Published:Updated:

மாணவர் அரசியல்... முந்தும் பா.ஜ.க... பின்தங்குகிறதா தி.மு.க?

உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி

தி.மு.க-வில் அண்ணாதுரை முதலமைச்சர் ஆவதற்கு முன்பு எத்தனை கல்வி நிலையங்களில் பேசியிருக்கிறார்...

மாணவர் அரசியல்... முந்தும் பா.ஜ.க... பின்தங்குகிறதா தி.மு.க?

தி.மு.க-வில் அண்ணாதுரை முதலமைச்சர் ஆவதற்கு முன்பு எத்தனை கல்வி நிலையங்களில் பேசியிருக்கிறார்...

Published:Updated:
உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி

“நாம் மத்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து போராடுகிறோம். நம்மீது அடக்குமுறையை ஏவுவதோ தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு அரசே இந்தி எதிர்ப்பு அரசாக மாறினால் ஒழிய, நாம் வெல்லவே முடியாது” என்று 1965-ல் தமிழ்நாடு மாணவர்கள் எடுத்த முடிவுதான், 1967-ல் தி.மு.க ஆட்சி அமைவதற்கு முக்கியக் காரணம். அதற்கு முன்பே நூற்றுக்கணக்கான கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்கள் மத்தியில் அறிஞர் அண்ணா உள்ளிட்ட தி.மு.க தலைவர்கள் அதற்கான விதையைத் தூவியிருந்தார்கள்.

இன்று வரலாறு தலைகீழாகியிருக்கிறது. மாணவர் எழுச்சியால் ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற திராவிடக் கட்சிகள், வன்முறையைக் காரணம் காட்டி கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தலுக்குத் தடைவிதித்தன. விளைவாக, அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒரு தலைமுறையே இன்று உருவாகி யிருக்கிறது. இளைஞர்கள் மத்தியில் போராட்ட உணர்வு பரவுகிறது என்றால், ஆட்சியாளர்கள் முதலில் செய்வது கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் நீண்டகால விடுப்பு விடுவதுதான்.

மாணவர் அரசியல்... முந்தும் பா.ஜ.க... பின்தங்குகிறதா தி.மு.க?

இந்தச் சூழலில் பா.ஜ.க-வோ மாணவர்களை அரசியல்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கல்லூரி நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்கிறார்கள். போதாக்குறைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி `பட்டமளிப்பு உரை’ என்ற பெயரில் நேரடியாகவே பா.ஜ.க சித்தாந்தங்களை மாணவர்கள் மனதில் விதைத்துவிட்டுச் செல்கிறார். தவிர, ஏ.பி.வி.பி போன்ற மாணவர் அமைப்பும் தீயாய் வேலை செய்கிறது. ராகுல் காந்தி, உதயநிதி போன்றோரும் தமிழ்நாட்டு மாணவர்கள் மத்தியில் பேசியிருக்கிறார்கள் என்றாலும், பா.ஜ.க அளவுக்கு இந்த விஷயத்தில் அவர்கள் தீவிரம் காட்டவில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

“மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசாங்கம், ஆர்.எஸ்.எஸ் ஆலோசனைப்படி கல்விக்கூடங்களில் ஊடுருவுவதற்கான காரணம், ஒற்றைக் கலாசாரம், ஒற்றைப் பண்பாடு, ஒரே மதம், ஒரே இனம் என்கிற தங்கள் சித்தாந்தங்களுக்கு ஏற்ப பண்பாட்டுத் தளத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதற் காகத்தான்” என்கிறார் கல்வியாளரும், சென்னை பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினருமான ப.சிவக்குமார். இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “இன்றைய இளைஞர்கள் எந்தக் கொள்கைப் பின்னணியும் இல்லாமல், எழுதப்படாத கரும்பலகைபோல் இருப்பார்கள். அவர்களிடம் புதிய அரசியல் கருத்துகளைக் கொண்டு செல்வதும், பயிற்சி அளிப்பதும் எளிது. எனவே, அவர்களைக் கவர பா.ஜ.க முயல்கிறது. நேரடியாக, வெளிப்படையாகத் தங்கள் சித்தாந்தங்களைச் சொன்னால், மாணவர்கள் வெறுத்து ஒதுக்கிவிடுவார்கள் என்பதால் ‘புதிய கல்விக் கொள்கை’ என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள்.

