Published:Updated:

சசிகலா புஷ்பா வீட்டில் தாக்குதல்; அமைச்சர் கீதா ஜீவனின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற பாஜக-வினர்!

சசிகலா புஷ்பா ( எல்.ராஜேந்திரன் )

பா.ஜ.க-வின் மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பாவின் வீட்டைத் தாக்கிய தி.மு.க-வினரைக் கைதுசெய்ய வலியுறுத்தி, அமைச்சர் கீதா ஜீவனின் வீட்டை பா.ஜ.க-வினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

சசிகலா புஷ்பா வீட்டில் தாக்குதல்; அமைச்சர் கீதா ஜீவனின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற பாஜக-வினர்!

பா.ஜ.க-வின் மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பாவின் வீட்டைத் தாக்கிய தி.மு.க-வினரைக் கைதுசெய்ய வலியுறுத்தி, அமைச்சர் கீதா ஜீவனின் வீட்டை பா.ஜ.க-வினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Published:Updated:
சசிகலா புஷ்பா ( எல்.ராஜேந்திரன் )

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் கடந்த 21-ம் தேதி நடைபெற்ற கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய சசிகலா புஷ்பா, "எங்கள் தலைவர் அண்ணாமலை பேசும் மேடையில் நாங்களும் ஏறுவோம் என ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் சொல்லியிருக்கிறார். வீட்டைவிட்டு வெளியே வர கால் இருக்காது. பேச நாக்கு இருக்காது" என அமைச்சர் கீதா ஜீவனை மிரட்டும் வகையிலும், ஒருமையிலும் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க-வினர்
ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க-வினர்
எல்.ராஜேந்திரன்

இந்த நிலையில், நேற்று (22-ம் தேதி) அவரின் வீட்டில் கார், ஜன்னல் கண்ணாடி, பூந்தொட்டிகள் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தி.மு.க-வினர்தான் எனவும், அவர்களைக் கைதுசெய்ய வேண்டும் எனவும் தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் பா.ஜ.க-வினர் ஈடுபட்டனர். பின்னர் சாலை ஓரத்திலுள்ள தேவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டமும் தொடர்ந்தது.

இந்த நிலையில், காலை 11 மணிக்கு ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் மாலை 6:30 மணி வரை நடந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக 3 தி.மு.க கவுன்சிலர்கள் உட்பட 13 பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இருப்பினும் 'அவர்களைக் கைதுசெய்ய வேண்டும். இல்லாவிட்டால் அமைச்சர் கீதா ஜீவனின் வீட்டை முற்றுகையிடுவோம்' என பா.ஜ.க-வினர் போலீஸாரிடம் கூறிவிட்டுக் கலைந்தனர். ஆனால், 13 பேரில் ராமகிருஷ்ணன் என்ற கவுன்சிலர் ஒருவர் மட்டுமே கைதுசெய்யப்பட்டார்.

கீதா ஜீவன்
கீதா ஜீவன்
எல்.ராஜேந்திரன்

இந்த நிலையில், வழக்கு பதிவுசெய்யப்பட்டவர்களில் மீதமுள்ள 12 பேரையும் கைதுசெய்ய வேண்டும் என, தூத்துக்குடி போல்பேட்டையிலுள்ள பா.ஜ.க தெற்கு மாவட்ட அலுவலகத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினர் அமைச்சர் கீதா ஜீவன் இல்லத்தை முற்றுகையிட ஊர்வலமாகச் சென்றனர். 100 மீட்டர் தூரத்திலேயே பா.ஜ.க-வினரைத் தடுக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. போலீஸாருக்கும் பா.ஜ.க-வினருக்கும் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் பேரிகார்டுகளை தகர்த்த பா.ஜ.க-வினர் தூத்துக்குடி - எட்டயபுரம் மெயின் சாலையில் கூடினர்.

இதில், ஒரு பிரிவினர், தி.மு.க வடக்கு மாவட்ட அலுவலகம் முன்பாகவும், சாலையிலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் மற்றொரு பிரிவினர் ஊர்வலமாகச் சென்று அமைச்சர் கீதா ஜீவனின் இல்லத்தை முற்றுகையிடச் சென்றனர். மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் பா.ஜ.க-வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். வழக்கு பதிவுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் கைதுசெய்யப்படுவார்கள் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து பா.ஜ.க-வினர் போராட்டத்தைக் கைவிட்டனர். தொடர்ந்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 200-க்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினர் கைதுசெய்யப்பட்டனர். அமைச்சரின் இல்லத்தை பா.ஜ.க-வினர் முற்றுகையிடச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கைத் செய்யப்பட்ட பா.ஜ.க-வினர்
கைத் செய்யப்பட்ட பா.ஜ.க-வினர்
எல்.ராஜேந்திரன்

இதற்கிடையில், மேடையில் அமைச்சர் கீதா ஜீவனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தி.மு.க மாணவர் அணி வழக்கறிஞர் பிரிவின் மாவட்டச் செயலாளர் சீனிவாசன், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அதன்பேரில் சசிகலா புஷ்பா மீது 504, 505(2), 506 (1) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.