அலசல்
Published:Updated:

‘உங்களுக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா?’ - இலவச வாக்குறுதிகளில் பா.ஜ.க-வின் இரட்டை வேடம்!

மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி

டி.வி., மிக்ஸி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட ஆடம்பர இலவசங்களைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். கல்விக்காகவும், உணவுத் தேவைக்காகவும் கொடுக்கப்படும் இலவசங்களை நாங்கள் எதிர்ப்பதில்லை.

2022-ம் ஆண்டு நடைபெற்ற ஐந்து மாநிலத் தேர்தலின்போது, இலவசங்களுக்கு எதிராகக் கடுமையாகப் பேசிவந்தார் பிரதமர் மோடி. ஆனால், இந்த ஆண்டு திரிபுரா சட்டமன்றத் தேர்தலையொட்டி, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தங்களது வாக்குறுதிகளில் இலவசங் களை அள்ளித் தெளித்திருக்கின்றனர். `இவர்கள் இருவரும் பிரதமர் மோடிக்கே தெரியாமல் இலவச வாக்குறுதிகளை அறிவித்திருக் கின்றனரா அல்லது ஐந்து மாநிலத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க தனது கொள்கையை மாற்றிக்கொண்டதா?’ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

‘உங்களுக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா?’ - இலவச வாக்குறுதிகளில் பா.ஜ.க-வின் இரட்டை வேடம்!

இலவச எதிர்ப்பும்... பா.ஜ.க-வின் பல்டியும்!

தேர்தல் வாக்குறுதிகளில் இலவச அறிவிப்புகளுக்குத் தடைவிதிக்கக் கோரி, பா.ஜ.க-வைச் சேர்ந்த அஸ்வினி உபத்யாய உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடுத்திருந்தார். எதிர்க்கட்சிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் `இலவசங்களுக்குத் தடைவிதிக்கக் கூடாது’ என வாதிட்டனர். ஆனால், மத்திய அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்திலும், `இலவசங்கள் கூடாது’ என்றே சொல்லப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தலின்போது, பிரதமர் தொடங்கி பா.ஜ.க நிர்வாகிகள் வரை இலவசங்களுக்கு எதிராகவே பேசிவந்தனர். ஆனால் அடுத்து நடந்த இமச்சாலப் பிரதேசத் தேர்தலில், அந்தர் பல்டி அடித்து இலவச வாக்குறுதிகளை வாரி வழங்கியிருந்தது பா.ஜ.க. `இலவச அறிவிப்புகள் குறித்து இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்’ என்று எச்சரித்த பா.ஜ.க., இமாச்சலில் இளைஞர்களைக் குறிவைத்தே இலவச அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டர், பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு மூன்று காஸ் சிலிண்டர் எனப் பல்வேறு இலவச அறிவிப்புகள் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. குஜராத்தில் பெருமளவு இலவசங்களை அறிவிக்காவிட்டாலும், `4,000 கிராமங்களுக்கு இலவச வைஃபை’, `அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள்’ உள்ளிட்ட சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருந்தன.

இரட்டை வேடமா?

தற்போது திரிபுராவிலும், கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர், 50,000 இளைஞர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன், பழங்குடியினருக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை எனப் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில் இடம்பிடித்திருக்கின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களில் பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 மதிப்பிலான பத்திரம், உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு இரண்டு இலவச காஸ் சிலிண்டர் ஆகிய வாக்குறுதிகள் திரிபுரா, மேகாலயா ஆகிய இரு மாநிலங்களிலும் அளிக்கப் பட்டிருக்கின்றன. ``நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் இலவச வாக்குறுதிகளுக்கு எதிராக வாதாடிக்கொண்டே, இலவச வாக்குறுதிகளை அளித்து வாக்குகளைக் கவர நினைப்பது இரட்டை வேடம் இல்லையா?’’ என எதிர்க்கட்சிகள் பா.ஜ.க-வை நோக்கிக் கேள்வியெழுப்பியிருக்கின்றன.

‘உங்களுக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா?’ - இலவச வாக்குறுதிகளில் பா.ஜ.க-வின் இரட்டை வேடம்!

