டிவருவதைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி எச்சரித்தபோது, கிண்டல் செய்த பா.ஜ.க-வே இப்போது, ‘ஆமாம்... அத்துமீறி பாலம் கட்டுகிறது’ என ஒப்புக்கொண்டிருக்கிறதே?’’

“ராகுல் காந்தி சொல்வதையெல்லாம் நாங்களும் காதால் கேட்க வேண்டுமா? நம் நாட்டு எல்லைக்குள் சீனா, அத்துமீறி பாலம் கட்டிவருகிறது என்றால், அதற்கு எப்படி எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். ராகுல் காந்தியை ஒரு தலைவராகவே நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் சொல்லித்தான் எங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை. எங்கள் வேலையை நாங்கள் சிறப்பாகச் செய்துகொண்டுதான் இருக்கிறோம்!’’