Published:Updated:

``திமுக-வின் இரட்டை நிலைப்பாடு, நம்பிவந்த நம் மக்களுக்கு இழைக்கும் துரோகம்!” - அண்ணாமலை காட்டம்

ஸ்டாலின் - அண்ணாமலை

``திமுக-வின் இந்த இரட்டை நிலைப்பாடு, நம்பிவந்த நம் மக்களுக்கு இழைக்கும் துரோகம். உடனடியாக அனைவருக்கும் மாற்று வேலைக்கான ஏற்பாட்டை அரசு செய்ய வேண்டும்.'' - அண்ணாமலை

``திமுக-வின் இரட்டை நிலைப்பாடு, நம்பிவந்த நம் மக்களுக்கு இழைக்கும் துரோகம்!” - அண்ணாமலை காட்டம்

``திமுக-வின் இந்த இரட்டை நிலைப்பாடு, நம்பிவந்த நம் மக்களுக்கு இழைக்கும் துரோகம். உடனடியாக அனைவருக்கும் மாற்று வேலைக்கான ஏற்பாட்டை அரசு செய்ய வேண்டும்.'' - அண்ணாமலை

Published:Updated:
ஸ்டாலின் - அண்ணாமலை

தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தின் (TANTEA) 2,152 ஹெக்டேர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவுக்கு, எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். அந்த வரிசையில் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

பாஜக அண்ணாமலை
பாஜக அண்ணாமலை

அந்த அறிக்கையில், ``இலங்கையிலிருந்து அழைத்துவரப்பட்ட இந்திய தமிழ்க் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்க, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். இவர்களில் சுமார் இன்று 15,076 (மக்கள் தொகை: 65,111) மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்கள், இன்றளவும் தமிழக அரசின் TANTEA-ஐ மட்டுமே நம்பி வாழ்கின்றன. ஆனால் TANTEA நிர்வாக இயக்குநர், TANTEA வசமுள்ள நிலத்தின் குறிப்பிடத்தக்க பகுதியை, TANTEA நிறுவனத்துக்கு மேலும் நஷ்டம் ஏற்படாமல் இருக்க வனத்துறையிடமே திருப்பி ஒப்படைக்கப் பரிந்துரைத்தார். நடுவட்டம் கோட்டம், வால்பாறை கோட்டம், குன்னூர் கோட்டம், கோத்தகிரி கோட்டம், பாண்டியர் கோட்டம், சேரங்கோடு கோட்டம், நெல்லியாளம் கோட்டம், சேரம்பாடி கோட்டம் என மொத்தம் 2,152 ஹெக்டேர் நிலம் ஒப்படைக்கப்படும் என TANTEA நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தனது பரிந்துரையில் கூறியிருந்தார்.

பாஜக அறிக்கை
பாஜக அறிக்கை

நிர்வாக இயக்குநரின் கூற்றுப்படி, இந்த ஏற்பாட்டின படி, TANTEA நிறுவனத்துக்கு, ஆண்டுக்கு ரூ.5.98 கோடி மிச்சமாகும். இந்தச் சிறிய தொகைக்காக இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் அகதிகளாக்குவதா என்பதைக்கூட சிந்திக்கவில்லை இந்த திறனற்ற தி.மு.க அரசு. TANTEA நிறுவனத்தின் பரிந்துரைகளை ஏற்று, நிலங்களை மீண்டும் வனத்துறையிடம் ஒப்படைக்க தமிழக அரசு, அக்டோபர் 3, 2022 தேதியிட்ட G.O (Ms) எண்.173 என்ற ஓர் அரசாணையை வெளியிட்டது. அரசின் இந்த முடிவால் அப்பாவித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கவலைக்கிடமாக உள்ளது. TANTEA நிர்வாகம், வேலைக்காக வேறு தோட்டங்களுக்குச் செல்லாதவர்கள் விருப்ப ஓய்வு பெற வேண்டும் என்பதால் 2,400 குடும்பங்கள் மற்றும் 15,000 மக்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது.

ஸ்டாலின் - அண்ணாமலை
ஸ்டாலின் - அண்ணாமலை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு TANTEA நிறுவனத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்கப்படும் என உறுதியளித்தார். ஆனால் வழக்கம்போல் வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, மக்களை மீண்டும் அகதிகளாக்கியிருக்கிறது தி.மு.க. தி.மு.க-வின் இந்த இரட்டை நிலைப்பாடு, நம்பிவந்த நம் மக்களுக்கு இழைக்கும் துரோகம். உடனடியாக அனைவருக்கும் மாற்று வேலைக்கான ஏற்பாட்டை அரசு செய்ய வேண்டும். தற்காலிகமாகக் குடியிருப்புகளில் அவர்கள் வாழ இடம் மட்டும் கொடுப்பதால், அவர்களால் என்ன செய்ய முடியும்... இப்படி மக்களை வஞ்சிக்கும் இந்தத் திறனற்ற தி.மு.க அரசுக்கு எதிராக நீலகிரி மாவட்டம், கூடலூரில் இந்த மாதம் 20-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழக பா.ஜ.க முன்னெடுக்கும். அதில் நானும் நேரடியாகக் கலந்துகொள்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.