அரசியல் பார்வையாளர்கள் சிலர், ``25 ஆண்டுகளாக இடதுசாரிகள் ஆட்சி செய்துவந்த திரிபுராவில், 2018 தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, அங்கு ஆட்சியும் அமைத்தது பா.ஜ.க. தற்போது தேர்தல் நடைபெறவிருக்கும் மூன்று மாநிலங்களில் திரிபுராவில் மட்டுமே பெரும் பலம் பெற்றிருக்கிறது அந்தக் கட்சி. திரிபுராவில் ஆட்சியை இழந்தால், அது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாதிப்பை உண்டாக்கும் என நம்புகிறது பா.ஜ.க. இதற்கிடையில், பா.ஜ.க-வை வீழ்த்தும் எண்ணத்தில் திரிபுராவில் எதிரும் புதிருமாக இருந்த காங்கிரஸும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் கைகோத்திருக்கின்றன. புதுவரவான திப்ரா மோத்தா கட்சியும் சுமார் 20 இடங்களில் கடும் போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது. இவை தவிர, அங்கு உட்கட்சிப்பூசலும் பா.ஜ.க-வுக்குத் தலைவலியாக அமைந்திருக்கிறது. எனவேதான், இந்தத் தேர்தலில் வெற்றியைச் சாத்தியமாக்க இலவச வாக்குறுதிகளை நம்பிக் களமிறங்கியிருக்கிறது பா.ஜ.க’’ என்கின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு பா.ஜ.க-வின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டபோது, ``டி.வி., மிக்ஸி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட ஆடம்பர இலவசங்களைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். கல்விக்காகவும், உணவுத் தேவைக்காகவும் கொடுக்கப்படும் இலவசங்களை நாங்கள் எதிர்ப்பதில்லை. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள், பா.ஜ.க-வின் நிலைப்பாட்டை மக்களிடம் தவறாகக் கொண்டு சேர்க்க நினைக்கின்றன’’ என்றவரிடம், ``இளைஞர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக, திரிபுரா தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டிருக்கிறதே?’’ என்று கேட்டோம். அதற்கு, ``லேப்டாப் இல்லாத இளைஞர்கள் கல்வி கற்கத்தான் ஸ்மார்ட்போன் வழங்கப்படுகிறது’’ என்று சமாளித்தார்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களோ, ``வெற்றி வாய்ப்பு எளிதாக இருக்கும் மாநிலங்களிலும், வெற்றி வாய்ப்பே இல்லாத மாநிலங்களிலும் இலவசங்களை எதிர்க்கும் பா.ஜ.க., நெருக்கடியிலிருக்கும் மாநிலங்களில் இலவச வாக்குறுதிகளை அளித்துவருகிறது.

‘உங்களுக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா?’ - இலவச வாக்குறுதிகளில் பா.ஜ.க-வின் இரட்டை வேடம்!

கர்நாடகக் களமும் அவர்களுக்குச் சாதகமாக இல்லை என்பதால், அங்கும் தேர்தல் நேரத்தில் இலவச அறிவிப்புகளை பா.ஜ.க அள்ளி வீசும். சமீபத்தில், ஹஜ் புனிதப் பயணத்துக்கான மானியத்தை ரத்துசெய்தது மத்திய பா.ஜ.க அரசு. ஆனால், நாகாலாந்திலிருக்கும் கிறிஸ்தவர்களின் வாக்குகளைக் கவர, `இலவசமாக ஜெருசலேமுக்கு அழைத்துச் செல்வோம்’ என்று வாக்குறுதி அளித்திருக்கிறது. `எதிர்க்கட்சிகள் அறிவித்தால் இலவசம்; பா.ஜ.க அறிவித்தால் நலத்திட்ட உதவிகள்’ என்பார்கள்” என்று கொந்தளிக்கின்றனர்.

தி.மு.க செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவிடம் பேசியபோது, ``கடந்த ஆண்டு இலவசங்களைக் கடுமையாக எதிர்த்துவிட்டு, இந்த ஆண்டு பா.ஜ.க-வே இதுபோன்ற வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறது.

தேர்தல் நேரத்தில் வெற்றியடைவதற்காக எந்த எல்லைக்கும் பா.ஜ.க செல்லும் என்பதைத்தான் இது உணர்த்துகிறது. வடிவேலு சொல்லுவதுபோல, `உங்களுக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா? என்பதைப் போலத்தான் இருக்கிறது பா.ஜ.க-வின் நிலைப்பாடு!’’ என்றார்.