Published:Updated:

``பிரிவினைவாதம் முதல்வரின் ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது!" - அண்ணாமலை காட்டம்

ஆளுநரிடம் அண்ணாமலை புகார் மனு

``பிரபுவின் குடும்பத்துக்கு பா.ஜ.க சார்பாக 10 லட்சம் ரூபாய் காசோலையை அவருடைய மனைவியிடம் கொடுக்கிறோம்." - அண்ணாமலை

Published:Updated:

``பிரிவினைவாதம் முதல்வரின் ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது!" - அண்ணாமலை காட்டம்

``பிரபுவின் குடும்பத்துக்கு பா.ஜ.க சார்பாக 10 லட்சம் ரூபாய் காசோலையை அவருடைய மனைவியிடம் கொடுக்கிறோம்." - அண்ணாமலை

ஆளுநரிடம் அண்ணாமலை புகார் மனு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்திய ராணுவ வீரர் பிரபு என்பவர்மீது, தி.மு.க கவுன்சிலர் உட்பட ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதில், பிரபு உயிரிழந்தார். இதற்கு கடும் கண்டனத்தை பா.ஜ.க தெரிவித்துவந்தது. இந்த நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில், ராணுவ வீரரின் உயிரிழப்புக்கு எதிராகவும், பா.ஜ.க தலைவர் தடா பெரியசாமி வீடு மீதான தாக்குதலுக்கெதிராகவும், அரசைக் கண்டித்து சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

அண்ணாமலை
அண்ணாமலை

இதில் பா.ஜ.க தலைவர்கள் உட்பட, முன்னாள் ராணுவ வீரர்களும் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் பேசிய அண்ணாமலை, ``வட இந்தியாவில் ராணுவ வீரர்களுக்குக் கொடுக்கப்படும் மரியாதை தமிழகத்தில் இல்லை என்று சொல்வார்கள். அது பொய். ஒரு கட்சி மரியாதை கொடுக்கவில்லை, அந்தக் கட்சியைச் சார்ந்து இருக்கக்கூடிய கூட்டணிக் கட்சிகள் மரியாதை கொடுக்கவில்லை அவ்வளவுதான்.

நேரடியாக ராணுவத்திலிருந்து ஒய்வுபெற்று இன்று தமிழகத்தில் வசிக்கக்கூடிய வீரர்கள் இரண்டு 2 லட்சத்து 38 ஆயிரத்துக்கு மேற்பட்டோர். ஒருத்தருக்கு ஐந்து ஓட்டுனு போட்டீங்கன்னா 15 லட்சம் ஓட்டு வந்துருச்சு. யாராச்சும் ராணுவத்துக்கு நான் ஆதரவு தர மாட்டேன், நான் திராவிட கட்சி, ஓட்டை கணக்கு பார்த்துதான் ஆதரவு தருவேன்னு நினைச்சா, 15 லட்சம் ஓட்டு இவங்க கிட்ட இருக்கு, இவங்க ஒருத்தர் போயிட்டு 10 ஓட்டு வாங்கிக் கொடுத்தா அது ஒன்றரை கோடி. அதனால் அந்தக் கட்சிகளுக்கும் நான் சேர்த்து சொல்கிறேன், எங்களுடைய சித்தாந்தத்துக்கு எதிரான கட்சியாக இருந்தாலும் கூட நம்முடைய ராணுவ வீரர்களுக்காக எங்களோடு இணைந்து வாருங்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை

நான் பா.ஜ.க-வுக்கு வரும்போது ஒரு மூத்த தலைவர் சொன்னார், `அண்ணாமலை அரசியலுக்கு எல்லாம் சரியாக சூட்டாக மாட்டார். நிறைய ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அரசியலில் சேர்த்திருக்கேன். அவங்க வரும்போது ஃபிக்சட் மைண்ட்செட்டோட வருவாங்க. அதனால் ராணுவத்திலிருந்து, போலீஸிலிருந்து வருகின்ற அதிகாரிகள் அரசியலில் தோற்றுவிடுவார்கள். தேவையில்லாமல் அண்ணாமலை ரிஸ்க் எடுத்து அரசியலுக்கு கூட்டிட்டு வர வேண்டுமா' என்று. அப்படி சில பேர் நம்ம கட்சியில் சேரும்போது ஒவ்வொரு முறையும் நான் யோசிப்பேன், இவர்களுக்கு அரசியல் சரியாக வருமா என்று.

உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், அவர்கள் அனைவருமே இன்றைக்கு சமுதாயத்தில் மரியாதையோடுதான் இருப்பார்கள். ராணுவ வீரர்கள் எல்லாருமே நேரத்தை மெயின்டெயின் பண்ணுவார்கள். சமுதாயத்தில் நமக்கு அவங்களோட கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்றதுக்கு நேரம் ஆகும். ஆனா, நாம அப்படி இல்ல... திராவிட கட்சிகளைப் பார்த்து, தி.மு.க படத்தைப் பார்த்து ஓட்டு போட்டு சமுதாயத்தில் வாழக்கூடிய சாதாரண மக்கள். ஆனா அவர்கள் அப்படியல்ல ஒழுக்கமுடையவர்கள்.

