Published:Updated:

``மது வருமானத்தில், ருசி கண்டுவிட்டது தமிழ்நாடு!'' - பா.ஜ.க இல.கணேசன்

இல.கணேசன்
இல.கணேசன்

``தமிழக அரசு மது விற்பனையில் ருசி கண்டுவிட்டது'' என்கிறார் இல.கணேசன்.

கொரோனா ஊரடங்கை அறிவித்ததில் ஆரம்பித்து தொடர்ந்து அதன் ஒவ்வொரு நடவடிக்கைக்காகவும் மத்திய பா.ஜ.க அரசு மீது, எதிர்க்கட்சிகளின் விமர்சனக் கணைகள் பாய்ந்துகொண்டே இருக்கின்றன.

பெட்ரோல் விலையேற்றம், புலம்பெயர் தொழிலாளர் பிரச்னை, மலர் தூவல் என சமீபத்திய விமர்சனங்களுக்கு விளக்கம் கேட்டு, தமிழக பா.ஜ.க-வின் மூத்த தலைவர் இல.கணேசனிடம் பேசினோம்...

இல.கணேசன்
இல.கணேசன்

``சுகாதாரப் பணியாளர்களுக்குத் தேவையான நோய்த்தடுப்பு வசதிகளை முழுமையாகச் செய்துகொடுக்க முடியாத மத்திய அரசு, ஹெலிகாப்டர் மூலம் பூ மழை பொழிந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறதே..?''

``இது வேறு; இது வேறு. குறைகள் சொல்வதாக இருந்தால் நிறைய குறைகள் சொல்லலாம். தேவைகளைக் கேட்கலாம், கோரிக்கை வைக்கலாம். சுகாதாரப் பணியாளர்களைப் பாராட்ட வேண்டும்; கௌரவப்படுத்த வேண்டும்; உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் பூ மழை தூவப்பட்டது. எனவே, இதை அதனோடு ஒப்பிட்டுப்பார்த்து கொச்சைப்படுத்தக்கூடாது.

கை தட்டினால் சரியாகிவிடுமா, விளக்கேற்றினால் நோய் போய்விடுமா என்றெல்லாம் கேட்பது மாதிரிதான் இதையும் விமர்சனம் செய்கிறார்கள். உணர்ச்சியைப் புரிந்துகொள்ளாதவர்கள், வேண்டுமென்றே திட்டமிட்டு செய்கின்ற இந்த விமர்சனங்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை!''

``கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் இந்நேரத்திலும், பெட்ரோல் - டீசல் விலை குறைக்கப்படாதது, மக்களைப் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை என்பதைத்தானே காட்டுகிறது?''

Representational Image
Representational Image

``ஏற்கெனவே இதுகுறித்து தெளிவுபடுத்தியிருக்கிறோம். அதாவது, நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி வருவதற்கு முன்பு ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள், பெட்ரோலியத் துறையில் கோடிக்கணக்கிலான ரூபாய்களைக் கடனாக வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அப்படி கடன் சுமையை ஏற்றிவைத்தவர்களே இப்போது, இந்தக் கேள்வியையும் கேட்கிறார்கள். ஆனாலும்கூட தற்போதைய மத்திய அரசு, பல்வேறு முயற்சிகளை எடுத்து இந்தக் கடன் சுமைகளையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்துவருகிறார்கள்.

சமீபத்திய பெட்ரோல் விலையேற்றம் என்பது தமிழக அரசு விதித்திருக்கும் மதிப்புக்கூட்டு வரியினால் ஏற்பட்டது. எப்படியிருந்தாலும் இந்தக் கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு, பெட்ரோல் விலையில் நிச்சயம் மக்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்!''

`சென்னையில் நோய்த்தொற்று அதிகரிக்க இவைதான் காரணம்!’ - பட்டியலிடும் முதல்வர் பழனிசாமி

``தமிழ்நாட்டில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை தமிழக பா.ஜ.க கண்டிக்கிறது. ஆனால், பா.ஜ.க ஆளுகின்ற கர்நாடக மாநிலத்தில் ஏற்கெனவே மதுக்கடைகளைத் திறந்துவிட்டார்களே..?''

மதுபானக் கடை
மதுபானக் கடை

``பாரதத்தில் மதுவிலக்கை அமல்படுத்திய 2 மாநிலங்கள் என்றால், அது குஜராத்தும் தமிழ்நாடும் மட்டும்தான். இதில், தமிழ்நாட்டில் மீண்டும் மதுவைக் கொண்டுவந்து, பள்ளி மாணவர்களைக்கூட குடிப்பழக்கத்துக்கு ஆளாக்கி, நாட்டையே குட்டிச் சுவராக்கி விட்டார்கள். காரணம், அரசாங்கத்துக்கு வருமானம் வருகிறது என்பதால்தான். அதாவது, மக்களுக்கு இது வேண்டுமா வேண்டாமா என்பது முக்கியமல்ல... அரசாங்கத்துக்கு வேண்டும். ஏனெனில், இந்த வருமானத்தில் ருசி கண்டுவிட்டது அரசாங்கம். அதை இழக்க விரும்பவில்லை. ஆக, வருமானத்தைப் பார்க்கிற அரசு, போகிற மானத்தைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால், காந்தி பிறந்த குஜராத்தில் இன்றும் மதுவிலக்கு தொடர்கிறது.''

