Published:Updated:

``விவசாயிகள் படுகொலை பற்றி குஷ்பூ, வருண் காந்தியிடமே விளக்கம் கேளுங்கள்!'' -கடுகடுக்கும் ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா

`உ.பி விவசாயிகள் படுகொலை' குறித்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், இந்தப் படுபாதக செயல்களைக் கண்டித்து பா.ஜ.க தலைவர்கள் சிலரும் தங்கள் எதிர்ப்பு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Published:Updated:

``விவசாயிகள் படுகொலை பற்றி குஷ்பூ, வருண் காந்தியிடமே விளக்கம் கேளுங்கள்!'' -கடுகடுக்கும் ஹெச்.ராஜா

`உ.பி விவசாயிகள் படுகொலை' குறித்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், இந்தப் படுபாதக செயல்களைக் கண்டித்து பா.ஜ.க தலைவர்கள் சிலரும் தங்கள் எதிர்ப்பு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஹெச்.ராஜா

உத்தரப்பிரதேசத்தில், போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை ஏற்றிப் படுகொலை செய்த பா.ஜ.க-வினருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொந்தளித்துக் கொண்டிருக்க... இந்தப் படுபாதக செயலுக்கு எதிராக பா.ஜ.க தலைவர்களே எதிர்ப்பு தெரிவித்து வருவது யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்!

'மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை குழிதோண்டி புதைக்கும்விதமாகவும் அமைந்திருக்கிறது' எனக்கூறி நாடு முழுக்க போராட்டங்கள் வலுத்து வருகின்றன. தலைநகர் டெல்லியிலேயே வரலாறு காணாத வகையில், இந்திய விவசாயிகள் நடத்திவரும் நீண்ட நெடிய போராட்டம், உலக தலைவர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

விவசாயிகள் மீது மோதும் வாகனம்
விவசாயிகள் மீது மோதும் வாகனம்

அதேசமயம், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெறாது, முரட்டுப் பிடிவாதம் காட்டிவரும் மத்திய பா.ஜ.க அரசின் நடவடிக்கைகள் உலக நாடுகளை இந்தியாவை நோக்கி கேள்வி எழுப்ப வைத்திருக்கிறது.

இந்த நிலையில்தான், ``விவசாயிகள் போராட்டத்தை அவர்களாகவே முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இல்லையென்றால் இரண்டே நிமிடங்களில் நானே போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிடுவேன்'' என்று சினிமா பாணியில் பஞ்ச் டயலாக் பேசியிருந்தார் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல், உதார்விட்டிருந்த அமைச்சரின் அடாவடிப் பேச்சு, விவசாயிகளை மேலும் கொதிப்படையவைத்தது. இதையடுத்து, உத்தரப்பிரதேசத்திலுள்ள லக்கிம்பூர் பகுதிக்கு, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்த அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவுக்கு எதிராக உ.பி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். விவசாயிகளின் இந்த எதிர்ப்பு அமைச்சரது ஆதரவாளர்களை கோபமடையச் செய்தது. இந்த நிலையில்தான், அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா போராடிக்கொண்டிருந்த விவசாயிகள் மீது காரை ஏற்றிப் படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் படுபாதக சம்பவத்தில், விவசாயிகள் தரப்பில் 8 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றிப் படுகொலை செய்கிற வீடியோ, பார்ப்பவர்களை பதறவைக்கிறது. இந்த வீடியோவை ராமன் காஷ்யப் என்ற ஊடகவியலாளர் பதிவு செய்ததாகவும், அதனாலேயே எதிரிகள் அவரை சுட்டுக் கொன்றுவிட்டதாகவும் செய்திகள் பரபரக்கின்றன.