பா.ஜ.க உண்ணாவிரதம்
பா.ஜ.க உண்ணாவிரதம்

ராணுவ வீரர்களைப் பொறுத்தவரைக்கும் அவர்கள் தப்பே செஞ்சாங்கன்னு அந்தக் கிராமத்தில் சொன்னா கூட, சமுதாயம் அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது. காரணம், அவர்கள் தவறு செய்வதற்கு வாய்ப்பே கிடையாது. அவர்கள் 12 மாதம் கடுமையாகப் போராடிவிட்டு வெறும் இரண்டு மாசம் லீவுக்கு வர்றாங்க. நம்ம எல்லாருமே ஒரு மாசம் வீட்டுக்குப் போகாம, கல்யாணத்துக்குப் போகாம, சமுதாயத்திலிருந்து தனித்து வாழ்ந்து பாருங்க,... அப்படியிருக்கும்போது ராணுவ வீரனுடைய மனநிலையை உணர்ந்து பாருங்கள்.

இரண்டு நாள்களுக்கு முன்பு பல்கலைக்கழகத்தில் இரண்டு பேர் சண்டை போட்டுக்கிறாங்க. ஒன்று கம்யூனிஸ்ட் SFI, எனது ஏபிவிபி. அவங்க ரெண்டு பேருக்கும் ஒரு சண்டை. அதுல ஒரு தமிழ் பையனோட மண்டையில் கொஞ்சம் காயம். உடனே முதலமைச்சர் ஸ்டாலின் பொங்குக்குறாரு. தமிழ்நாடு, தமிழர்களைக் குறிவைத்து தாக்குகிறார்கள் என்று. இந்த மாதிரி முட்டாளை எங்கேயாவது பார்த்திருக்கீங்களா. இந்த மாதிரி முதலமைச்சரை இந்தியாவே பார்த்தது கிடையாது. நீங்கதான் தமிழ்நாடு எல்லையைத் தாண்டினது கிடையாது, உங்களுக்கு என்ன பிரச்னை.

அண்ணாமலை
அண்ணாமலை

எந்தளவுக்கு இலங்கைக்குப் போய் சொதப்பி வச்சிருக்கீங்கன்னு எங்களுக்குத் தெரியும். நீங்க மூணு வருஷம் பண்ணாதத நாங்க சரிசெய்ய பத்து வருஷம் ஆகும். ஆனால் இந்த முதலமைச்சர், ஒருவர் இந்திய ராணுவத்திலிருக்கக்கூடிய வீரரைக் கொன்றிருக்கிறார்கள், அதற்கு ஒரு கண்டனம் கொடுத்தாரா. இதிலிருந்தே தெரிகிறது, பிரிவினைவாதம் என்பது முதலமைச்சரின் ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது என்று. தி.மு.க காவல்துறை என்றால் அடிமை, சொல்வதைச் செய்யணும், கைகட்டி நிற்கணும், கட்டப்பஞ்சாயத்து செய்யணும், ரியல் எஸ்டேட் டீலிங் முடிக்கணும், ஜி ஸ்கொயருக்கு எங்கயாச்சும் பிரச்னைனா மிரட்டி கையெழுத்து போட வைக்கணும். இதைத்தான் காவல்துறையிடம் முதலமைச்சர் எதிர்பார்க்கிறார். அதனால்தான் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு இன்று சந்தி சிரிக்கின்றது.

அதனால் வருகின்ற காலத்தில் உங்கள் ஆதரவு பா.ஜ.க பக்கம் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இன்னைக்கு பா.ஜ.க சார்பாக ஓர் அறிவிப்பை வெளியிடுகின்றேன். பிரபுவின் குடும்பத்துக்கு பா.ஜ.க சார்பாக 10 லட்சம் ரூபாய் காசோலையை அவருடைய மனைவியிடம் கொடுக்கிறோம். அவரின் இரண்டு குழந்தைக்கும் காலத்துக்கும் படிக்க வைக்கக்கூடிய பொறுப்பை நாங்கள் எடுத்திருக்கிறோம்" என்றார்.

மெழுகுவத்தியுடன் பேரணி
மெழுகுவத்தியுடன் பேரணி

அதைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க-வினர் மெழுகுவத்தி ஏந்தி பேரணி சென்றனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ``ஆளுநரிடம், பா.ஜ.க சார்பாக, மாநில அரசு எப்படி தன்னுடைய கடமையைச் செய்யாமல் இருக்கிறது, எப்படி காவல்துறை தன்னுடைய கடமையைச் செய்யாமல் இருந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி புகார் மனு அளிக்க உள்ளோம்.

அண்ணாமலை
அண்ணாமலை

பிரபுவுக்கு நடந்தது எந்த ராணுவ வீரருக்கும் நடக்கக் கூடாது. பிரபு உயிரிழந்த விஷயத்தில் மாநில அரசு நடந்துகொள்ளும் விதம் வருத்தம் அளிக்கிறது. பிரபு உயிரிழப்புக்கு முதல்வர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்... எனவே, முன்னாள் ராணுவ வீரர்கள் ஏழு பேருடன் மாலை ஆளுநரைச் சந்திக்க உள்ளேன்" என்று தெரிவித்தார்.

ஆளுநரிடம் அண்ணாமலை புகார் மனு
ஆளுநரிடம் அண்ணாமலை புகார் மனு

அதன்படி அண்ணாமலை, முன்னாள் ராணுவ வீரர்களுடன் சென்று ஆளுநரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.

தொடர்ந்து ஆளுநர் மாளிகை, ``ஆளுநரை முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் சந்தித்து, தி.மு.க கவுன்சிலர் தலைமையிலான ஆயுதக் கும்பலால் ராணுவ வீரர் எம்.பிரபு கொடூரமாக கொல்லப்பட்டது குறித்தும், மாநில சட்ட அமலாக்க அமைப்பின் மெத்தன நடவடிக்கை குறித்தும் கூட்டு வேதனையைப் பகிர்ந்து கொண்டனர். உண்மையில், இது மிகவும் கவலைக்குரிய விஷயம்” எனத் தெரிவித்திருக்கிறது.