``மதுக்கடைகளைத் திறப்பதால், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இது இப்போதைய சூழலில் நல்லதல்ல என்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர். இது கர்நாடகாவுக்கும் பொருந்தும்தானே?''

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

``பாரத நாடு முழுக்கவே மதுவிலக்கு அமலில் இல்லை. குஜராத், தமிழ்நாடு என 2 மாநிலங்களில் மட்டும்தான் அமலில் இருந்தது. அதிலும் தொடர்ந்து தக்கவைக்க முடியாமல் தமிழகத்தில் விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டது என்பதையெல்லாம் ஏற்கெனவே நான் தெளிவாகச் சொல்லிவிட்டேன். ஏன் கர்நாடகா மாநிலத்தை மட்டும் குறிப்பிட்டுக் கேட்டு, அநாவசியமாக மாட்டிவிட நினைக்கிறீர்கள்? நான் கர்நாடகா மாநிலத்தைப் பற்றிப் பேசவேயில்லை!

நாடு முழுக்கவே மதுவிலக்கு அமலில் இல்லாதிருந்த சூழலில், மதுவிலக்கை அமல்படுத்திய மாநிலமாக இருந்த தமிழ்நாட்டில், மறுபடியும் மதுவைக் கொண்டுவந்து கோட்டை விட்டுவிட்டோமே... என்ற ஆதங்கத்தில்தான் கேள்வி எழுப்புகிறோம். அதிலும் கூடுதல் அம்சமாக, தமிழ்நாட்டில் மட்டும்தான் அரசே மதுக்கடைகளை நடத்திவருகிறது.''

``பக்கத்து மாநிலங்களில் மதுக்கடைகளைத் திறந்துவிட்டதாலேயே தமிழ்நாட்டிலும் திறக்கவேண்டிய கட்டாயமாகிவிட்டது என்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு. மத்திய அரசு நினைத்தால், நாடு முழுக்க மதுவிலக்கை அமல்படுத்த முடியும்தானே...''

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

``இது அபத்தமான வாதம். இதற்கு முன்பும்கூட இப்படி சொல்லித்தான் மதுக்கடைகளைத் திறந்தார்கள். மற்ற மாநிலங்களில் எல்லாம் தனியார்கள்தான் மதுக்கடைகளை நடத்திவருகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் அரசாங்கமே `டாஸ்மாக்' என்ற பெயரில் கடை நடத்திவருவதோடு `வருமான ருசி'யும் கண்டுவிட்டார்கள். எனவே, மக்களுக்கு மதுக்கடை தேவையா, தேவையில்லையா என்பதெல்லாம் இங்கே முக்கியம் இல்லை. ஏற்கெனவே வருமானத்தைப் பார்த்துவிட்ட அரசாங்கத்துக்குத் தேவையாக இருக்கிறது. எனவே, இதில் மத்திய அரசைக் குறைகாண நீங்கள் முயற்சிசெய்ய வேண்டாம்!''

`ஒரு மீட்டர் தனிமனித இடைவெளி; குடையுடன் வந்தால்தான் மதுபானம்!’ - திருப்பூர் கலெக்டர் அதிரடி

``வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கான ரயில் கட்டண விஷயத்தில், காங்கிரஸ் கட்சி கொடுத்த நிர்பந்தத்தினால்தானே மத்திய பா.ஜ.க அரசு மனம் மாறியது?''

சோனியா காந்தி - ராகுல் காந்தி
சோனியா காந்தி - ராகுல் காந்தி

``அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. `வெளிமாநிலத் தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கலாம்; இதற்கான செலவு தொகையில் மத்திய - மாநில அரசுகளின் பங்கு என்ன...' என்பது குறித்தெல்லாம் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது. இறுதியில், `தேசிய அரசாங்கம் 85 சதவிகித கட்டணத்தை ஏற்றுக்கொள்வது; மாநில அரசு மீதமுள்ள 15 சதவிகித தொகையை ஏற்றுக்கொள்வது' என முடிவு செய்யப்பட்டது. இதையெல்லாம் முன்னரே தெரிந்துகொண்ட காங்கிரஸ் கட்சி, வேண்டுமென்றே விளம்பரத்துக்காக `செலவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்' என்று அறிவித்து அரசியல் செய்துவிட்டார்கள். மற்றபடி அந்தக் கட்சியைப் பார்த்தெல்லாம் நாங்கள் அச்சப்படவில்லை!''

அடுத்த கட்டுரைக்கு