Published:Updated:

``திமுகவின் சாதி, மத அரசியல் இனி தமிழ்நாட்டில் எடுபடாது!” - பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

அண்ணாமலை

“கோயம்புத்தூர் சம்பவத்தில் இந்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யுங்கள் என்று பா.ஜ.க சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு காவல்துறையின் செயல்பாடு இருக்கிறது” – பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

``திமுகவின் சாதி, மத அரசியல் இனி தமிழ்நாட்டில் எடுபடாது!” - பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

“கோயம்புத்தூர் சம்பவத்தில் இந்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யுங்கள் என்று பா.ஜ.க சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு காவல்துறையின் செயல்பாடு இருக்கிறது” – பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை

தமிழக திமுக அரசு தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி, தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. அதன்படி இன்று காலை கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, "கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்தபிறகு, தேர்வுப் பட்டியலை பார்த்த அனைவருக்கும் ஒரு ஆச்சர்யமான விஷயம் காத்திருந்தது. தமிழக வரலாற்றில், பத்தாவது வகுப்பில் தமிழ் வகுப்பில் 48,000 மாணவர் தோல்வியடைந்திருக்கிறார்கள். தி.மு.க திட்டம் போட்டு கண்டுபிடித்ததுதான் இந்தி எதிர்ப்பு என்ற வாசகம். இந்தி மொழியை யாரும் திணிக்கவில்லை. மாற்றுக் கட்சியில் இருந்தாலும் கூட நேரு அவர்கள் இந்தி வராது என்று 1960-ல் ஒரு வாக்குறுதி கொடுத்தார். அப்படி இருந்தும் 1965-ல் தி.மு.கவுக்கு மிக நன்றாகத் தெரியும் இதை வைத்துதான் ஆட்சிக்கு வரமுடியும் என்று.

திமுகவைச் சேர்ந்த வெற்றி அழகன் என்பவர் நடத்தும் பள்ளியின் பெயர் டான். அந்த பள்ளியில் மூன்றாவது மொழி இந்திதான். அங்கு தமிழில் பேசினால் 500 ரூபாய் அபராதம் வேறு விதிக்கிறார்கள். தமிழக முதல்வரின் சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மடிப்பாக்கத்தில் வைத்திருக்கும் முக்கியமான பள்ளியில், இந்தி இல்லை என்று முதல்வர் அவர்கள் மக்கள் முன் வந்து மறுக்க முடியுமா? தி.மு.கவில் மிக முக்கிய பொறுப்பில் இருந்தவர் ஆற்காடு வீராசாமி. அவர்களுக்கு திருவள்ளூரில் இருக்கும் பள்ளியைச் சென்று பாருங்கள். தி.மு.கவில் இருக்கக் கூடிய எம்.பி ஜெகத்ரட்சகன் அவர்களின் பள்ளி ஸ்ரீபாரத் வித்யாஸ்ரம். இவர்களெல்லாம் சமஸ்கிருதம் வேண்டாம், குரு சிஷ்யா வழிபாடு வேண்டாம் என்று சொல்பவர்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை

ஆனால் அவர்கள் வைக்கும் பெயர்களை எல்லாம் பாருங்கள். வித்யாஸ்ரம், வித்யாஸ்ரம் என்று மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். அக்‌ஷரா வித்யாஸ்ரம், வெங்கடேஸ்வரா வித்யாஸ்ரம், ஜி.கே.வேர்ல்டு இண்டர்நேஷனல் ஸ்கூல், கிங்ஸ்டன் இண்டர்நேஷனல் அகாடமி, ஜீவா வேலு இண்டர்நேஷனல். ஜீவா வேலு என்பது யாரென்பது உங்களுக்குத் தெரியும், திருவண்ணாமலைக்காரர். இந்தியே வேண்டாம் என்கிறீர்கள். ஆனால் இன்று தி.மு.கவின் பட்டத்து இளவரசர் சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் படங்களில் நடிக்கிறார். நான் வரும்போது, இதுவரை உதயநிதி ஸ்டாலின் படத்தில் தமிழ் நடிகைகள் யாராவது நடித்தார்களா என்று நண்பர் ஒருவரிடம் கேட்டேன். நான் அதிகமாக படங்கள் பார்ப்பதில்லை. இருந்தாலும் பெயர்களைக் கூறுகிறேன் கேளுங்கள். ஹன்சிகா மோத்வானி, அதித்தியராவ் ஹிதிரி (அதிதி ராவ் ஹைதாரி) அந்த பெயரே வாயில் வரவில்லை. அடுத்த ரவுண்ட் இங்கிலாந்தில் எமி ஜாக்சன். இவர்களெல்லாம் தி.மு.கவின் பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலினுடன் நடிக்கும் நடிகைகள். அதை தவறென்று சொல்லவில்லை. படம் இருக்கிறது,

