அலசல்
Published:Updated:

அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - சொல்கிறார் வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
வானதி சீனிவாசன்

திருமாவளவன் இருக்கும் தி.மு.க கூட்டணி என்பது முழுக்க முழுக்க பட்டியலின மக்களுக்கு எதிரான கூட்டணி. திருமாவளவனையே பல்வேறு சந்தர்ப்பங்களில் தி.மு.க கூட்டணியினர் மதிப்பதில்லை

அ.தி.மு.க - பா.ஜ.க இடையேயான வார்த்தைப்போர் தொடர்ந்துவரும் நிலையில், ‘தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிலை’ குறித்த கேள்விகளோடு பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனிடம் பேசினேன்...

“தமிழ்நாட்டில், பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் தொடர்ந்து மோதிக்கொண்டே இருக்கின்றனவே... தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடருமா?”

“தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர வேண்டுமென்பதில் தேசியத் தலைமை உறுதியாக இருக்கிறது. சமீபத்தில் கிருஷ்ணகிரிக்கு வந்த தேசியத் தலைவர்கூட எங்களிடம், `தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் நல்ல முறையில் நடப்பதற்கு நாம் உதவிசெய்ய வேண்டும்’ என எங்களுக்குச் சில அறிவுரைகளையும் கூறிச் சென்றிருக்கிறார்.”

‘‘ஆனால், ‘ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ.க-வினாலேயே சிறுபான்மையினர் வாக்குகளை இழந்துவிட்டதாக’ செங்கோட்டையன் சொல்கிறாரே..?’’

“ஒருகாலத்தில் பா.ஜ.க சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி, அவர்களது வாக்குகள் பா.ஜ.க-வுக்குக் கிடைக்காது என்கிற நிலைமை இருந்தது. ஆனால், இப்போது அது பெருமளவில் மாறிக்கொண்டிருக்கிறது. இதற்குச் சமீபத்திய உதாரணம், வடகிழக்கு மாநிலத் தேர்தல்கள். 99% கிறிஸ்தவர்கள் இருக்கும் நாகாலாந்திலும் மேகாலயாவிலும் இன்றைக்கு பா.ஜ.க கூட்டணியில்தான் ஆட்சி அமைந்திருக்கிறது. சிறுபான்மையின மக்கள் வாக்களிக்காமல் இது நடந்திருக்குமா... இதெல்லாம் ஒரு மாயை. இஸ்லாமியர்கள் அதிகமிருக்கும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலேயே பா.ஜ.க-வை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். தமிழகத்திலும் இந்தச் சூழல் மாறிக்கொண்டிருக்கிறது. இதை அ.தி.மு.க-வினர் புரிந்துகொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.”

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

“ ‘பா.ஜ.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க விலக வேண்டும்’ என்று திருமாவளவனும் தொடர்ந்து சொல்லிவருகிறாரே?”

“திருமாவளவன் இருக்கும் தி.மு.க கூட்டணி என்பது முழுக்க முழுக்க பட்டியலின மக்களுக்கு எதிரான கூட்டணி. திருமாவளவனையே பல்வேறு சந்தர்ப்பங்களில் தி.மு.க கூட்டணியினர் மதிப்பதில்லை. எனவே, பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திருமாதான் வர வேண்டும். மேலும், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ‘கூட்டணி தொடர்கிறது’ என்று தெளிவு படுத்தியிருக்கிறார்களே.”

“ ‘நான் தலைவன்... மேனேஜர் இல்லை’ என்பதோடு, ஜெயலலிதாவோடு தன் குடும்ப உறுப்பினர்களை ஒப்பிட்டெல்லாம் அண்ணாமலை பேசிவருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“இது போன்ற கேள்விகளுக்கான விளக்கத்தை ஏற்கெனவே அவர் தெளிவாகச் சொல்லிவிட்டார். அதற்கு மேல் அர்த்தம் வேண்டுமென்றால், அவரிடம்தான் கேட்க வேண்டும். இதற்காக நான் பதவுரை எழுத முடியாது; பொழிப்புரை சொல்ல முடியாது!”

“ ‘அரசியலில் பொறுப்பும் பொறுமையும் வேண்டும்’ என்று அண்மையில் நீங்கள் பேசியிருப்பது அண்ணாமலையை மனதில் வைத்துத்தானா?”

“பெண்கள் அரசியலுக்கு வரும்போது எவையெல்லாம் செய்ய வேண்டும் என்கிற அர்த்தத்தில்தான், ‘அரசியலில் பொறுப்பும் பொறுமையும் அவசியம்’ என்று நான் பேசினேன். பெண்கள் எப்போதும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். அப்படி உணர்ச்சிவசப்பட்டால் அரசியலில் நீடிப்பது கஷ்டம் என்ற அர்த்தத்தில் பேசினேன். இதை ‘அவருக்குச் சொன்னேன், இவருக்குச் சொன்னேன்’ என நீங்கள் புரிந்துகொண்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது.”

“ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை, காலம் கடந்து திருப்பியனுப்பிய ஆளுநரின் மெத்தனப்போக்கை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?’’

“ஒவ்வொரு நாளும் உயிர்களைப் பறிக்கும் ஆன்லைன் ரம்மியைக் கட்டாயம் தடைசெய்ய வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இதற்கு முன்பாக இருக்கக்கூடிய வழக்குகளின் தீர்ப்புகளை முதலில் நாம் பார்க்க வேண்டும். ஏனெனில், நாம் புதிதாகக் கொண்டுவரக்கூடிய சட்டத்தை, நாளை நீதிமன்றங்கள் ரத்துசெய்துவிடக் கூடாது. அதனால்தான் ஆளுநரும் அந்த மசோதாவை, எல்லாவிதச் சட்டச் சிக்கல்களையும் தீர்க்கக்கூடிய ஒரு விஷயமாக எதிர்பார்க்கிறார். இது புரியாமல், ஆளுநரைக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!”

‘‘தமிழ்நாட்டில், பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பியதே பீகார் பா.ஜ.க-வினர்தானே... உண்மைநிலையை நீங்கள் பீகார் பா.ஜ.க-வினரிடம் விளக்கியிருக்க வேண்டும்தானே?”

“ ‘தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது. எந்தவிதமான தவறான எண்ணத்தையும் உருவாக்கிட வேண்டாம்’ என்று நான்கு மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினேன். எங்கள் கட்சியின் டெல்லி தலைவர்களிடமும் பேசினேன். சமீபத்தில்கூட உத்தரப் பிரதேசத்துக்குச் சென்றபோது அந்த மாநில முதல்வரிடமும் இது குறித்துப் பேசியிருக்கிறேன். அதேசமயம், அண்மையில் என் தொகுதியில்கூட வடமாநிலத் தொழிலாளர் ஒருவர்மீது தாக்குதல் நடந்திருக்கிறது. தி.மு.க அரசு இதுபோன்ற நிகழ்வுகளில், ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள்? அதனால் வந்த விளைவுகள்தான் இவையெல்லாம்!”