பஞ்சாப்பில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லா ஊழல் குற்றச்சாட்டின்பேரில் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தையடுத்து, ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ``பகவந்த் மான் உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இன்று முழு தேசமும் ஆம் ஆத்மியை நினைத்துப் பெருமைகொள்கிறது" என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், பா.ஜ.க செய்தித் தொடர்பாளரான கெளரவ் பாட்டியா, ``பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சிக்குவந்து 68 நாள்கள்தான் ஆகின்றன. ஆட்சிக்குவந்த 20 நாள்களிலேயே ஊழலை முடிவுக்குக் கொண்டுவருவோம் என்று ஆம் ஆத்மி கூறியபோதிலும், ஆம் ஆத்மி எப்படி பஞ்சாப்பில் மீண்டும் ஊழலைத் தொடங்கியது. இதன் மூலம் ஆம் ஆத்மியால் ஊழலைக் கையாள முடியவில்லை என்று ஒரு முடிவுக்கு வரலாம். டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால், இரு மாநில அரசுகளின் சுகாதார அமைச்சர்களும் ஊழல்வாதிகள் என்பது தெரியவந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அரவிந்த் கெஜ்ரிவாலால் மட்டுமே 100 சதவிகித ஊழல் ஆட்சியை வழங்க முடியும். மேலும், இந்தக் கட்சி எங்கு சென்றாலும் ஊழலையும் தன்னுடன் எடுத்துச் செல்கிறது என்று நாட்டு மக்களும், பஞ்சாப் மக்களும் கூறுகின்றனர்" என ஆம் ஆத்மியை மிகக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.