கலை இருக்கிறது, மக்கள் பணம் கொடுத்து பார்க்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து ஒரு சகோதரிகூட உங்களுடன் நடிப்பதற்கு தகுதி இல்லையா ? தமிழ் பேசக்கூடிய சகோதரி ஒருவர்கூட இல்லையா ? இதையெல்லாம் நான் கூறவில்லை. என்னுடன் வந்த நண்பர் ஒருவர் என்னை பேசும்படி கூறினார். சமீபத்தில் தி.மு.கவின் பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அமீர்கானை அழைத்துக்கொண்டு வந்தார். அமீர்கானின் இந்தி படத்தின் தமிழக விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின்தான். இந்தி மொழியை வரிசையாக தியேட்டர்களில் திணிப்பது தி.மு.கதான். ரெட் ஜெயண்ட் மூவி என்று வைத்துக்கொண்டு அனைத்தையும் புகுத்துவது தி.மு.கதான். பள்ளிகளை வைத்துக்கொண்டு மூன்றாவது மொழியாக இந்தியை புகுத்துவது தி.மு.கதான். தம்பி வா என்று அண்ணா ஒரு தம்பியைத்தான் அழைத்தார். ஆனால் அந்த ஒரு தம்பி ஒட்டுமொத்த குடும்பத்தையே அழைத்துக்கொண்டு நாங்கள் மூன்றாவது மொழி படிக்கக்கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார் ?

கோவை கார் வெடிப்பு
கோவை கார் வெடிப்பு

மொழி என்பது என்னுடைய விருப்பம். இந்தி மொழியை புகுத்தக் கூடாது. அதனை அனைவரும் எதிர்ப்போம். ஆனால் மூன்றாவது மொழியாக என்னுடைய குழந்தை, மாறி வருகின்ற உலகத்திற்கு தகுந்தாற்போல ஒரு மொழியை கற்பதற்கு விடமாட்டோம் என்று சொல்லும் திமுகவின் வக்கிரம் எப்படி என்பதைப் பாருங்கள். நீங்கள் நடத்தும் பள்ளிகளில் மூன்று மொழி. அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இரண்டு மொழி.

தமிழக வரலாற்றில், தமிழக மண்ணில் நடத்தப்பட்ட முதல் மனித வெடிகுண்டு தாக்குதல்தான் தற்போது கோயம்புத்தூரில் நடைப்பெற்றது. இதுவரை இதுபோல் நடந்ததில்லை. ஆனால் இன்னும் இதுகுறித்து நம்முடைய முதல்வர் வாய் திறந்து பேசுவதற்கு யோசித்துக்கொண்டிருக்கிறார். தீவிரவாத தாக்குதலை, தற்கொலைப் படை தாக்குதலை சிலிண்டர் விபத்து என்று கூறுவது வெட்கக் கேடான விஷயம். தமிழகத்தில் தி.மு.கவின் சாதி அரசியலும், மத அரசியலும் இனி எடுபடாது. இந்த 16 மாதங்களில் அனைத்தும் தோல்வி. நம் மண்ணில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் வரும் அளவிற்கு உங்கள் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. காரணம் ஒவ்வொரு மேடையிலும் ’நீங்கள் வாக்களித்ததால்தான் நாங்கள் வெற்றிபெற்றோம். நாங்கள் உங்களை மறக்கமாட்டோம்’ என்று பேசி வருகிறார்கள். ஆனால் ‘நீங்கள் அனைவரும் வாக்களித்து பா.ஜ.க ஆட்சிக்கு வரவேண்டும்’ என்று நான் சொல்கிறேன். நம்முடைய சிறுபான்மையின சகோதர சகோதரிகள் அமைதியாக இருந்தாலும், உங்களால்தான் ஆட்சிக்கு வந்தோம் என்று கூறி, அதிலிருக்கும் வன்மத்தை கக்குபவர்களை நீங்கள் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால்தான் கோயம்புத்தூர் சம்பவம் நடந்திருக்கிறது. அதைப் பேசுவதற்கு முதல்வருக்கு தைரியம் இல்லை.

கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, இந்தியா முழுவதும் எத்தனை குண்டு வெடிப்புகள் ? பெங்களூரில், மும்பையில், ஹைதராபாத்தில், புனேவில் கொத்துக் கொத்தாக மக்கள் இறந்துகொண்டிருந்தார்கள். மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த இந்த 8 ஆண்டுகளில் எங்கே குண்டு வெடித்தது ? ஏனென்றால் இது முதுகெலும்பு இருக்கக் கூடிய ஒரு அரசு. நெஞ்சுரம் இருக்கக் கூடிய ஒரு பிரதமர். கோயம்புத்தூர் சம்பவத்தில் இந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யுங்கள் என்று பா.ஜ.க சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு காவல்துறையின் செயல்பாடு இருக்கிறது. ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த 17 மாதங்களாக என்.ஐ.ஏவுக்கு போலீஸ் அந்தஸ்து வழங்கப்படவில்லை. இன்று கோயம்புத்தூர் சம்பவத்திற்கு என்.ஐ.ஏ என்ற அமைப்புக்கு அதிகாரம் கொடுக்காததுதான் காரணம். 23-ம் தேதி நடைப்பெற்ற அந்த சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் அந்த அனுமதி கடிதத்தை முதலமைச்சர் கொடுத்தார். 17 மாதங்கள் வற்புறுத்தலுக்குப் பிறகுதான் என்.ஐ.ஏ காவல் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது” என்றார்.