மாணவர் அரசியல்... முந்தும் பா.ஜ.க... பின்தங்குகிறதா தி.மு.க?
மாணவர் அரசியல்... முந்தும் பா.ஜ.க... பின்தங்குகிறதா தி.மு.க?

கல்வியானது மனிதநேயமிக்கதாக இருப்பதோடு, ஏன், எதற்கு, எப்படி என்று மாணவர்களைப் பகுத்தறிவோடு கேள்வி கேட்க வைப்பதாக இருக்க வேண்டும். எல்லா மதங்களையும் சமமாகப் பார்ப்பதோடு, சாதியரீதியான ஒடுக்குமுறைகளை எதிர்க்க வேண்டும். இந்தச் சிந்தனைகள் தமிழ்நாட்டில் பல காலமாக இருந்துவருகின்றன. இந்த விஷயங்களைச் சிதைத்தால்தான் பா.ஜ.க அரசை நிறுவுவது எளிமையாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கல்வி நிறுவனங் களுக்குச் செல்வதும், ஆளுநர் மாணவர்கள் மத்தியில் அரசியல் பேசுவதும் இந்தத் திட்டத்தைச் செயலாக்குவதற்குத்தான். மதுரை காமராசர் பல்கலை விவகாரத்தில், உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்தது போதுமான எதிர்வினையல்ல. மாணவர்கள் மத்தியில் பா.ஜ.க செய்யும் அரசியலை, அதே மாணவர்கள் மத்தியிலேயே தி.மு.க உடைத்தெறிய வேண்டும். தி.மு.க வலிமையாக எதிர்த்தால்தான், முற்போக்கு, இடதுசாரி சக்திகள் மற்ற மாணவர் இயக்கங்கள், சமூக நல்லிணக்கத்தை விரும்புவோரெல்லாம் அவர்கள் பின் நிற்பார்கள்” என்றார்.

அதேநேரத்தில், “ஆளுநர் எங்கே அரசியல் செய்கிறார்... பட்டமளிப்பு விழாவில் ஓர் ஆளுநர் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது?” என்ற கேள்விகளை முன்வைக்கிறார் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீநிவாசன். இது குறித்து நம்மிடம் பேசிய அவர், “ஆளுநருக்கும், கட்சி அரசியலுக்கும் சம்பந்தமில்லை. ‘இந்த தேசம் ஒன்று, தேசிய உணர்வு இளைஞர்களிடம் இருக்க வேண்டும், நதிகள் புனிதமானது’ என்று பேசும் ஆளுநர் கூட்டாட்சி முறை பற்றியும் பேசுகிறார். அதிலென்ன தவறு... ஆளுநர் பேசுவது சரியாக, வலிமையாக, எல்லோருக்கும் எளிதில் புரியும் வகையில் இருப்பதால்தான், ‘பேசக் கூடாது, பேசக் கூடாது’ என்கிறார்கள். ஆளுநரைத்தான் குறைசொல்ல முடிகிறதே தவிர, அவர் வைக்கும் வாதங்களுக்கு தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் பதில் சொல்ல முடியவில்லையே!

ப.சிவக்குமார்
ப.சிவக்குமார்
ராம ஸ்ரீநிவாசன்
ராம ஸ்ரீநிவாசன்

அண்ணாமலை விஷயத்துக்கு வருகிறேன். தி.மு.க-வில் அண்ணாதுரை முதலமைச்சர் ஆவதற்கு முன்பு எத்தனை கல்வி நிலையங்களில் பேசியிருக்கிறார்... அப்படி அண்ணாமலை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசிய, ‘ஏய் தாழ்ந்த தமிழகமே’ என்ற தலைப்பில் பேசியது இன்றும் புகழ்பெற்ற பேச்சாக இருக்கிறது. அண்ணாவுக்கு ஒரு நியாயம்... அண்ணாமலைக்கு ஒரு நியாயமா... தமிழ்நாட்டில் எந்தக் கல்வி நிறுவனத்திலும் அவர்கள் அழைப்பின் பேரில் சென்று பேசுவதற்கு அண்ணாமலைக்கு உரிமை இருக்கிறது. பா.ஜ.க ஒன்றும் வலுக்கட்டாயமாகத் தன்னைத் திணித்துக்கொள்ளவில்லையே” என்கிறார்.

உங்கள் வாழ்வுக்காக மாணவர்களின் வாழ்வைப் பாழாக்கிவிடாதீர்கள் அரசியல்வாதிகளே... அது மாணவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல... இந்தியாவின் எதிர்காலமும்தான்!