`வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க கவுன்சிலருக்குத் தொடர்பு இருப்பதால், திருமாவளவன் போராட்டம் நடத்தவில்லை' என்று குற்றம்சாட்டியிருக்கும் ஹெச்.ராஜா, பஞ்சமி நில மீட்புப் போராட்டத்துக்கு திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

பட்டியலின மக்களுக்கான சிறப்பு நிதி ஒதுக்கீட்டைத் திருப்பி அனுப்பியதாக தமிழக அரசைக் கண்டித்து அம்பேத்கர் சிலையிடம் மனு அளிக்கும் பா.ஜ.க-வின் போராட்டத்தில் கலந்துகொள்ள ஹெச்.ராஜா நேற்று மதுரை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய அரசு பட்டியல் சமுதாய மக்களுக்கு ஒதுக்கிய சிறப்புத் திட்ட நிதி, துணைத்திட்ட நிதியை முறையாகப் பயன்படுத்தாமல், தமிழக அரசு திருப்பி அனுப்பியதோடு மாற்று திட்டங்களுக்கும் பயன்படுத்தியிருக்கிறது.
தமிழக அரசு பட்டியலின வகுப்பினருக்கு வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்தி சமத்துவபுரம் கட்டியிருக்கிறது. இதுவரை பட்டியல் சமூகத்துக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 10,446 கோடி ரூபாயைச் செலவுசெய்யாமல் திருப்பி அனுப்பிவைத்து மோசடி செய்திருக்கின்றனர்.
சமூகநீதி, பாதுகாப்பு எனக் கூறி பட்டியலின மக்களுக்குத் துரோகத்தை தமிழக அரசு செய்திருக்கிறது. அதனால் சட்டமேதை அம்பேத்கர்தான் இவர்களைத் தட்டிக் கேட்க வேண்டும், மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட நிதி அடங்கிய பட்டியலை அம்பேத்கர் சிலையிடம் வழங்கியிருக்கிறோம்.
திராவிடக் கட்சிகள், பட்டியலின மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து அநீதி இழைக்கின்றன. பட்டியலின மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது, பட்டியலினத்தவர்கள் மீதான தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தி.மு.க-வுடன் ஏன் இன்னும் இருக்கிறார்?
வேங்கைவயல் சம்பவத்தில் திருமாவளவன் அங்கு சென்று ஒருநாள்கூட போராட்டத்தில் ஈடுபடவில்லை. குற்றவாளிகளைக் கைதுசெய்யும்வரை நகர மாட்டேன் என்று காத்திருப்புப் போராட்டம் நடத்திருக்கலாமே, ஏன் செய்யவில்லை... ஏனென்றால், அந்தச் சம்பவத்தில் தி.மு.க கவுன்சிலர் ஈடுபட்டதாகக் கூறுகிறார்கள்.
திருமாவளவனுக்குப் பட்டியலின மக்கள்மீது அக்கறை இல்லை என்பதைப் பட்டியல் சமூக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பட்டியல் சமூகத்தினருக்கு ஆதிதிராவிடர் என்ற பெயர் தவறானது. ஆதித்தமிழர் அல்லது சாம்பவர் என அழைக்க வேண்டும். 1926-ம் ஆண்டு அரசாணையில் தெலுங்கு பேசுகிற ஹரிஜன மக்கள் `ஆதி தெலுங்கர்' என்றும், தமிழ் பேசக்கூடிய ஹரிஜன மக்கள் `ஆதிதிராவிடர்' என்றும் அழைக்கப்படுவார் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதை எதிர்த்துப் போராட்டம் நடத்துங்கள்.
பா.ஜ.க தேர்தல் அறிக்கையில், `தமிழகத்திலுள்ள பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்’ எனக் கூறியிருக்கிறது. முரசொலி கட்டடம் தொடங்கி தமிழக முழுவதுமுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்க பா.ஜ.க அறைகூவல் விடுக்கிறது. இதை திருமாவளவன் ஆதரிப்பாரா?

தமிழகத்திலுள்ள பஞ்சமி நிலங்கள் அனைத்தையும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு உரியவர்களிடம் வழங்க பாரதிய ஜனதா கட்சி நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க திருமாவளவனை நேரடியாகவே அழைக்கிறோம். ஆர்.எஸ்.பாரதி பேசாமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் பேசாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்வோம்" என்றார்.