அஜய் குமார் மிஸ்ரா
அஜய் குமார் மிஸ்ரா

நெஞ்சைப் பதறவைக்கும் வகையில், வெளியாகிவரும் உ.பி விவசாயிகள் படுகொலை செய்திகளால் நாடே அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறது. ஆனால், ``என் மகன் யாரையும் கார் ஏற்றிக் கொலை செய்யவில்லை. நானும் என் மகனும் நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்த இடத்தில்தான் இருந்தோம். மேலும் சம்பவத்தில் 4 பா.ஜ.க-வினரும் இறந்துபோயுள்ளனர்'' என அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளார். சம்பவத்தில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் ராமன் காஷ்யப் பெயரையும் இறந்துபோன பா.ஜ.க-வினரின் பெயர் பட்டியலில் இணைத்திருப்பதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த நிலையில், அமைச்சரது விளக்கத்தை ஏற்காத எதிர்க்கட்சிகள் அமைச்சர் மற்றும் பா.ஜ.க-வினருக்கு எதிராக போராட்டம் நடத்திவருகின்றன. இந்தநிலையில், பாதிப்பட்ட விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தியை உ.பி காவல்துறை கைது செய்து காவலில் வைத்தது. இதையடுத்து மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கையை எதிர்த்து நாடெங்கிலும் எதிர்ப்புக்குரல்கள் எழத்தொடங்கின.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தியும், உ.பி விவகாரத்தின் பின்னணியில் அரங்கேற்றப்பட்டுவரும் அரசியல் நடவடிக்கைகளை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளதோடு, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளையும் நேரில் சந்திக்கத் திட்டமிட்டு உத்தரப் பிரதேசம் விரைந்தார். ஆனால், லக்னோ விமான நிலையத்திலேயே அவரை காவலர்கள் வழி மறித்ததையடுத்து, உ.பி அரசுக்கு எதிராக தர்ணா செய்துவருகிறார் ராகுல்காந்தி.

குஷ்பூ - வருண் காந்தி
குஷ்பூ - வருண் காந்தி

இப்படி 'விவசாயிகள் படுகொலை' செய்திகள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களோடு பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், இந்தப் படுபாதக செயல்களைக் கண்டித்து பா.ஜ.க தலைவர்கள் சிலரும் தங்கள் எதிர்ப்பு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பூ, 'உ.பி-யில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொன்றது கடுமையான குற்றம். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மனித உயிரைவிட முக்கியமானது வேறு எதுவும் இல்லை' என்று கண்டித்துள்ளார்.

பா.ஜ.க எம்.பி-யான வருண் காந்தி, 'விவசாயிகள் மீது மோதிய கார் உரிமையாளர்களைக் கைது செய்யவேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளார். விவசாயிகளை கார் ஏற்றிக் கொல்லும் வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்து கருத்து தெரிவித்துள்ள வருண் காந்தி, 'விவசாயிகள் மீது வாகனங்கள் வேண்டுமென்றே மோதும் வீடியோ யாரையும் கலங்க வைக்கும். எனவே, இந்த வீடியோவையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, விவசாயிகள் மீது மோதிய கார்களின் உரிமையாளர்களையும் காரில் அமர்ந்திருந்தவர்களையும் போலீஸார் கைது செய்யவேண்டும்' என்று குமுறியுள்ளார்.

யோகி ஆதித்யநாத் - நரேந்திர மோடி
யோகி ஆதித்யநாத் - நரேந்திர மோடி

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க-வினரால் அரங்கேற்றப்பட்டுள்ள இந்தக் கொடுஞ்செயலுக்கு எதிராகச் சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்புக் குரல்கள் வலுத்துவரும் வேளையில், இதுகுறித்து தமிழக பா.ஜ.க-வின் மூத்த தலைவர் ஹெச்.ராஜாவிடம் விளக்கம் கேட்டோம்... ''யார் கருத்து தெரிவித்திருக்கிறார்களோ அவர்களிடமே கேளுங்கள்... மற்றபடி மற்றவர்கள் கருத்துகளுக்கு நான் விளக்கம் சொல்ல முடியாது. மேலும், தற்போது இந்த சம்பவம் குறித்து விசாரித்தறிவதற்கான நீதி விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.