Published:Updated:

`தி.மு.க அராஜகம் தாங்கலை!' - ஆளுநரிடம் பற்றவைத்த எல்.முருகன்

பன்வாரிலால் புரோஹித், எல்.முருகன்
பன்வாரிலால் புரோஹித், எல்.முருகன்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை பா.ஜ.க தலைவர் எல்.முருகன் நேற்று திடீரென சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியிருக்கிறது.

பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள் என பா.ஜ.க-வினர் விமரிசையாகக் கொண்டாடினார்கள். சென்னை, நங்கநல்லூர் பகுதியில் பா.ஜ.க-வினர் செய்திருந்த சுவர் விளம்பரத்தை, அந்தப் பகுதி தி.மு.க-வினர் சிலர் அழித்ததாக செப்டம்பர் 17-ம் தேதி பிரச்னை வெடித்தது. உடனடியாக அந்தப் பகுதியில் கூடிய பா.ஜ.க மகளிரணியினர், தி.மு.க-வுக்கு எதிராக கோஷமிட்டனர். பா.ஜ.க-வினர் மீண்டும் விளம்பரத்தை வரைந்தனர்.

பா.ஜ.க-வினர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க-வினர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

அதற்கு பதிலடியாக, தி.மு.க பகுதிச் செயலாளர் சந்திரன் தலைமையில் அங்கு திரண்ட தி.மு.க-வினர், ``எங்க ஏரியாவுக்குள்ளேயே வந்து கோஷம் போடுறீங்களா... மரியாதையா கிளம்பிடுங்க, இல்லை தொலைச்சிடுவோம்” என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. தி.மு.க வட்டச் செயலாளர்கள் சிலர் மோட்டார் சைக்கிளைக்கொண்டு வேகமாக மோதுவதுபோல் மிரட்டியும், பிடித்துத் தள்ளியும்விட்டதில் பா.ஜ.க மகளிரணியைச் சேர்ந்த சிலருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் சொல்கிறார்கள். இந்தக் களேபரத்தில் பா.ஜ.க மகளிரணிப் பிரமுகர்கள் அணிந்திருந்த தங்க வளையல்களைச் சிலர் திருடிவிட்டதாகவும் புகார் எழுந்திருக்கிறது.

தமிழ் மக்களோடு நெருங்க ரூட் போடும் பா.ஜ.க... `வேறொரு' ரூட்டில் எல்.முருகன்!

இந்த விவகாரத்தால் கொதித்துப்போன பா.ஜ.க தலைவர் எல்.முருகன், தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க-வினரைக் கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். அவர் அறிவித்தபடி செப்டம்பர் 22-ம் தேதி, நங்கநல்லூர், சைதாப்பேட்டை, அண்ணாநகர் வளைவு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட ஏழு இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடந்தது. இந்த விவகாரம் அரசியல் சூட்டைக் கிளப்பிய நிலையில், நேற்று (செப்டம்பர் 23-ம் தேதி) காலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எல்.முருகன் சந்தித்துப் பேசியிருக்கிறார். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், தி.மு.க-வினர் நடத்திய தாக்குதல் குறித்துப் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எல்.முருகன்
எல்.முருகன்

இது குறித்து நம்மிடம் பேசிய ஆளுநர் மாளிகை வட்டாரங்கள், ``பா.ஜ.க-வினர் தாக்கப்பட்ட செய்தியை அறிந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உடனடியாக முருகனைத் தொடர்புகொண்டு விஷயத்தைக் கேட்டறிந்தார். நேரில் கூடுதல் தகவலைத் தெரிவிப்பதாக முருகன் கூறியதும், அவரை உடனடியாக ஆளுநர் மாளிகைக்கு வரச் சொன்னார் புரோஹித். இதன்படி, நேற்று காலை ஆளுநர் மாளிகைக்கு வந்த முருகன், `தி.மு.க-காரங்களோட அராஜகம் தாங்க முடியலை. உரிய அனுமதி வாங்கிக்கொண்டுதான் விளம்பர பேனர்கள், சுவர் விளம்பரங்களெல்லாம் வெச்சிருக்கோம். ஆனா, அவங்க சொந்தச் சுவத்துல நாம வரைஞ்ச மாதிரி அராஜகம் பண்றாங்க. மோடியோட பிறந்தநாளுக்கு தமிழ்நாட்டோட எல்லா கிராமப்புறங்களிலும் வாழ்த்து போஸ்டர்கள் முளைச்சிருக்கு. ஒவ்வொரு ஊரிலும் கொடிக் கம்பம் நடப்படுது. கிராமப்புறங்கள்ல பா.ஜ.க வளர்றது தி.மு.க-வுக்கு பிடிக்கலை. அந்த எரிச்சல் தாங்காமத்தான் இப்படித் தாக்குதல் நடத்துறாங்க.

தஞ்சை: `மோடி பிறந்தநாளில் பேசும் அளவுக்கு நடிகர் சூர்யா பெரிய ஆள் இல்லை!’- ஜீவஜோதி

பா.ஜ.க தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து போலீஸாரிடம் புகாரளித்தபோது, காவல்துறை சட்டை செய்யவில்லை. அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,`சரி, உரிய நேரம் வரும்போது பார்த்துக்கொள்வோம்’ என்று முருகனை அனுப்பிவைத்தார். இந்தச் சந்திப்பில், ஆளுநரின் உடல்நிலை குறித்தும் முருகன் கேட்டறிந்தார்” என்றனர்.

பா.ஜ.க-வினர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க-வினர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க பிரமுகர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பகுதிச் செயலாளர், வட்டச் செயலாளர்களையாவது கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டுமென்று எல்.முருகன் தரப்பு கடுமையாக முட்டி மோதுகிறது. ஆளுநர் மாளிகையிலிருந்து அழுத்தம் வந்தால் காக்கிகள் நடவடிக்கை எடுத்துத்தானே ஆக வேண்டும் என்கிறது பா.ஜ.க தரப்பு. என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு